Tuesday 26 May 2015


வடமாகாணத்தை அச்சுறுத்துகின்றது ஓர் உயிர்கொல்லி – CKDu
- இனியன் இராசையா
முப்பத்துக் காலப் போரினால் சிதைந்து “நாம் மீளுவோம்” என்ற முனைப்புடன் எழும் வடமாகணத்து மக்களுக்கு “இதென்னை! இன்னோர் பேரிடி” என எண்ணத் தோன்றும். CKDஇந்த இடி இயற்கையால் எம்மீது ஏற்படுத்துகின்றதொன்றல்ல, எங்களின் கவனக் குறைவால் ஏற்படும் இடர். நாட்பட்ட சிறுநீரக வியாதி - தோற்றுவாயற்றது (Chronic Kidney Disease – unknown origin) பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோயினை ஆரம்பத்தில் அறியமுடியாததாகவும் நீண்ட காலத்தின் பின்னர் அதன் தீவிரம் அதிகரிக்கும்போது அது அறியப்படக்கூடியதுமாகவிருப்பின் அது நாள்பட்ட நோய (Chronic Disease) எனப்படுகிறது. எமது உடலுக்கு அந்நியமான பதார்த்தங்கள், தேவையற்ற நச்சுப் பதார்த்தங்களபோன்றவற்றை வெளியேற்றும் உறுப்பு சிறுநீரகம். ஒரு சிறுநீரகத்தில் 10-15 இலட்சம் வரையான வடிகட்டும் அலகுகளான சிறுநீரகத்திகள் (Nephrons) காணப்படுகின்றன. இச் சிறுநீரகத்திகள் நீரிழிவு, உயர்குருதியமுக்கம், பாம்புக்கடி போன்ற நோய்களாலும் நச்சுப் பதார்த்தங்களாலும் அமைப்பழிவடைகின்றன. படிப்படியாக சிறுநீரகத்திகள் இழக்கப்படும்போது ஒரு நிலையில் சிறுநீரகத்தின் தொழிற்பாடு தடைப்படுகின்றது. இதனால் நச்சுப்பதார்த்தங்கள் உடலில் தேங்குவதனால் உடலுறுப்புகள் படிப்படியாகச் செயலிழந்து இறுதியில் இறப்பு நேரிடுகிறது. நீண்டகாலங்களின் பின்னே இந்தச் சிறுநீரக நோய் அறியப்படுவதனால் இதை நாட்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease) CKD என அழைக்கப்படுகிறது.  
நீரிழிவு, உயர்குருதியமுக்கம், பாம்புக்கடி போன்ற நோய்கள் ஏற்படும் ஒருவருக்கு CKD தோன்றும் அபாயம் இருப்பதனால் இவர்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பதன் மூலம் இந்நோயைப் பிற்போடுவதோ அல்லது அதன் தீவிரத்தைக் குறைப்பதோ சாத்தியமாயுள்ளது. மேலே கூறப்பட்ட நீரிழிவுநோய் போன்ற தோற்றுவாய் எதுவுமில்லாதவிடத்தும் பல இடங்களில் CKD ஓர் புதிராக தோன்றி இருக்கின்றது. இதையே நாட்பட்ட சிறுநீரக வியாதி தோற்றுவாயற்றது (Chronic Kidney Disease – unknown) CKDu  எனப்படுகிறது. உலகையே உலுக்குகின்ற முக்கிய உயிர்கொல்லிகளில் CKDuவும் ஒன்று. மத்திய அமெரிக்க நாடுகளான எல்சல்வடோர், கொஸ்ராரிகா, நிக்கரகுவா, குவாதமாலா, கொண்டுராஸ், பனாமா, மெச்சிக்கோ போன்றவற்றிலும் எகிப்து, ரிய+னிசியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் தென் கிழக்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வியட்னாம் போன்றவற்றிலும் CKDu மிகத் தீவிரமான உயிர்கொல்லியாக அறியப்பட்டுள்ளது.  
1998ம் ஆண்டு இலங்கையில் வடமத்தியமாகாணத்தின் பதவியா பிரதேசத்தில் முதன் முதலாக தோன்றிய இந்நோய் வடமத்திய, மத்திய மாகாணங்களினூடு தென்மாகாணம் வரை இன்று பரவியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக பதுளை (22.9%), பொலனறுவை (20.6%), அனுராதபுரம் (15.1%) ஆகியன காணப்படுகின்றன. பாதிப்புக்குள்ளான நாடுகளாயினும் சரி, பிரதேசங்களாயினும் சரி இவை யாவும் விவசாய பூமிகளே. அத்துடன் இப்பிரதேசங்களில் கட்டுப்பாடற்ற உரவகை, இரசாயனப் பதார்த்தங்களின் பாவனை உள்ளது. இரசாயனப் பதார்த்தங்களின் பக்கவிளைவுகள் பற்றிய சிரத்தை இவ்விடங்களில் இல்லை, அல்லது மிகக் குறைவு எனலாம். விவசாயிகளையும் விவசாய நிலங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் நிலத்தடி நீரைப் பருகுபவர்களிடமுமே பெரும்பாலும் இந்நோய் அறியப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள் விவசாயப் பிரதேசங்கள் என்பதோடு இங்குள்ள நீர் வன்னீராகக் காணப்படுவதும் தெளிவாகியுள்ளது.
வன்னீரில் கல்சியம், மகனீசியம் போன்ற உலோக அயன்கள் செறிவாகவுள்ளன. இவை போன்ற பார உலோகங்கள் மலிவான உரங்களிலும் காணப்படுகின்றன. உலகின் முன்னணிக் களை கொல்லியான ‘ரவுன்ட் அப்’ இல் காணப்படும் கிளைபோசேற்று (glyphosate) பார உலோக அயன்களுடன் இலகுவில் சேர்ந்து நச்சுத்தன்மையானதும் வடிகட்டப்படமுடியாததுமான சிக்கல் சேர்வைகளைத் தோற்றுவிக்கின்றது. இச் சிக்கல் சேர்வைகளே CKDu இற்கு காரணமாகயிருக்கலாம் என்பதற்கு பல ஆய்வுகள் சான்றாக இருக்கின்றன. இலங்கையில் CKDu பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்பவரும் சர்வதேச விஞ்ஞானிகளால் மிகவும் அறியப்பட்டவருமான கலாநிதி ஜயசுமண அவர்களின் ஆய்வுப் பெறுபேறுகளும் இவற்றை எடுத்தியம்புகின்றன. இவரது ஆய்வுகள் பற்றி ‘இயற்கை (Nature) ’ போன்ற தலை சிறந்த விஞ்ஞான சஞ்சிகைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.   
CKDuஇன் தாக்கம் பெண்களைவிட ஆண்களில் 2-5 மடங்கு அதிகமாகக் காணfarmerப்படுகின்றது. விவசாயம் செய்யும் ஆண்கள் சுயபாதுகாப்பு கருவிகள் (; (Personal Protective Equipments) இல்லாமல் நீண்டநேரம் கிருமிநாசினிகள், பூச்சிநாசினிகள் போன்றவற்றை விசிறுதல் ஆண்களில் கூடிய தாக்கத்துக்கு காரணமாய் அமையலாம். இரசாயனப் பதார்த்தங்களை விசிறும்போது குறைவான நீருட்கொள்ளலும் வெய்யிலின் நிமித்தமுண்டாகும் நீரிழிப்பும் (dehydration) இப்பதார்த்தங்கள் தோலினூடாக ஊடுருவுவதைச் சுலபமாக்குகின்றது. இந்நோயாளிகளின் நகம், மயிர் போன்றவற்றில் இப்பதார்த்தங்களின் தேக்கம் அறியப்பட்டுள்ளன.   
நோயின் பரம்பலைக் கருதிக் கொண்டால்  விவசாய நிலங்களையும் வன்னீரையும் கொண்ட வடமாகாணத்திலும் இதன் தீவிரம் இருந்திருக்க வேண்டும். போர்க்காலங்களில் வடமாகாணத்தில் விவசாய இரசாயனப் பதார்த்தங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை யாமறிந்ததே. இது 2009ம் ஆண்டுவரை நீடித்திருந்ததால் இரசாயனப் பதார்த்தங்களின் பாதிப்பு இங்கு பிற்போடப்பட்டுள்ளது. இது நாட்பட்ட நோயாக இருப்பதால் இது பற்றிய கவனம் இங்கு இன்னமும் உணரப்படவில்லை. இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் Ckduஉயிர்க்காவுகையைத் தொடங்கியுள்ளது. பதவியாவில் தொற்றுகைக்குட்பட்ட நீர் முல்லைத்தீவை அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அவதானிக்கப்பட வேண்டியது.
ராஜரட்டைப் பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் சுகாதார அமைச்சின் சிறுநீரக நோய் தடுப்பு பிரிவின் இயக்குனரும் ஆய்வாளருமான வைத்திய கலாநிதி ஜெயசுமண அவர்கள் வடமாகாணத்துக்கு இந்நோய் பரவக்கூடிய அபாயத்தைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்தில்  CKDu பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நிகழ்த்தத் தானாக முன்வந்தார். கடந்த 14.05.2015 அன்று யாழ்/நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில் DFCC வங்கி, நல்லூர் றோட்டரிக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனம் (JMF) CKDu பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்தது. இந்த நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடாதிபதி கலாநிதி பாலகுமார் அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்துவதற்கு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்றுமுன்தான் கேட்கப்பட்டிருந்தார். எவ்வித சம்பிரதாயமுமின்றி அறிமுக உரையை விரிவுரையாகத் தந்தமை அவரின் திறமைக்கும் பெருந்தன்மைக்கும் அடையாளம்.
 யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ பீடத்தின் சமூக வைத்தியத் துறையின் தலைவர் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமார் அவர்கள் இக் கருத்தரங்குக்கு தலமை தாங்கியது மட்டுமல்லாது நாட்பட்ட சிறுநீராக வியாதி CKDu பற்றிய ஒரு நல்ல கருத்துரையையும் வழங்கியிருந்தார். அத்துடன் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்நிகழ்ச்சியை திறம்பட நடாத்தியதோடு தமிழ் தெரியாத சிறப்புப் பேச்சாளரின் ஆங்கில உரையையும் தமிழில் மொழிபெயர்த்தும் சிறப்பித்தார். இந்தக் கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளரான கலாநிதி ஜனசுமண அவர்கள் பல புள்ளிவிபரங்களுடன் விரிவானதும் தெளிவானதுமான உரையைத் தந்தது மட்டுமன்றி கருத்தரங்கு சம்பந்தமான பல கேள்விகளுக்கும் அதற்கப்பாற்பட்ட கேள்விகளுக்கும் நேர்த்தியான பதில்களை வழங்கி கருத்தரங்கை ஊட்டமுள்ளதாக்கியிருந்தார். நீண்ட தொலைவிலிருந்து நம் மக்களில் அக்கறை கொண்டு, தானாக முன்வந்து இந்தச் சிறந்த கருத்தரங்கை வழங்கியமை பாராட்டுக்கும் மேலானது. இந்தக் கருத்தரங்கின் சுருக்கமானதும் எழிமையானதுமான தொகுப்பே இக் கட்டுரையாகும். இக் கருத்தரங்கு வைத்தியத்துறை, பொருளாதரத்துறை, பொறியியற்துறை போன்ற துறைசார் வல்லுனர்களுடன் அதிகளவு முன்னணி விவசாயிகள் கலந்துகொண்டு கருத்துப் பரிமாறியமை சிறப்பம்சமாகும்.  
வடமாகாணத்தை அச்சுறுத்துகின்ற இந்த உயிர்கொல்லியைப் பற்றி அறிந்திருத்தல் அதாவது அது பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருத்தல் இதைத் தடுப்பதற்கான முதற்கட்டமாகும். கட்டுப்பாடான இரசாயனப் பதார்த்தங்களின் பாவனை இன்றைய விவசாயத்தில் தவிர்க்க முடியாததாக இருப்பினும் கூடுதலாக இயற்கையான சேதனப் பதார்த்தங்களின் பாவனையை இக் கருத்தரங்கு வலியுறுத்தியது. விவசாயப் பெருமக்களும் இக் கருத்துக்கு ஆதரவு வழங்கினர். இக்கட்டுரை வரையப்படும்போது கிளைபோசேற்றுக்கு இலங்கை அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்ல தரமான குடிநீரை அருந்துவதன் மூலமும்       கட்டு;ப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையும் அச்சுறுத்தும் CKDu ஐ வடமாகாணத்துக்கு அனுமதிக்காது தடுக்கும் காப்பு நடவடிக்கைகளாகும். இது பற்றி தொடர்ச்சியான கருத்தரங்குகள் பலமட்டங்களிலும் மேற்கொண்டு எல்லா மக்களுக்கும்  CKDu பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பதன் மூலம் வடமாகாண மக்கள் ‘வருமுன் காப்பவர்கள்’ ஆகட்டும்.    

http://www.thenee.com

No comments:

Post a Comment