Sunday 23 August 2020

நிழலும் நிலமும்.

சுடுமணல் தாங்காப் பாதம்
மரமில்லையென்றால் வேகும்.
புத்திக்கும் பக்திக்கும் விதை போடு.
புத்திக்குள் வளரும் பெரும் காடு.
மூச்சுக்கும் காற்றுக்கும் மரம் வேண்டும்.
மனதுக்கும் மரமொன்று நடவேண்டும்.
சுற்றிக் கடல் சூழ்ந்திருக்கும் பூமியிது
ஆழக்கடல் அள்ளிச் செய்த சாமியிது.
பச்சிலையைக் கட்டிக் கொஞ்சம் ஆறவிடு.
பாலாற்றில் தேன் சுனையா ஓடவிடு.
மரங்களை நீ நட்டுவைச்சா
பேரப்பிள்ளை நிழல் குடிப்பான்.
மரங்களை நீ சாய்த்து விட்டா
உன் பிள்ளை மூச்சடைப்பான்.
கடலும்தான் தன் மடியில்
மரத்தோட்டம் வைச்சிருக்கு.
காவலுக்கு கரையை வைத்து
உன் நிலத்தைச் தைச்சிருக்கு.
கடற்காத்து மேச்சலுக்கு
இலை பார்த்து மரத்தை நடு.
காலம் உன்னை மேயும் முன்னே
ஆழம் பார்த்து வேரை விடு.
உன்னைச் சுமக்கும் மண்ணுக்கு
ஒரு மரமேனும் நட்டுவிடு.
மண்ணைச் சுமக்கும் மரத்திற்கு
உயிரைத் துளியாய் விட்டுவிடு.
- சிவம்.

 

No comments:

Post a Comment