Friday 20 January 2012

தாகம்.



 பொன்வண்டு மெல்லத் தூங்க
அரளிப் பூ சிறிதாய் வேண்டும்.
 பொன்மாலைக் காற்று வாங்க
தென்மேற்கில் பாறை வேண்டும்.
மண்கொண்ட வாசம் கொஞ்சம்
 மழைநாளில் எனக்கு வேண்டும்.
பொன்வண்ணத் தேவ தீவு
போய்ச்சேரும் யோகம் வேண்டும்.
பொக்கை வாய்க்கிழவர் வாயில்
புழுதியோடு வார்த்தை வேண்டும்.
பொருக்கு வயல் தண்ணி கொஞ்சம்
 உயிர்மீது  ஊற்ற வேண்டும்.
 உழைக்கின்ற வியர்வை  பட்டு
உச்சிவெய்யில் நனைய வேண்டும்.
ஒற்றையடிப் பாதையொன்றில்
ஓரமாக நடக்க  வேண்டும்.


காலைநேரம் கரையில் நிற்கும்
வேலரோடு பேச வேண்டும்.
அலைகள் வந்துகரையைக் கொஞ்சும்
அந்திக் காற்றின்வாசம் வேண்டும்.
கடலளந்து கட்டுமரங்கள்  
கரைசேரும் காட்சி வேண்டும்.
 நிழலளந்து நேரம் சொல்லும்
ஆழமான மனிதர் வேண்டும்.
உசசாணிக் கொம்பின் மேலே-கிளி
உட்காரப் பார்க்க வேண்டும்.
 உழவாரக்குருவியோடு -மனம்
 உயரத்தில் பறக்கவேண்டும்.
ஆலோடு அரச மரத்தின்
அடி நிழலில் குளிக்க வேண்டும்.
 அதிகாலைச்  சேவல் கூவி
அயர்ந்த கண்கள் விழிக்க வேண்டும்.


வாகன சாலைத் தூக்கத்தோடு
வாசன் வைத்த மீசை வேண்டும்.
வைரமுத்து  நடித்த மேடை
நாடகங்கள் மீண்டும் வேண்டும்.
தேரோடும் இராஜ வீதி
சிறுபாதம் பார்க்க வேண்டும்.
வேரோடி வாழ்வதென்றால்
ஊரோடிச் சேர  வேண்டும்.
இத்தனையும் இல்லையென்றால்
 நம் வாழ்வில் இன்பம் இல்லை.
ஒன்றேனும் இல்லையென்றால்
நம் ஜென்மம்
ஜென்மம் இல்லை.
                  மு.கு.சிவசோதி.December 1999.

No comments:

Post a Comment