Sunday 22 September 2019

பெருங்கமக்காரன்.


அனலைதீவில் கமத்தொழில் நிபுணத்துவத்திலும், கட்டிட நிபுணத்துவத்திலும் சுயம்புவாகவே தலைசிறந்து விளங்கி,அன்றைய காலத்தில் பல மனிதர்களின் வாழ்வில் உதாரண புருசராக வாழ்ந்த பெருமனிதர் அனலைதீவின் பெருங்கமக்காரன்
திரு. வைரவநாதர் பழனி.
கமபதமடைந்தார்.




நீ நடந்த பாதையெல்லாம்
நினைவிழந்து போனதையா
கொத்திவிட்ட தோட்ட நிலம்
கட்டிபட்டுக்  காயுதய்யா

எட்டி  நட போட்டவரே
எழுந்திருந்து பாருமையா
சுற்றுவட்டச் சொந்மெல்லாம்
சோகப்பட்டுத் தெம்புதய்யா

நீ விதைச்சா வயற்காடு
விளைஞ்சபடி பூ பூக்கும்
பூப் பறிக்கும் வாசத்தில
வாசற்படி  காய் காய்க்கும்

முயற்சியில மன்னவரே
முத்து மொழி சொன்னவரே
பத்து நிலம் நட்டுவைச்சு
மூணு குடில் சுட்டவரே




ஆளு வைச்சு ஆண்டவரே
ஆளுமைக்கு ஆண்டவரே
நாளு வைச்ச தம்மலுக்கு
வேருவிட்ட செம்மணலே

ஒத்தப்பனை காவோலை
உரசிவிட்ட சத்தத்தில
உச்சத்தில பாளைவிட்டு
ஒழுகுதய்யா முத்தத்தில

சாந்தகப்பை கூர் முனையா
சாந்தமுள்ள கட்டிடமே
சாதிசனம் தேடிவைச்ச
சந்தணத்து பொற்குடமே

பட்ட கண்டு நட்டதில்ல
நட்டதொன்றும் கெட்டதில்ல
தொட்டுவைச்ச வீடுகளில்
துயரப்பட்ட  விட்டமில்ல




ஆறு திங்கள் மண்வெட்டி
ஆறு திங்கள் சாந்தகப்பை
ஏறுமுகப் பாத்தி கட்டி
ஊரிழுத்த தூயவனே

தேரிழுக்கும் வடம் போல
தென்றலுக்கு தடம் போல
கோரியடி ஊரியைப்போல்- மனம்
கொள்ளை கொண்ட மாயவனே

வல்லியப்பன் கோவிலுக்கு
வழிபாடு தந்தவனே
அல்லலுறும் அலை தாண்டி
கொண்டுவந்த சின்னவனே


முன்முயற்சி நட்டுவைச்சா
முழுமை நல்லா விளைஞ்சிருக்கும்
உன் அயற்சி பார்த்ததில்லை
வெய்யிலுக்கு வியர்த்ததில்லை



உழைப்பதன்றி வேறறியாய்
ஊர் முழுக்க வேரெறிவாய்
உச்சி வெய்யில் சுடுவதில்லை
சோர்வு வந்து தொடுவதில்லை.


நெய்தலுக்குள் மருதம் நீ
நீலக்கடல் ஆழம் நீ
பெய்து  நின்ற மழை நாளில்
இலை விழுந்த தூறல் நீ


கூடி வாழும் ஒத்திகைக்கு
கோவில் நிலம் குத்தகைக்கு
ஆடிவரும் பேரலையே
சோகி வந்து சேரலையே



நாற்றெடுத்து நட்டுவைச்சா
உயிரெழுந்து  உயர வரும்
பாத்தி கட்டி நீரிறைச்சா
பால் நிலவாப் பயிரத் தரும்


பாக்கட்டைக் கிணற்றுக்குள்ள
ஊற்றைப்போல உன் உழைப்பு
வாழ்க்கைப்பட்டு வந்தவளும்
கண்டதில்லை மனக் களைப்பு

ஒற்றையடிப் பாதையில
சுடுமணலும் வேகையில
எட்டிவைச்ச நடையழகில் -உன்
இடறல்களும் புத்தி தரும்

கமக்காரத் தேனியொன்று
புகையிலையின் பூவுக்குள்ளும்
 போர்த்திவிட்ட பாவுக்குள்ளும்
அரசடியாள் நிழலுக்குள்ளும்
ஆழ்ந்துறங்கிக் போகட்டும்.


உழைப்பாழித் தேனிக்கெல்லாம்
உவமானத் தரைமேடு
மரம் வளர்த்துக் கிளை பரப்பி
வான் மீதும் வாழட்டும்.


Thursday 12 September 2019

தேர் திருவிழா.


 Sept .12.2019 அன்று நடைபெற்ற அனலை - புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் சித்திரத் தேர் திருவிழா சிறப்புற இடம்பெற்றது.புதிய சித்திரத் தேரில் எழுந்தருளிய பெருமானின் அருட்காட்சிகள்.
புகைப்படங்கள்:திரு.ப.சதர்சன் சாண்டில்யன்
திரு.உ.யட்சணன்

திரு.த.கோகுலராஜ்
மின்னஞ்சல் உதவி: திரு.க.உதயப்பிரகாஷ்.

புகைப்படங்கள், பதிவு நன்றி:அனலைதிவு கலாசார ஒன்றியம் கனடா.