Monday 31 August 2020

முகம் பார்.

 சூரிய வெளிச்சத்துள் புகுந்துகொள்.
 நிறங்களாய்ப் பிரிந்து போ.
திரைந்து  
இலைகளுக்குள்  பச்சையமாக
 இறுகி
 பூக்களாக வெளியில் வா.
விதையாகு.                                                         
வீரியப்படு.
முளைவிடு.
விருட்சமாகி  வெளிச்சம்  வாங்கு.
உனக்குள் உன்னைத்தாங்கு.
வாழ்க்கை உருசிக்கும்.

சுற்றிப் பாலைவனமென்றால்
 புற்தரையாக விரித்துப்போடு
 உன்னை.


கடலுக்குள்
முகம் பார்க்கும்
 வானத்தை
 கண்ணுக்குள் சிறைப்படுத்து.
 மேகமாகி மண்ணில் விழு.
 ஒவ்வொரு துளிப்பொழுதிலும்
உன் பெயரெழுது.
வாழ்க்கை
உணர்ச்சிகளின்  நாட்குறிப்பு.
எழுது.
வாசி.
வார்த்தையில் கஞ்சனாகு.
கவிதையில்  வள்ளலாகு.
வாழப்பழகு.
வாழ்க்கை உருசிக்கும். 
                                              மு.கு.சிவசோதி.
                                              January 9,1999.

 

Sunday 30 August 2020

 

மதங்களை வீட்டுக்குள்ளேயே விட்டுவிடுங்கள்.

வெளியில் வரும்போது இந்தியனாக இருங்கள்.

உலகத்தைப் பார்க்கும்போது மனிதனாக இருங்கள்.

-உயர்திரு.குன்றக்குடி அடிகளார்.

Sunday 23 August 2020

அழியாத வரம்பு.

அழியாத வரம்புகளுக்குட்பட்ட 

வாழ்க்கை வெளியில் 

கொத்தித்தின்னும் 

ஞாபகக் குருவிகளுக்கான 

 நினைவுத்தானியங்கள் 

மனப்புதர்களின் உள்மடியில் 

இன்னும் 

ஒளிந்துதான் கிடக்கின்றன.

 

நிழலும் நிலமும்.

சுடுமணல் தாங்காப் பாதம்
மரமில்லையென்றால் வேகும்.
புத்திக்கும் பக்திக்கும் விதை போடு.
புத்திக்குள் வளரும் பெரும் காடு.
மூச்சுக்கும் காற்றுக்கும் மரம் வேண்டும்.
மனதுக்கும் மரமொன்று நடவேண்டும்.
சுற்றிக் கடல் சூழ்ந்திருக்கும் பூமியிது
ஆழக்கடல் அள்ளிச் செய்த சாமியிது.
பச்சிலையைக் கட்டிக் கொஞ்சம் ஆறவிடு.
பாலாற்றில் தேன் சுனையா ஓடவிடு.
மரங்களை நீ நட்டுவைச்சா
பேரப்பிள்ளை நிழல் குடிப்பான்.
மரங்களை நீ சாய்த்து விட்டா
உன் பிள்ளை மூச்சடைப்பான்.
கடலும்தான் தன் மடியில்
மரத்தோட்டம் வைச்சிருக்கு.
காவலுக்கு கரையை வைத்து
உன் நிலத்தைச் தைச்சிருக்கு.
கடற்காத்து மேச்சலுக்கு
இலை பார்த்து மரத்தை நடு.
காலம் உன்னை மேயும் முன்னே
ஆழம் பார்த்து வேரை விடு.
உன்னைச் சுமக்கும் மண்ணுக்கு
ஒரு மரமேனும் நட்டுவிடு.
மண்ணைச் சுமக்கும் மரத்திற்கு
உயிரைத் துளியாய் விட்டுவிடு.
- சிவம்.

 

Friday 14 August 2020

 

 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி,

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

-மகாகவி பாரதியார்.

Saturday 1 August 2020





காற்றினில் ஒரு தீபம்.
பாடல் வரிகள், குரல்: அமுதா நமசிவாயம்.