Sunday 28 August 2016

அழகு.

 சிரட்டைக் கைத்தொழில்!
சிரட்டைப் பொருட்களில் கலையழகுப்  பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட
கலைப்பொருட்களின் அழகைப் பாருங்கள்..வளவாளர் திரு.த.சுரேஸ்குமார் அவர்களின் பயிற்றுவிப்பின் பயனாக உருவாக்க்பட்ட சிரட்டைகளினாலான இவ்வரிய கலைப்பொருட்கள் நமக்கு இயற்கை தந்த வரங்களை, வளங்களை இனிமேலும் சரியாகப்பயன்படுத்த நாமெல்லோரும் முனையவேண்டுமென்ற அழுத்தமான செய்தியைச் சொல்கின்றன. இதுபோன்று அனலைதீவில் பயனற்று வீணாகும் பனை வளங்களையும் நாம் பயன்படுத்தி கலைப்பொருட்களாக மாற்றி நலிந்த பொருளாதார நிலையிலுள்ள குடும்பங்கள் வாழ்வுற உதவவேண்டும்.இப்படியான நல்ல திட்டங்களை அமுல்படுத்திவரும் அரச நிர்வாக அலகுகளைச்சேர்ந்த அத்தனைபேருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகளையம் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். கலைப்பயிற்றுனர் திரு.த.சுரேஸ்குமார் அவர்களின் ஆற்றல்மிக்க சேவைக்கு நன்றிகளையம் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
இவ்வாறான வளங்களை எல்லா இடங்களிலும் பயனுள்ளவாறு மாற்ற எல்லோரும் தத்தமது இடங்களில் முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.









 படங்கள்: திரு.வை.தனேஸ்.



பனைஅருகி வரும் சமூகத்தின் அடையாளம்
சிக்மலிங்கம் றெஜினோல்ட்

பனை எங்கள் குலதெய்வம்என்ற அளவுக்கு இருந்தது ஒரு காலம். ஒரு காலமென்றால், ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னெல்லாமில்லை. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி (1960) க்குப் பிறகும் பனைதான் எல்லாத்துக்கும் துணை.
பனையின்றி வீடுமில்லை வாழ்வுமில்லைஎன்றிருந்தோம். வீடு வேய்கிறது, வேலியடைக்கிறது, மாட்டுக்குத் தீனி போடுறது, பெட்டி, கடகம், படுக்கிற பாய், நெல்லுக்காய  வைக்கிற பாய், பந்திப்பாய், புட்டவிக்கிற நீத்துப்பெட்டி, காசு வைக்கிற கொட்டப்பெட்டி, அரிசி புடைக்கிறதுக்குச் சுளகு, தலைக்குப் பட்டை என்று எல்லாம் இழைக்கிறது பனையோலையில்தான்.
பனையினால்தான் பல காரியங்கள் நடந்தன. பனம்பழத்தில் பணியாரம் செய்தோம். அதைச் சுட்டுச் சூப்பிச் சுவைத்தோம். பனாட்டு வார்த்தோம். கூரையமைப்பதற்கும் பனையே துணை. அடுப்பெரிக்கக் கொக்காரை, அப்பச்சட்டிக்கும் புகையிலை உலர்த்துவதற்கும் ஊமல். வேலிக்கும் கோழிக்கூட்டுக்கும் மட்டை. கட்டுவதற்கு நார், பின்னுவதற்கு ஈர்க்கு என்றொரு வரிசை தனியாக நீளும்.
பிட்டுக்கும் கூழுக்கும் ஒடியல். முறித்தும் இடித்தும் தின்பதற்கு கிழங்கு. காயவைத்தால் புளுக்கொடியல். குடிப்பதற்குக் கள். கள்ளுக்குடிக்காதவர்களுக்கு நுங்கு. இல்லையென்றால் பதநீர் (கருப்பணி). ருசிக்கக் கருப்பட்டி, பனஞ்சீனி. சலாகைகளில் ஏராளம் வேலைகள். நீர் இறைப்பதற்குப் பட்டை. பனந்தும்பில் பலவகை அலங்காரப்பொருட்கள். வடலியில் குருத்து, வெட்டித்தின்னப் புரான்... கூழ் குடிக்கப் பிளா, சோறுண்ண தட்டுவம் என ஆயிரமுண்டு பனையில்.
எல்லாவற்றுக்கும் மேலாக பனையோலையில்தான்ஏடும் எழுத்தாணியும்கொண்டு எழுதிப்படித்தனர் நம்முன்னோர். எண்ணும் எழுத்தும் திருக்குறளும் இலக்கியமத்தனையும் வாகடமும் சோதிடமும் பனையோலைச் சுவடியில்தான் பதிந்ததும் பகிர்ந்ததும் நடந்தது.
தமிழே வளர்ந்தது ஓலைச்சுவடிகளிலன்றி வேறில்லைப் பராபரமே!“
இப்படிப்பனையெங்கள் உயிருக்கு நிகர்என்றிருந்தோம்.
தமிழர்கள் வாழும் ஊரெங்கும் பனை நின்றது. “பனை நிற்குமிடமெல்லாம் தமிழ் நிலம்என்பதே அடையாளம்.
பனங்கூடல்களின் பின்னிருந்தே சூரியன் எழுந்தது. மாலையில் சூரியன் மறைந்ததும் பனங்கூடல்களின் பின்னால்தான். நிலவு எழுந்ததும் விழுந்ததும் கூடப் பனங்கூடல்களின் பின்னேயே. இரவும் பகலும் வந்து போனதும் பனங்கூடல்களின் பின்னிருந்தே என்றே எண்ணியிருந்தேன். அந்தளவுக்கு பனைகள் நிறைந்த உலகம் நமதாயிருந்தது. வானத்தைத் தாங்கி வைத்திருந்ததும் ஊரை ஏந்தி வைத்திருந்ததும் பனைகளே. பனையின் அழகில்தான் ஊரே மலர்ந்து கிடந்தது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பனைதான் தமிழரின் அடையாளம், தமிழர் வாழ்வென்றிருந்தது.
ஆனால் இன்று?
பனைகள் அருகி விட்டன. சில ஊர்களில் பனைகளே இல்லை. இன்னும் சில ஆண்டுகளில்பனை என்றால் என்ன?” என்று நம் பேரப்பிள்ளைகள் கேட்பார்கள். என்ன பதில் சொல்லப்போகிறோம்?
போர் தின்ற பனைகள் கோடிக்கும் அதிகம். பங்கருக்கும் ஷெல்லுக்கும் பலியாகிய பனைகள் எங்கள் தலைகளுக்கு நிகர். மிஞ்சியதை வீட்டுக்கும் வேறு தேவைகளுக்கும் என்று தறித்து முடித்து விட்டோம். ஆனால், இன்னும் பனைகளைத் தறிக்கும் வெறி தீரவில்லை. ஒரு பனையைத் தறிக்கும் போது இன்னொரு பனையை நடவேண்டும் என்று யாரும் சிந்திப்பதில்லை. இவ்வளவுக்கும் எளிதாக வளர்க்கக்கூடிய மரம் பனை.
மிஞ்சியிருக்கும் பனங்கூடல்களும் இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ஒற்றைப்பனைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கலாம். ஆனால், அவையும் கூடிய கெதியில் காணாமல் போய்விடும்.
பனையை வளர்ப்பதற்கென்று ஆயிரம் திட்டங்கள் உண்டு. பனையைப் பாதுகாக்கவென ஆயிரமாயிரம் சட்டங்களுமிருக்கின்றன. இந்தத்திட்டங்களைத் தூக்கிக்கொண்டும் சட்டங்களைக் காவிக்கொண்டும் திரிகிறார்கள் ஆயிரமாயிரம் விண்ணாதி விண்ணன்கள்.
ஆனால், காணிகளைத் திருத்தித் துப்புரவு செய்வோர்பனையென்றால், துடக்குஎன்றமாதிரி, கீரையைப் பிடிங்கி எறிவைதைப்போலத் துடைத்து எறிந்து விடுகிறார்கள் எல்லாப்பனைகளையும் எல்லா வடலிகளையும். பெரிய கனரக வாகனங்கள் புரட்டியெறிகிற பனைகளையும் வடலிகளையும் பார்த்தால் நெஞ்சு பற்றியெரிகிறது. பிள்ளையைக் கொலை பண்ணுவதைப்போல, ஒவ்வொரு வடலியையும் கொன்று தள்ளுகிறார்கள். போதாக்குறைக்கு மண்ணெண்ணெயை ஊற்றி  அழிக்கிறார்கள்.
தலைமுறைகளையும் நம் முன்னோரையும் வாழ வைத்தகற்பகதருஎத்தனை வாஞ்சையோடு, ஒரு தாயைப்போல எங்களையெல்லாம் காத்தது. இதையெல்லாம் எப்படிச் சுலபமாக மறந்தோம்? எங்களுக்கு என்ன வியாதி வந்தது, வெறிகொண்டவர் போலத் தானே வளர்ந்து தமிழ்க்குலத்தைக் காத்த பனைகளை, நம் குலதெய்வங்களை அழிப்பதற்கு?
கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. கொழும்பில் பனை அபிவிருத்திச் சபை உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு நிதியும் தாராளமா ஒதுக்கப்படுகிறது. ஆட்கள், அம்பு சேனைகள் என்று பலதும் பத்தும் இருக்கு. ஆனால், “தனியொருவன்மில்க்வைற் கனகராஜா செய்த அளவுக்கு எந்தப் பயலும் பனையை வளர்க்கவில்லை. பனை நடுகை என்றால் அதை உருப்படியாகச் செய்தது அந்த மனுசன் மட்டும்தான். அவர் நாட்டிய பனைகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிஞ்சியிருக்கிறது.
பனை நடுகை என்பது இப்பொழுதெல்லாம்பம்மாத்து விளையாட்டுஎன்று சனங்கள் கொடுப்புக்குள் சிரிக்கிற அளவுக்குத்தான் தலைவர்களின் காரியங்கள் நடக்கின்றன. கணக்குக் காட்டுகிற வேலைகள் இப்படித்தானிருக்கும்.
ஆண்டுக்கு ஐந்து லட்சம் பனைகளை நடுகிறோம்என்று சொல்லப்படும் கணக்கைக் கூட்டினால் உலகமே பனைகளால்தான் நிறைந்திருக்கும். ஆனால், ஊரே பனையின்றி வெறிச்சோடிப்போயிருக்கே...!
ஆனையிறவு தொடக்கம் தீவின் வெளிகளில் பனைகளைத் தாராளமாக நடலாம். பெரிய நெடுஞ்சாலை வழிநெடுக பனைகளை வளர்க்கலாம். கிழக்கு மாகாணத்தில் தாராளமாகப் பனைகளை வளர்க்கலாம். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், எதற்கும் தொல்லை தராமல், நீருமின்றி, போசிப்புமின்றித் தானே வளரும் தால விருட்சமல்லவா எங்கள் தாயவள்!
மரபைப்பற்றியும் பண்பாட்டைப்பற்றியும் அதிகமதிகம் பேசுகிறோம். மரபுரிமைகள் அழிவதைப்பற்றிக் கவலைப்படுகிறோம். “முதுசம்என்ற நம் பெரும்சொத்து, நம்முடைய முகம், நம்முடைய அகம்  என்ற பனை அழியும்போது மட்டும் நாம் பேசாதிருக்கிறோம். பனையென்பது தீண்டத்தகாத ஒன்றாகியதன் விளைவா இது? எதற்காக பனைகள் பேணுவாரின்றிப் பயனற்ற ஒன்றென ஆனது?
நம்முடைய மரபின் வேர்கள் பல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலமுண்டு. எல்லா வேரும் இணைந்து வளர்ந்ததே மரமாகும். பனை, தமிழின் மூலவேர். அதனால்தான் அதைத்தாலமூலவிருட்சம்என்றறிந்தனர் முன்னோரும் மூத்தோரும்.
பனை நின்றாலும் நூறு வருசம். பட்டாலும் நூறு வருசம்என்பார்கள். பர்மாத் தேக்கை உலகம் கொண்டாடுவதைப்போல, எங்கள் பனைகளை நாங்கள் மட்டுமல்ல, ஐரோப்பியர்களும் கொண்டாடிய காலமொன்றிருந்தது. இன்றும் அவர்கள் பனைகளை மறக்கவில்லை. நாங்கள்தான் மறந்து விட்டோம்.
சிங்கள மக்கள் அரச மரங்களை நாட்டிப்போற்றி வளர்க்கிறார்கள். அரசு என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதனுடைய வேர் ஆழமானது. அரசு போல் வேரூன்றி... என்று தெரியாமலா சொன்னார்கள். அந்த அரச மரம் எங்களுர்களிலும் இப்பொழுது தாராளமாக நடப்படுகிறது. அரசு தளைத்தால் அக்கம்பக்கமெல்லாம் கிளை விரிக்கும். கிளையோ பெரிய இடம்பிடிக்கும். ஆகவே, அரசு இடம்பிடிக்கும்.
நாங்கள் எங்கள் பனைகளையே அழித்து வருகிறோம். பனைக்குப் பதிலாக அரசா?
சொந்த முகத்தையும் அகத்தையும் அடையாள அழிப்புச் செய்வதற்கு எங்களை விடச் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை.
 http://www.thenee.com