Saturday, 4 August 2012

நெடுந்தீவு முகிலன்.


சுழகில் அரிசி கொட்டி
உமி புடைக்கும் உன்னை சுற்றி
கூட்டமிடும் கோழிகளிடம்
கதறவா என் தவிப்பை

புகட்டில் காயவிட்ட ஈர விறகெடுத்து
நீ அடுப்பு ஊதுகையில்
பறணில் இருந்து பார்க்கும்
பூனையிடம் உரைக்கவா என் பரிதவிப்பை

நெல் மூட்டையில் கால் வைத்து
கோர்க்காலியில் நீ படுத்திருக்க
தலைமாட்டில் எரியும் கை விளக்கை
வட்டிமிடும் விட்டில்களிடம்
கூறவா என் அவதரிப்பை

கொக்கத் தடி கொண்டு குறிஞ்சா இலை பிடுங்க
பின் வளவிற்கு நீ வர
உன்பின்னால் ஓடி வரும்
குட்டி நாயிடம் இயம்பவா
என் அந்தரிப்பை

நீ குறுக்கு கட்டி குளிக்கும் போதும்
கிணற்றடி பக்கம் வந்து
உன்னையே கட்டிக் கொள்வதாய் காலில் விழும்
உன் மாமனிடம் சொல்லிடவா
என் காதலை

நெடுந்தீவு முகிலன்.
03-08-2012

No comments:

Post a Comment