Friday 29 May 2015

அந்திவானம்.

 தீக்குழம்பு குளிர்ந்து இன்னும் கருக்கு மழுங்காத மேற்குக்கரைப் பாறையில் அமர்ந்து அன்றொரு காலம் என் கண்கள் விழுங்கி இன்னும் நெஞ்சாங்கூட்டுக்குள் சிக்கிக்கிடக்கும் சூரியனார் மேகத்துயிலுடுக்கும் மேற்குக்கரை அந்திவானம்.
இந்த ஒளி உண்டியலுக்குள் விழுந்த நம் உயிர்களை இன்று தவணைமுறையில் உயிர்ப்பித்துப் பார்க்கிறோம்.
படங்கள்: திரு.க..உதயப்பிரகாஷ்.







Wednesday 27 May 2015



நம்ம ஊரு வானவில்லு.



பனையில தொங்கிற வானவில்லை
பார்க்கிற மனசில கவலையில்லை
கனக்கிற மனசில தூக்கிவைச்சா
பாரம் குறையுது இயற்கையில.



வானம் சிரிச்சா ஏழு நிறம்
பூமி சிரிச்சா  பச்சை நிறம்
மேகம் சிரிச்சா வெள்ளம் வரும்
மரங்கள் சிரிச்சா மூச்சுத்தரும்
கடல் நீர் சிரித்தால் அலைகள் வரும்
கரைகள் சிரித்தால் மணலைத்தரும்
வயல்கள் சிரித்தால் விளைச்சல் தரும்
பள்ளி சிரித்தால் கல்வி வரும்
கல்வி சிரித்தால் மாத்திரமே வாழ்வு வரும்.

படங்கள்: திரு.க. உதயப்பிரகாஷ்.

Tuesday 26 May 2015


வடமாகாணத்தை அச்சுறுத்துகின்றது ஓர் உயிர்கொல்லி – CKDu
- இனியன் இராசையா
முப்பத்துக் காலப் போரினால் சிதைந்து “நாம் மீளுவோம்” என்ற முனைப்புடன் எழும் வடமாகணத்து மக்களுக்கு “இதென்னை! இன்னோர் பேரிடி” என எண்ணத் தோன்றும். CKDஇந்த இடி இயற்கையால் எம்மீது ஏற்படுத்துகின்றதொன்றல்ல, எங்களின் கவனக் குறைவால் ஏற்படும் இடர். நாட்பட்ட சிறுநீரக வியாதி - தோற்றுவாயற்றது (Chronic Kidney Disease – unknown origin) பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோயினை ஆரம்பத்தில் அறியமுடியாததாகவும் நீண்ட காலத்தின் பின்னர் அதன் தீவிரம் அதிகரிக்கும்போது அது அறியப்படக்கூடியதுமாகவிருப்பின் அது நாள்பட்ட நோய (Chronic Disease) எனப்படுகிறது. எமது உடலுக்கு அந்நியமான பதார்த்தங்கள், தேவையற்ற நச்சுப் பதார்த்தங்களபோன்றவற்றை வெளியேற்றும் உறுப்பு சிறுநீரகம். ஒரு சிறுநீரகத்தில் 10-15 இலட்சம் வரையான வடிகட்டும் அலகுகளான சிறுநீரகத்திகள் (Nephrons) காணப்படுகின்றன. இச் சிறுநீரகத்திகள் நீரிழிவு, உயர்குருதியமுக்கம், பாம்புக்கடி போன்ற நோய்களாலும் நச்சுப் பதார்த்தங்களாலும் அமைப்பழிவடைகின்றன. படிப்படியாக சிறுநீரகத்திகள் இழக்கப்படும்போது ஒரு நிலையில் சிறுநீரகத்தின் தொழிற்பாடு தடைப்படுகின்றது. இதனால் நச்சுப்பதார்த்தங்கள் உடலில் தேங்குவதனால் உடலுறுப்புகள் படிப்படியாகச் செயலிழந்து இறுதியில் இறப்பு நேரிடுகிறது. நீண்டகாலங்களின் பின்னே இந்தச் சிறுநீரக நோய் அறியப்படுவதனால் இதை நாட்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease) CKD என அழைக்கப்படுகிறது.  
நீரிழிவு, உயர்குருதியமுக்கம், பாம்புக்கடி போன்ற நோய்கள் ஏற்படும் ஒருவருக்கு CKD தோன்றும் அபாயம் இருப்பதனால் இவர்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பதன் மூலம் இந்நோயைப் பிற்போடுவதோ அல்லது அதன் தீவிரத்தைக் குறைப்பதோ சாத்தியமாயுள்ளது. மேலே கூறப்பட்ட நீரிழிவுநோய் போன்ற தோற்றுவாய் எதுவுமில்லாதவிடத்தும் பல இடங்களில் CKD ஓர் புதிராக தோன்றி இருக்கின்றது. இதையே நாட்பட்ட சிறுநீரக வியாதி தோற்றுவாயற்றது (Chronic Kidney Disease – unknown) CKDu  எனப்படுகிறது. உலகையே உலுக்குகின்ற முக்கிய உயிர்கொல்லிகளில் CKDuவும் ஒன்று. மத்திய அமெரிக்க நாடுகளான எல்சல்வடோர், கொஸ்ராரிகா, நிக்கரகுவா, குவாதமாலா, கொண்டுராஸ், பனாமா, மெச்சிக்கோ போன்றவற்றிலும் எகிப்து, ரிய+னிசியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் தென் கிழக்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வியட்னாம் போன்றவற்றிலும் CKDu மிகத் தீவிரமான உயிர்கொல்லியாக அறியப்பட்டுள்ளது.  
1998ம் ஆண்டு இலங்கையில் வடமத்தியமாகாணத்தின் பதவியா பிரதேசத்தில் முதன் முதலாக தோன்றிய இந்நோய் வடமத்திய, மத்திய மாகாணங்களினூடு தென்மாகாணம் வரை இன்று பரவியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக பதுளை (22.9%), பொலனறுவை (20.6%), அனுராதபுரம் (15.1%) ஆகியன காணப்படுகின்றன. பாதிப்புக்குள்ளான நாடுகளாயினும் சரி, பிரதேசங்களாயினும் சரி இவை யாவும் விவசாய பூமிகளே. அத்துடன் இப்பிரதேசங்களில் கட்டுப்பாடற்ற உரவகை, இரசாயனப் பதார்த்தங்களின் பாவனை உள்ளது. இரசாயனப் பதார்த்தங்களின் பக்கவிளைவுகள் பற்றிய சிரத்தை இவ்விடங்களில் இல்லை, அல்லது மிகக் குறைவு எனலாம். விவசாயிகளையும் விவசாய நிலங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் நிலத்தடி நீரைப் பருகுபவர்களிடமுமே பெரும்பாலும் இந்நோய் அறியப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள் விவசாயப் பிரதேசங்கள் என்பதோடு இங்குள்ள நீர் வன்னீராகக் காணப்படுவதும் தெளிவாகியுள்ளது.
வன்னீரில் கல்சியம், மகனீசியம் போன்ற உலோக அயன்கள் செறிவாகவுள்ளன. இவை போன்ற பார உலோகங்கள் மலிவான உரங்களிலும் காணப்படுகின்றன. உலகின் முன்னணிக் களை கொல்லியான ‘ரவுன்ட் அப்’ இல் காணப்படும் கிளைபோசேற்று (glyphosate) பார உலோக அயன்களுடன் இலகுவில் சேர்ந்து நச்சுத்தன்மையானதும் வடிகட்டப்படமுடியாததுமான சிக்கல் சேர்வைகளைத் தோற்றுவிக்கின்றது. இச் சிக்கல் சேர்வைகளே CKDu இற்கு காரணமாகயிருக்கலாம் என்பதற்கு பல ஆய்வுகள் சான்றாக இருக்கின்றன. இலங்கையில் CKDu பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்பவரும் சர்வதேச விஞ்ஞானிகளால் மிகவும் அறியப்பட்டவருமான கலாநிதி ஜயசுமண அவர்களின் ஆய்வுப் பெறுபேறுகளும் இவற்றை எடுத்தியம்புகின்றன. இவரது ஆய்வுகள் பற்றி ‘இயற்கை (Nature) ’ போன்ற தலை சிறந்த விஞ்ஞான சஞ்சிகைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.   
CKDuஇன் தாக்கம் பெண்களைவிட ஆண்களில் 2-5 மடங்கு அதிகமாகக் காணfarmerப்படுகின்றது. விவசாயம் செய்யும் ஆண்கள் சுயபாதுகாப்பு கருவிகள் (; (Personal Protective Equipments) இல்லாமல் நீண்டநேரம் கிருமிநாசினிகள், பூச்சிநாசினிகள் போன்றவற்றை விசிறுதல் ஆண்களில் கூடிய தாக்கத்துக்கு காரணமாய் அமையலாம். இரசாயனப் பதார்த்தங்களை விசிறும்போது குறைவான நீருட்கொள்ளலும் வெய்யிலின் நிமித்தமுண்டாகும் நீரிழிப்பும் (dehydration) இப்பதார்த்தங்கள் தோலினூடாக ஊடுருவுவதைச் சுலபமாக்குகின்றது. இந்நோயாளிகளின் நகம், மயிர் போன்றவற்றில் இப்பதார்த்தங்களின் தேக்கம் அறியப்பட்டுள்ளன.   
நோயின் பரம்பலைக் கருதிக் கொண்டால்  விவசாய நிலங்களையும் வன்னீரையும் கொண்ட வடமாகாணத்திலும் இதன் தீவிரம் இருந்திருக்க வேண்டும். போர்க்காலங்களில் வடமாகாணத்தில் விவசாய இரசாயனப் பதார்த்தங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை யாமறிந்ததே. இது 2009ம் ஆண்டுவரை நீடித்திருந்ததால் இரசாயனப் பதார்த்தங்களின் பாதிப்பு இங்கு பிற்போடப்பட்டுள்ளது. இது நாட்பட்ட நோயாக இருப்பதால் இது பற்றிய கவனம் இங்கு இன்னமும் உணரப்படவில்லை. இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் Ckduஉயிர்க்காவுகையைத் தொடங்கியுள்ளது. பதவியாவில் தொற்றுகைக்குட்பட்ட நீர் முல்லைத்தீவை அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அவதானிக்கப்பட வேண்டியது.
ராஜரட்டைப் பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் சுகாதார அமைச்சின் சிறுநீரக நோய் தடுப்பு பிரிவின் இயக்குனரும் ஆய்வாளருமான வைத்திய கலாநிதி ஜெயசுமண அவர்கள் வடமாகாணத்துக்கு இந்நோய் பரவக்கூடிய அபாயத்தைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்தில்  CKDu பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நிகழ்த்தத் தானாக முன்வந்தார். கடந்த 14.05.2015 அன்று யாழ்/நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில் DFCC வங்கி, நல்லூர் றோட்டரிக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனம் (JMF) CKDu பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்தது. இந்த நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடாதிபதி கலாநிதி பாலகுமார் அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்துவதற்கு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்றுமுன்தான் கேட்கப்பட்டிருந்தார். எவ்வித சம்பிரதாயமுமின்றி அறிமுக உரையை விரிவுரையாகத் தந்தமை அவரின் திறமைக்கும் பெருந்தன்மைக்கும் அடையாளம்.
 யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ பீடத்தின் சமூக வைத்தியத் துறையின் தலைவர் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமார் அவர்கள் இக் கருத்தரங்குக்கு தலமை தாங்கியது மட்டுமல்லாது நாட்பட்ட சிறுநீராக வியாதி CKDu பற்றிய ஒரு நல்ல கருத்துரையையும் வழங்கியிருந்தார். அத்துடன் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்நிகழ்ச்சியை திறம்பட நடாத்தியதோடு தமிழ் தெரியாத சிறப்புப் பேச்சாளரின் ஆங்கில உரையையும் தமிழில் மொழிபெயர்த்தும் சிறப்பித்தார். இந்தக் கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளரான கலாநிதி ஜனசுமண அவர்கள் பல புள்ளிவிபரங்களுடன் விரிவானதும் தெளிவானதுமான உரையைத் தந்தது மட்டுமன்றி கருத்தரங்கு சம்பந்தமான பல கேள்விகளுக்கும் அதற்கப்பாற்பட்ட கேள்விகளுக்கும் நேர்த்தியான பதில்களை வழங்கி கருத்தரங்கை ஊட்டமுள்ளதாக்கியிருந்தார். நீண்ட தொலைவிலிருந்து நம் மக்களில் அக்கறை கொண்டு, தானாக முன்வந்து இந்தச் சிறந்த கருத்தரங்கை வழங்கியமை பாராட்டுக்கும் மேலானது. இந்தக் கருத்தரங்கின் சுருக்கமானதும் எழிமையானதுமான தொகுப்பே இக் கட்டுரையாகும். இக் கருத்தரங்கு வைத்தியத்துறை, பொருளாதரத்துறை, பொறியியற்துறை போன்ற துறைசார் வல்லுனர்களுடன் அதிகளவு முன்னணி விவசாயிகள் கலந்துகொண்டு கருத்துப் பரிமாறியமை சிறப்பம்சமாகும்.  
வடமாகாணத்தை அச்சுறுத்துகின்ற இந்த உயிர்கொல்லியைப் பற்றி அறிந்திருத்தல் அதாவது அது பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருத்தல் இதைத் தடுப்பதற்கான முதற்கட்டமாகும். கட்டுப்பாடான இரசாயனப் பதார்த்தங்களின் பாவனை இன்றைய விவசாயத்தில் தவிர்க்க முடியாததாக இருப்பினும் கூடுதலாக இயற்கையான சேதனப் பதார்த்தங்களின் பாவனையை இக் கருத்தரங்கு வலியுறுத்தியது. விவசாயப் பெருமக்களும் இக் கருத்துக்கு ஆதரவு வழங்கினர். இக்கட்டுரை வரையப்படும்போது கிளைபோசேற்றுக்கு இலங்கை அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்ல தரமான குடிநீரை அருந்துவதன் மூலமும்       கட்டு;ப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையும் அச்சுறுத்தும் CKDu ஐ வடமாகாணத்துக்கு அனுமதிக்காது தடுக்கும் காப்பு நடவடிக்கைகளாகும். இது பற்றி தொடர்ச்சியான கருத்தரங்குகள் பலமட்டங்களிலும் மேற்கொண்டு எல்லா மக்களுக்கும்  CKDu பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பதன் மூலம் வடமாகாண மக்கள் ‘வருமுன் காப்பவர்கள்’ ஆகட்டும்.    

http://www.thenee.com

Monday 25 May 2015

தீபன்
ஈழத்தமிழ் அகதிகளின் கதை.
.
பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய “தீபன்” திரைப்படம் dheeebanஇன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.

புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் “தீபன்” என்று பரவலாக பார்க்கப்படுகிறது.

கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீபன் திரைப்படத்தின் கதாநாயகி காளீஸ்வரியும் குழந்தை நட்சத்திரமும்
தீபன் திரைப்படத்தின் கதாநாயகி காளீஸ்வரியும் குழந்தை நட்சத்திரமும்

இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நன்றி: பிபிசி

Thursday 21 May 2015

 பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?
ஞானசக்தி-ஸ்ரீதரன்
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா குரூரமான பாலியல்  பலாத்காரப் பலாGnasakthi sritharanத்காரப்படுகொலைக்கு  யாழ் குடாநாடு மற்றும் வடக்கு கிழக்கில் மக்கள் கொந்தளிப்பும் கோபமுமான உணர்வுகளை வெளிப்படுத்தி  வருகிறார்கள்.
இந்த பாலியல் பலாத்கார படுகொலை புரிந்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்குவது –மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு தமது ஆதரைவைத் தெரிவிப்பதும், இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதும் இந்த வெகுஜன நடவடிக்கைகளினூடாக வலியுறுத்தப்படுகின்றன.
நாகரிகமான கண்ணியமான சுதந்திரமமான வாழ்வு   தொடர்பான தாக்கமான பிரதிபலிப்புக்களாக அவை வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் தன்னியல்பாக -சுயாதீனமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இம் மக்களின் எழுச்சிகள் நம்பிக்கை அளிப்பனவாக அமைகின்றன.
இதுபோன்ற கொடுமைகள்  இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
இந்த எழுச்சி இவற்றுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையாக அமையலாம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக பாரிய எழுச்சி சமகாலத்தில் இப்போதுதான் முதன் முதலாக நிகழ்கிறது.
இந்த பாலியல் வன்கொடுமை பற்றி வக்கிரமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்?? தமிழில் எண்ணுக்கணக்கற்று இருக்கின்றன.
இவை அன்றாடம் பாலியல் பலாத்காரம் புரிந்து கொண்டிருக்கின்றன. இந்த கிறிமினல் ஊடகங்கள் தடைசெய்யப்படுவதும் இந்த வக்கிரப்பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்படுவதும் சிரமமானதெனினும் முக்கியமான பணியாகும்.
பாதிப்பட்டவர்களின் நிழல் படங்களை வக்கிரமாக பிரசுரிப்பது செய்திகளை அதே விதமாக எழுதுவது. சமூக இணையத்தளங்களில் பரவிவிரும் இந்த விசக்கிருமிகளிடமிருந்து சமூக அற உணர்வுகள் பாதுகாக்கப்படவேண்டும்.
2013 இல் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் படுகொலைக்கு நீதி  கோரி நிகழ்ந்த வெகுஜன எழுச்சியில் அந்த மாணவியின் நிழல் படங்கள் ஊடகங்களில் துஸ்பிரயோகம்செய்யப்படவில்லை.
பாதிக்கபட்ட மாணவியின் குடும்பத்தினதும் - ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் கண்ணியத்தை காக்கும் விதமாக ஊடக செயற்பாடுகள்  அமைய வேண்டும்.
தவிர இந்த பாலியல் வன்கொடுமைக்கெதிராக மக்களின் எழுச்சியை தமக்கு சாதகமாகபாவிக்க  சமூக விரோத சக்திகள் முயல்வதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த வெகுஜன எதிர்ப்பியக்கம்; தொடரவேண்டியிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை படுகொலைகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடப்பாடு மத்திய அரசு -மாகாண அரசு- உள்ள+ராட்சி சபைகள் -பொலிசாருக்கு இருக்கிறது.
ஒருங்கிணைந்து மக்களின் பாதுகாப்பில் அக்றை செலுத்தி செயற்படவேண்டும்.
பொலிஸ்-பிரசைகள் குழுக்கள் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
பொலிசிலும் பெண்களின் நலன் சார்ந்து தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவேண்டும்.
பெண்களுக்கு குடும்பத்தில் சழுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய போதிய அறிவும் பயிற்சியும்  அவர்களுக்கு இருக்கவேண்டும்.

அவசர தொலைபேசி  அழைப்புக்களுக்கான இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். அவை 24 மணி நேரசெயற்பட்டில் இருக்க வேண்டும்.
வன்முறை மயப்பட்ட சீரழிந்த பிரிவொன்று சமூகத்தில் உருவாகியிருக்கிறது.
இது வெற்றிடத்தில இருந்து வரவில்லை.
சமூகத்தில் பயத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரம் மிக்க சக்திகள்  வேண்டும் என்று அரசியல்வாதிகள் அமைச்சர்கள் முதல் பாமரர்கள் வரை பேசுகிறார்கள்.
ஆண்பெண் சமத்துவம் நிலவும் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பு ஓரளவேனும் உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளில்    அச்சுறுத்துவதற்கென்று அதிகாரசக்திகள் என்று எவரும் இல்லை.
ஐரோப்பா வடஅமெரிக்க நாடுகளில் இதனை நாம் அவதானிக்கமுடியும்.
நம்மை ஆழ்வதற்கு சமுதாயத்தில் பீதி ஏற்படுத்தும்  அதிகார சக்திகள் தேவை என்று கூறுவது ஜனநாயக விரோதமானதாகும்.
இதில் பாசாங்கும் இருக்கிறது.
இடையறாத பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் சமூக மாற்ற இயக்கங்களினாலேயே மாறுதலைக் கொண்டுவரமுடியும்.
பண்பாடு கலாச்சாரத்தின் பெயரில் வக்கிரமே எமது சமூகத்தில் ஆதிக்கம் புரிகிறது. இந்த மாணவியின் மீது பாலியல் வன்முறை புரிந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடையவைக்கிறது. இது இந்த சமூகத்தில் நிலவும் வக்கிரத்திற்கும் ,குரூரத்திற்கும், ஆசாடபூதித்தனத்திற்கும் சான்று.
மாணவி வித்தியாவிற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
அது எமது சமுதாயத்தில் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பிற்குமான திறவுகோலாக அமைய வேண்டும்.
நாடளவிய அளவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமைகளை மறுதலிக்கும் நுகர்வு பண்டமாக கருதும் போக்கு ஒரு வழமையாகியிருக்கிறது.
எனவே இதன் முக்கியத்துவம் கருதி
பெண்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து பிரத்தியேகமாக உருவாக்கப்படவேண்டும். யாப்பு ரீதியாகவும் நடைமுறையிலும் உறுதிப்படுத்தப்படவேண்டு;ம்
 பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான இயக்கம் இடையறாது முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
ஞானசக்தி-ஸ்ரீதரன்

Tuesday 12 May 2015

கங்குமட்டை காலில் கட்டி
காரமுள்ளு வெட்டிவிட்டு
காட்டுமண்ணில் வளருமென்று
நாற்றுமேடை போட்டுவைக்க
கருக்குமட்டை கொண்டுவந்து
வளிச்சு அழிச்ச வம்புலகம்
எந்த மண்ணில் இருந்தாலும்
இன்னும் நம்மில் வாழுதையா.

                                                              சிவம்.

Thursday 7 May 2015

நிலாவரைக் கிணற்றை ஜீவநதியென எண்ணுவது அறிவியல் சார்ந்த எண்ணம் அன்று.

நிலாவரைக்கிணறு வற்றாத ஜீவநதியா?
- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
யாழ்ப்பாணக்குடாநாட்டு நிலத்தடி நீர்வளத்தை அவை மாசடையாத வரை மிsivachandran.Rகையான பாவனையால் அவை உவர்நீராக மாறாது இருக்கும்வரை பயன்படுத்த முடியும். இன்றைய யதார்த்த நிலை நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை. சிலர் வற்றாத நீர் ஊற்றான நிலாவரரைக் கிணற்றில் இருந்து குடாநாட்டிற்கு நீரைப் பெறலாமே எனக் கூறுகின்றார்கள். அரசியலில் செல்வாக்குப் பெற்று கொள்கை வகுப்பாளர்களாக உள்ளவர்கள் இவ்வாறு கருத்துச் சொல்லும் போது குடாநாட்டின் எதிர்கால நீர் விநியோகம் பற்றி அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. விஞ்ஞான முடிவுகளுக்கு அப்பாற்பட்ட பாரம்பரியக் கதைகளை நம்பி எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்டினால் எமது சந்ததியின் எதிர்காலம் என்னாவது?

எனவே நிலாவரைக்கிணற்றின் உருவாக்கம் அதனுள் காணப்படும் நீர்வளம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

யாழ்குடாநாட்டில் புத்தூரில் அமைந்துள்ள நிலாவரைக் கிணறு பற்றி எமது மக்களிடையே பாரம்பரியக் கதைகள் பல வழக்கிலுள்ளன. ஆழங்காண முடியாதது,   நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம்பழம் ஒன்றைப் போட்டால் கீரிமலைக் கேணியில் வந்து மிதக்கும், வற்றாத ஜீவநதி இது என்பதாக கதைகள் பல உண்டு. அக்கால மக்கள் தம் பட்டறிவால் பெற்ற சில உண்மைகளை அல்லது தகவல்களை மிகைப்படுத்தி அல்லது திரிவுபடுத்தி இவ்வாறு வழிவழியாக பேசப்பட்டு வருகின்றன. நிலாவரைக் கிணறு பற்றிப் புவிச்சரித விஞ்ஞான விளக்கத்தை தர முயல்கின்றேன்.

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலமென்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்ற சுண்ணக் கற்பாறைகள் உருவான காலத்தில் தோன்றியவையாகும். அக்காலத்தில் இப்பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டப்படும் போது சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும், பௌதிக, இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப்பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடக்குக் கரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, காங்கேசந்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப் படைக்கு மேல், மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதினாலேயே இங்கு நாம் தரைக்குக் கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப் பெறமுடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும், வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமான மக்கள் வாழ்வதற்கும், நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் தரைக்கீழ் நீரை இலகுவில் இங்கு பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச் சரிதவியலாளராலும் புவி வெளியுருவவியலாளராலும் சுண்ணக் கற்பாறைப் பிரதேசங்களுக்குரிய தனிப்பட்ட பல நிலவுருவங்கள் அடையாளம் செய்யப்பட்டுள்ளன. இச்சுண்ணக்கல் நிலத்தோற்றங்கள் பல. அவற்றில் ஒன்றே தரைக்கீழ் நீரோடும் குகைகளின் தோற்றமாகும். மழையாற் பெறப்படும் நீர் நிலத்தினுள் ஊடுருவிச் சென்று, அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தேக்கம் பெற்று தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத் தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் நீரைத்தருகின்றது.

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு பெரிய குகைகளாகவோ தொடர் குகைகளாகவோ உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடாராக தரைக்குக் கீழே அமைந்திருக்கும். குகை மேலும் மேலும் அரிக்கப்பட குகையின் விஸ்தீரணம் அகலமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்ந்து விடும். இவ்வாறு தொடர் குகைப் பகுதியின் மேற்பரப்பு இடிந்து வீழ்ந்த ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக் கிணறு ஆகும்.

மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததினால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், நவாலி இடிகுண்டு,  கரவெட்டிக் குளக்கிணறு, ஊரணி வாற்றாக்கிணறு, கீரிமலைக் கேணி போன்றவையும் நிலாவரைக்கிணறு போல் உருவானவையாகும். கீரிமலைக் கேணியின் வட கீழ் மூலையில் ஆள் ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்க குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணமுடியும்.

இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும், மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்காக உட்செலுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக் கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்ட காலமாகப் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30 000 - 40 000 கலன் நீர் தோட்டப்பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து இறைக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்பின் உப்பு நீர் மேலோங்கி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் பற்றிய சில ஆய்வுகள் இங்குள்ள தரைக்கீழ் நீர்ப்பீடம் கடினமாக உப்பு நீரின் மேல் நன்னீர் வில்லை வடிவில் மிதப்பதை உறுதி செய்துள்ளன. எனவே நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும்.

நிலாவரைக் கிணற்றில் தேங்கும் நீரும் எமது பிரதேசத்தில் கிடைக்கும் மழை நீரிலிருந்து பெறப்படும் நீரின் தேக்கமே ஆகும். இது வலிகாமம் நன்னீர் வில்லையுடன் இணைந்துள்ளது. மிகையான பாவனையால் இவை உவர்த்தன்மை அடைந்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது தரைக்கீழ் நீரின் பயன்பாடானது ஒரு வரையறைக்கு உட்பட்டதே. ஆகவே
நிலாவரைக் கிணற்றை ஜீவநதியென எண்ணுவது அறிவியல் சார்ந்த எண்ணம் அன்று.
 http://www.thenee.com

Tuesday 5 May 2015

சிந்தனை.



சிந்தனை.
=========
கறையான் புற்று, தூக்கணாங்குருவிக் கூடு
தேன் கூடு இவைகளின் செயலை
சிந்தித்தால் போதும் மானிடன்
வாழ்வதற்கு.
மனிதனுக்கு மேற்ப்பட்ட ஞானிகள்
பேசுவதில்லை.
மனிதனுக்கு கீழ்ப்பட்ட விலங்கினம்
பேசுவதேயில்லை.
மனிதன் பேசாவிட்டாலும் மனம்
எண்ணங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றது.
பணிவும் இன்சொல்லும் மனிதரை
மலரவைக்கும்.
பிறர் புகழ வாழ்வது வாழ்வின் சிறப்பாகும்.
தன்னைத் தானே புகழ்வது மதியற்ற செயலாகும்.
கடமைகள் பலரூபம் செயல்கள் அன்புரூபம்.
தியாகங்கள் தொடரலாம் அகங்காரம் தொடரலாமா?
சேவை என்பது அன்பின் செயல்.
அன்பு என்பது கொடையின் வடிவம்.
காலங்கள் மாறலாம் கடமை மாறலாமா?
உரத்து கூறினாலும் ஊக்கமுடைவரே
செயல்ப்படுவர்.
பார்த்துப் பார்த்துப் பேசினாலும்
அன்புள்ளவரே செவிமடுப்பார்.
உடலோ வலிந்து உழைத்துக்கொள்ளும்.
மனமோ ஊதாரியாக செலவு செய்யும்.
இன்பமென அடைகின்றோமோ
துன்பங்களும் தொடரும்.
சிந்தனை மலர்கள் உதிர்வதில்லை.
வசந்தமலர்கள் உதிர்ந்துவிடும்.
சொற்கள் தொடர்ந்து வரும்.
சென்ற சொற்கள் திரும்பாது.
அன்பென்பது நீரைப் போன்றது .
தாபம் தீயைப் போன்றது.
                                       த-நாராயணன்