Sunday 29 November 2015



உப்புத் தின்னாதவன்.
தோட்டவேலை, இராக்கொத்து,
விடியலுக்குள் வீச்சவலை,
உப்புத் தண்ணிப் பொருக்கெல்லாம்
உடம்பெல்லாம் பூத்திருந்த
உழைப்பாளி இராமர் வந்து
வெள்ள மீசைக் கீறு போட்டு
கன்னத்தில வெட்டிவிட
முட்டிநின்ற நினைவில் மனம்
முழுமையா மூழ்கிப்போச்சு.

அறுகம்புல்லு வேர் அரிக்க
அதில வந்த மண்புழுவும்
வெட்டுப்பட்டுப் போனாலும்
இரண்டு துண்டும் வாழுதையா.

மண்ணுக்குள்ள விளைவதெல்லாம்
வாய் விழுங்கி மனித  சாதி
குத்துப்பட்டுக் குதறுப்பட்டு
மண்ணை மீண்டும்
குண்டு போட்டுக் குதறுதய்யா.         -சிவம்.

Sunday 15 November 2015


Friday 13 November 2015

உயிர்ச்சூறை" கடல் கவ்விய காவு தந்த நினைவில்
http://www.madathuvaasal.com/2015/11/blog-post.html
ஈழத்தின் போரியல் வாழ்வில் உள்ளக இடப்பெயர்விலும், புலம் பெயர்விலும் கடல் கடந்து இன்னோர் திக்கு நோக்கிய புகலிடப் பயணத்தின் நிகழ்ந்த அநர்த்தம் சொல்லும் கதைகள் அதிகம் படைப்பு வழியாகப் பேசப்படாத பொருளாக இருந்து வருகின்றன.
என்னுடைய 90 களின் வாழ்வியலில் யாழ் குடா நாட்டில் இருந்து கொழும்பு நோக்கிய நீண்ட நாட்கள் கொண்ட பயணத்தில் ஊரியான், கொம்படி, கிளாலி என்று பங்கு போட்ட கடல் நீரேரிகளில் பயணித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. இடுப்பளவு ஆழம் வரை நீரில் நடந்தே கடந்த அந்தக் கணங்களில் மேலே வல்லூறாய் வட்டமிட்டுச் சன்னங்களைத் துப்பும் ஹெலி கொப்டர்கள், அவ்ரோ, சகடை விமானங்கள் வெருட்டிக் கொண்டே வேகப் பாய்ச்சல் போடும் அந்தக் களமே தம்முடைய பயணத்தை முடிவிடமாக அமைத்துக் கொண்டோர் பலர்.
இன்னொரு புறம் தாம் பயணித்த வள்ளங்கள் மழைப் புயலில் திசை தெரியாது சிறீலங்கன் நேவிக்காறன் கையில் அகப்பட்ட கதைகளும் ஏராளம்.
சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் மன்னாரில் இருந்து தமிழகம் போன கதையைச் சொன்ன போது, தங்கள் படகு இலங்கைக் கடற்படை கையில் அகப்பட்ட வேளை, கைது செய்யப்பட்டு தமது வள்ளமோட்டியை புலிகளின் ஆள் என்று சொல்லிக் கொண்டே தம் கண் முன்னால் நேவிக்காறர் சுட்டு விட்டுத் தன் தம்பியையும் தன்னையும் அந்தக் கடலோர மணலைக் கிண்டி உடலைப் புதைக்க வைத்து விட்டு, நாள் பூராகத் தன்னையும் தன் தம்பியையும் இடுப்பளவு ஆழத்தில் மண்ணில் புதைத்து விட்டுப் போன கதையைச் சொன்னதைக் கேட்கும் போதே ஈரக் குலை நடுங்கியது. அதைப் பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் துறை நோக்கி வந்த பயணிகள் படகு இலங்கைக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டு, ஏழு மாதக் குழந்தையில் இருந்து எழுபது வயது முதியவ பெண் வரை கோடரியால் வெட்டியும் குத்தியும் தாக்கியதில் 36 பேர் அங்கேயே செத்து மடிய அந்தப் படகில் வந்த 65 பயணிகளில் மீதி படு காயங்களோடு கரையொதுங்கிய முப்பது ஆண்டுகளில் மிதக்கும் இந்த ஆண்டிலே இன்னொரு துயர வரலாறாகத் தன் 25 ஆண்டுகளை நிறைவு செய்து மிதக்கிறது அனலை தீவிலிருந்து பயணித்த இன்னொரு படகு.
1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பித்த போது பொட்டு நிலங்களாய் தெல்லுத் தெல்லாகப் பரவிய தீவக நிலங்களின் குடிகள் யாழ் நிலப் பரப்புக்கும், இந்தியாவின் தமிழகம் நோக்கியும் தம் உயிரைக் கடலுக்கு அடவு வைத்து அகதிகளாகப் பயணித்த போது தான் அனலை தீவிலிருந்து புறப்பட்ட 66 பேர் வாழ்வின் கடைசி அத்தியாயம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்.
இம்முறை இந்த அபலைகளை வஞ்சித்தது கடலின் முறை.
இன்று காலை "உயிர்ச்சூறை" என்ற காணொளிப் பாடலைப் பார்க்கிறேன்.
"1990ல் அனலை தீவில் இருந்து அனலை தீவில் இருந்து புறப்பட்ட அகதிகளின் படகொன்று கடலில் மூழ்கியதால் உயிர் நீத்த அறுபத்தாறு பேரின் 25ம் ஆண்டு நினைவுகளோடு..."
என்று ஆரம்பிக்கிறது இந்தத் துயர வரலாறை மீட்டிப் பார்க்கும் பாட்டு.
அந்த ஐந்து நிமிடப் பாட்டு இறக்கிய வலி இன்னும் என் நெஞ்சோரத்தில் இந்தப் பன்னிரண்டு மணி நேரம் கழிந்தும் அப்படியே இருக்கிறது. ஒற்றை வரியில் சொல்வதானால் இதுதான் இந்தப் பாடல் குறித்த என் அனுபவ வெளிப்பாடு.
பாடலில் தோன்றி நடித்த சகோதரன் ம.தி.சுதாவின் அந்த இறுகிப் போன முகமும், அவல கீதத்தின் வாயசைப்பும் தான் கண்ணுக்குள் நிற்கிறது. அனலை தீவில் இருந்து பாடும் உறவின் பிரதிபிம்பமே எனக்குத் தெரிகிறது.
இந்தப் படைப்பின் நோக்கம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. ம.தி.சுதா இந்தப் பாடலைத் தன் தோளில் சுமந்து செல்கிறார். அவருக்குப் போலி நடிப்புத் தேவை இல்லை இந்தப் படகு எவிபத்து நிகழ்ந்த போது பாலகனாக ஓடித் திரிந்தவர் இன்று இருபத்தைந்து வருடம் கழித்த நினைவூட்டலில் வாழ்வது செயலால் மட்டும் முடிந்த ஒன்றல்ல உணர்வும் செயலாக மாற வேண்டும்.
ஒரு இயக்குநரின் படைப்பின் தேவையை உணர்ந்து அதற்குச் செயல் வடிவம் கொடுப்பது எப்பேர்ப்பட்ட காரியம்.
கோரமாக அமுங்கி ஒலிக்கும் கடலின் ஓசை பரவ இசை அசைய ஆரம்பிக்கிறது, கடலையும் பனை மரங்களையும் உச்சத்தில் நின்று சுழற்றும் கமரா அப்படியே கீழிறங்கி "உயிர்ச்சூறை" ஒப்புவிக்கும் அந்தப் பாடகனை நோக்கி நகர்கின்றது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தம் நில புலங்களை விட்டுப் போனோரை மீள நினைக்கும் போது இருளின் சாயத்தைப் பூசிக் கொள்கிறது.
"கரும்பாறை மீது கற்றாழை நின்று பூவேந்திக் கடல் பார்த்து தொழுகின்றது" என்ற வரிகளைத் தொடும் போது அங்கே சாட்சியமாய் வரும் காட்சி, "வெறுங்கூரை மேடு மெழுகாத திண்ணை புயலோய்ந்த பின்னும் அழுகின்றது" இங்கே இன்னும் கனதியாக மொட்டைச் சுவர்களோடு வாழ்விழந்த வீடு.
படகேறும் உறவுகள் விடை பெறும் அந்தக் காட்சி வரும் போது இந்த அனுபவத்தை அந்த நாளில் சந்தித்தவர்களின் உள் காயத்தில் இருந்து கிளம்பும் வலி.
ஒளிப்பதிவுப் பணியில் துசிகரன், நிரோஷ் இன் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு மேலே சொன்ன காட்சிகளின் கருத்தாழம் தவிர வேறென்ன வெளிப்பூச்சு வேண்டும்?
இதில் துசிகரன் படத்தொகுப்பிலும் தன்னை ஈடுபடுத்திச் சிறப்பாகப் பங்களித்துள்ளார்.
"மேற்கோடு காற்றும் அழுகின்ற வேளை அந்திக்குள் பொன் கீற்று தினம் தோன்றுமா" என்று தொடங்கும் இந்தப் பாடல் அனலை சிவம் அவர்களின் வரிகளில் தேவையை உணர்ந்து தேவையானதோடு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் எழுத்துரிவிலும் ஆவணமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ம.தி.சுதா வழியாக பாட்டின் முழு வரிகளையும் வாங்கிக் கொண்டேன். பாடல் தொடங்கும் போது பாவித்த சொல்லாடல் எடுத்த எடுப்பிலேயே கனதியான சொற் பிரயோகத்தோடு தொடங்கிப் பின் இயல்புக்குள் போகிறது. இப்படியான காணொளி வடிவமெடுக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் எளிமைப்படுத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
பாடலைப் பாடிய ஹரிகாலன், மேரி மற்றும் இசையமைப்பாளர் "உயிர்ச்சூறை"யின் தொனியோடு இயங்கியிருக்கிறார்கள்.
இசை வடிவம் தந்த ப்ரியன் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையைத் தேவையோடு தொட்டுக் கொள்வதும் சிறப்பு.
உணர்வு பூர்வமான படைப்பொன்றைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாது அதை ஒருங்கிணைத்துச் செயல் வடிவம் காட்டிய இந்த "உயிர்ச் சூறை" படைப்பின் இயக்குநர் ஷாலினி சாள்ஸ் மீது ஒரு பெரிய நம்பிக்கை எழுகிறது.
"உயிர்ச் சூறை" பாடல் பரவலான கவனத்தை ஈர்க்க உழைப்பும், செய் நேர்த்தியும் இந்தப் படைப்பு வழியாக இவரால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவி விளங்கும் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தப் படைப்பு இடம் பெற வேண்டும்.
நமக்கான சினிமாவில் நம் வாழ்வியல் பேசும் கதைகளும், நிகழ்வுகளும் என்று ஏராளமாய்ப் பேசாப் பொருளாக இருக்க, துவக்கோடு கோட் சூட்டு கழுத்தில் செயின், தாதா தர்பார், என்று நம்மை வெருட்டிப் பயங் கொள்ள வைக்கும், நமக்கு அந்நியமான கதைகளில் தாவுவதை நிறுத்தி இம்மாதிரிப் பேசாப் பொருளை நம் ஈழ சினிமா என்னும் கலை வாகனமேறிப் பேசிடத் துணிவோம்.
"உயிர்ச் சூறை" பாடலோடு பயணிக்க
http://www.youtube.com/watch?v=LB8hNW-ANi4&sns=tw
பாடல் வரிகள் : அனலை சிவம்
மேற்கோடு காற்றும் அழுகின்ற வேளை
அந்திக்குள் பொன்கீற்று தினம் தோன்றுமா?
தீக்கோளப்பாறை அலை வந்து மோதி
மணலாக மனம் அங்கு உயிர் ஊன்றுமா?
வெள்ளெருக்குப் பாலுக்குள்ளே சிற்றெறும்பாய்
சொல்லுக்குள்ளே சோகம் இங்கு ஒட்டிப்போச்சு
அக்கரைக்குப் பாய் விரிச்ச அகதி ஓடம்
எக்கரையும் சேரவில்லை அமிழ்ந்து போச்சு
அறுபத்தாறு உயிர்க்கூடு கடலோடு தான்
அணையாத தீக்காடு மனதோடு தான்
கண்ணீரின் கடலில் காணாத கரையில் காலங்கள் தேடும் உயிர் ஈரமாய்
விண்ணோடு மின்னும் வெள்ளிப்பூவாக விளக்காகி நீங்கள் வெகு தூரமாய்
ஏழாற்றுக் கடலில் நிமிர்ந்தாடும் திடலே தாளாமல் நெஞ்சு கனக்கின்றது
நீர் வீசும் காற்றும் கடல் கொண்ட பேச்சும் நினைவோடு சோகம் சுமக்கின்றது
கரும்பாறை மீது கற்றாழை நின்று பூவேந்திக் கடல் பார்த்துத் தொழுகின்றது
வெறுங்கூரை வீடு மெழுகாத திண்ணை புயலோய்ந்த பின்னும் அழுகின்றது
ஒளிவார்த்த கனவோடு இருள் போர்த்த கடலில்
வழியின்றி உயிரேந்திப் படகேறினர்
கரை காணும் முன்னே காலத்தின் கையில்
கலங்கரை விளக்கில் சுடராகினர்
போர்வாளின் உறையும் கறைகொண்டதாகும்
போராடும் அலை சொல்லி அறைகின்றது
நெருப்புக்கும் இல்லை நிழல் என்ற போதும்
நினைவோடு வலிகள் கரைகின்றது
வேரோடு விழுதும் விதைக்குள்ளே தானே
இயற்கைக்கு ஏராளம் பொதுச்சூத்திரம்
கடலோடு நினைவை நீராட வைத்து
கண்ணீரில் கடல் மூழ்க நான் சாட்சியம்


Kana Praba




பதிவு செய்த நாள் : November-13-2015
  1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக மிகத் தரமான முறையில் வெளிவந்துள்ளது ஒரு பாடல்.

குறித்த பாடல்காட்சிகளை இயக்கி வெளியிட்டுள்ளார் சிறந்த பெண்கலைஞரான  ஷாலினி சார்லஸ் (Shalini Charles) என்பவர். குறித்த பெண் கலைஞர் கலைத்துறையில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் தரமிக்க கருத்துக்களுடன் கூடிய படைப்புக்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஷாலினி சார்லஸ் (Shalini Charles)
இவ்வாறான சிறந்த பாடல்களையும், குறும்படங்களையும் யாழில் இருந்து செயற்படும் ஏனைய கலைஞர்களும் கருத்தில் எடுத்து செயற்பட்டால் கலைத்துறை நிச்சயம் நல்ல நிலைக்கு வரும்.
ஒரு குறும்படம் அல்லது பாடல்கள் எடுப்பது என்பது எவ்வளவு நுட்பமானதும் சிரமம் மிக்கதும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
'உயிர்சூறை' பாடல் குறித்து, உலக அறிவிப்பாளர் பி .எச் அப்துல் ஹமீத் அவர்களின் கருத்து...!!!

"நம் மண்ணில் நிகழ்ந்த ஆயிரமாயிரம் துயரக்கதைகள் மத்தியில், ஆழிக்குள் சங்கமமாய்ப் போன, அனலைதீவுச் சொந்தங்களின் கதையை, அழியாத கோலமாய், துயரம் தோய்ந்த வரிகளிலும், உள்ளத்தை உருக்கும் குரல் ஒலியியிலும், நெஞ்சை நெகிழவைக்கும் இசையிலும் உருவாக்கி, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடும், நிபுணத்துவத் திறமையோடும், ஒரு காலச்சுவடாய்க் காட்சி வடிவமாக்கிய அனைவருக்கும் நன்றி. இனி.. அந்தமண்ணில் வளரும் தலைமுறைக்கு நம்பிக்கை ஒளியூட்டும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார்.
இதோ.... அந்தச் 'உயிர்ச்சூறை' காணொளி வடிவில்.....
 நன்றி.http://indosri.com

https://www.youtube.com/watch?v=LB8hNW-ANi4


Sunday 8 November 2015

UYIRCHCHOORAI Official Music Video




1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக படைக்கப்பட்ட இப்பாடலை மக்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இப்பாடலை அதன் வலிகளை முழுமையாக உணர்ந்து படைப்பாக்கி உதவிய Yarl Entertainment குழுமத்திற்கு எமது அனலை மக்கள் அனைவரின் சார்பாகவும் நெஞ்சார்நத நன்றிகள்.இப்பாடலுக்காக Yarl Entertainment குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பாடலில் Keyboard  வாசித்திருக்கும் திரு.வே.சரவணபவன் அண்ணா அவர்களுக்கு முதற்கண் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அனலை சிவத்தின் பாடல் வரிகளுக்கு  இசைவார்த்து மெருகூட்டிய இசையமைப்பாளர் திரு.பிரியன், குரலால் வளப்படுத்திய பாடகர் திரு.கரிகாலன், வலி நிறைந்த வரலாற்று நிழலை வெளிச்சப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் திரு.துஷிகரன் மற்றும் திரு.நிரோஷ், திரையில் சோகத்தை தோற்றப்படுத்தியிருக்கும் திரு.மதிசுதா, பாடலின் எல்லா வடிவங்களையும் நேர்த்தியாக நெறிப்படுத்தியிருக்கும் திருமதி.ஷாலினி சாள்ஸ் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் அனலை மக்கள் அனைவரின் சார்பில் எமது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்பாடலின் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்த திரு.அ.பாலசிங்கம் அவர்கள் திரு.சி.சௌந்தரராஜன் அவர்கள் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.தளத்தில் எமக்கு உதவிய அனலைதீவு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக  நிர்மலன்,தர்சிகன், இரத்தினசபாபதி, நிலா ,ஜெயந்தன்,தனேஸ் , ஆகியோருக்கும் அனலை மக்கள்
சார்பில் எமது மனம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

விமர்சனங்கள் புதிய படைப்புகளின் முழுமைக்கான அத்திவாரம். விமர்சியுங்கள். நன்றி.

அனலைதீவு அறநெறி.

UYIRCHCHOORAI Official Music Video


1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக படைக்கப்பட்ட இப்பாடலை மக்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இப்பாடலுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் எமக்கு உதவிய அனலைதீவு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக நிர்மலன்,தர்சிகன்,இரத்தினசபாபதி,நிலா ,ஜெயந்தன்,தனேஸ் , ஆகியோருக்கும்
Yarl Entertainment குழுமம் சார்பில் எமது மனம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Singers - Harikalan, Mary
Music - Priyan
Lyrics - Analai Sivam
Cast - MaThi Sutha
Cinematography - Thusikaran, Nirosh
Editing - S.R. thusikaran
Direction - Shalini Charles
Yarl Entertainment