Monday 22 June 2015

வேண்டுகோள்!



வேண்டுகோள்!
மதிப்புமிக்க அனலைதீவு மக்களுக்கு காலமும் இயற்கையும் நிர்ப்பந்திக்கும் அதிமுக்கியமானதாக  மாறிவரும் மனிதனின் இயற்கை வளம் பேணல் என்பதில் நம்மவரின் கனிவான பங்களிப்பிற்கான  பணிவார்ந்த வேண்டுகோளொன்றை பணிவுடன் முன்வைக்கின்றோம்.
இவ்வருட  அனலைதீவு ஐயனார் கோவில் திருவிழாவிற்கு ஊருக்குப் போகும் ஒவ்வொருவரும் தயைகூர்ந்து உங்கள் கரங்களாலேயே ஏதாவது ஒரு மரமாவது உங்கள் திருமண்ணில் நட்டுவிட்டு பராமரிப்பிற்கு ஒழுங்கு செய்துவிட்டு வாருங்கள். பராமரிப்பு ஒழுங்கில்லாமல் மரம் நடுவதில் பயனேதுமில்லை. உங்கள் காணிகளில் தென்னைகள்,பனைகள் முதிர்ந்திருக்கும். புதிய தென்னைகளை, பனைகளை  நட்டுவையுங்கள். உங்கள் கைகளால் நடுவதால் ஒருகாலத்தில் உங்கள் பெயரில் அடுத்த சந்ததி பயனுறும்.  ஊர் வளம் பெறும்.
பனைமரங்கள் ஊரின் நீர் ஊற்றின் செழுமையை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றும்.
தயவுசெய்து இந்த நற்செயலை தவிர்க்காமலும் மனமுவந்தும் செய்யுங்கள்.
இயற்கையும் இறைவனும் ஒன்றெனில் இறைவனோடு இயற்கையையும் போற்றுவதும், துதிப்பதும், பாதுகாப்பதும் நமது கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது என்பதை ஏற்கும் அனைவரும் தயவுசெய்து உங்கள் கரங்களால்  உங்கள் மண்ணில் மரங்களை நட்டு பராமரிப்பிற்கு ஒழுங்குசெய்துவிட்டு வாருங்கள். வருங்காலச் சந்ததி உங்களை நெஞ்சார்ந்து போற்றும்.
இப்பதிவினை தங்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொள்ளும் அன்புக்குரியவர்கள்  பகிர்வதன் மூலம் ஒரு மரம் நட்டுவைப்பதற்கான பங்கை முழுமை செய்தவர்களாக மனநிறைவுற  நிறைய வாயப்பகள் உண்டு.
 ஒரு பகிர்தல் என்பது ஒரு மரத்தை ஊரில் நடுவதாக மாறவேண்டும்.
தயவு செய்து நமது சிறிய பங்கை நிறைவேற்றுவோம் முன்வாருங்கள்.
ஒரு பகிர்வு  =    ஊரில் ஒரு மரம்.
மனமார்ந்த நன்றிகள்.

Friday 19 June 2015

வெடுக்கு.



அழகாய்ப் பூச்சொரிகிறதே ஆச்சரியப் பூப்பந்தல்.
முற்றத்திலே மூன்று பக்கம் நட்டுவைத்த செவ்வரத்தை.
தெற்குப்பக்கம் பந்தல்மேலே கொட்டிவைத்த மல்லிகைப் பூ
பக்கத்திலே முச்சந்திக்  கிளைவிட்டு முழுமரமும் தேமாப் பூ.
வருபவர்கள் வாசிக்கும் கைக்கூவாய் ஒற்றைப் பனை.
ஆச்சரியம் சொரிகிறதே அழகான பூப்பந்தல்.

பூவை விட்டு வாசம் பறிக்கும் பூங்காற்று
மடி நிறைய மடித்துவைத்து ஊர் முழுக்க ஊட்டிவிடும்.

வடக்குப்  பக்கக்
கிடுகுக் கூரைக் குசினியிலும்
மேற்குப்பக்கத் தாழ்வாரத்தில் சொருகிவைத்த அலுமினியத்தட்டை கிழக்குப்பக்கத்தில் மாற்றிவைக்கவா இத்தனை ஆண்டுகள்?

முற்றம் அழகு.
பூக்கள் அழகு.
இதமான காற்றும் பொதுவாக.

இன்னும்
வெடுக்குச் சொருகிய தாழ்வாரங்களாய்
மனிதர்கள்.      


சிவம்.                                                                              


Friday 12 June 2015

மனக்கிளி.



பறக்கும் வானவில்லாய்ப் பச்சைக்கிளி.
கண்ணில் மட்டும் நான்கு நிறம்.
நனைந்த பனையாய் மனது இருண்டால்
இந்தக்கிளியைப் பறக்க விடுங்கள்
செந்நிற வாய் திறந்து இருள் விழுங்கி
ஒளி பீச்சும்.
வானம் வெளுக்கும்.

பனம்பொந்துக்குள் விழுந்துகிடக்கும்
பழைய நினைவுகளை இந்தப் பச்சைக்கிளி கொத்துகிறது.

பனங்காட்டுப் பறவைக்கு
கழுத்தில் கறுப்பு வளையம் யார் போட்டது?
கருமேகத்தைத் துளைத்துப் பறந்ததன் அடையாளமோ?

பட்டுப்போனபின்பும்
பனை
பறவைக்குக் கூடு.

மரம் நட்டுவைக்க நேரமில்லா மனிதா
மூச்சுக்காற்றை வேற்றுக்கிரகமேறித் தேடுகிறாய்.


பூமி அடிக்கடி விழிக்கிறது.
உயிர்கள் கண் மூடுகின்றன.

விழித்துக்கொள்.
                                         -சிவம்.

படங்கள்: திரு.க.உதயப்பிரகாஸ்