Friday 6 December 2013




அமைதிக்கான  நோபல் பரிசு பெற்றவரும், உலக கறுப்பு   இன மக்களின் விடிவெள்ளியுமாக விளங்கியவர் நெல்சன் மண்டேலா. இயற்பெயர்   ரோலிக்லாக்லா மண்டேலா. தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கை மாகாணத்தில் (தற்போது கிழக்கு கேப்டவுன் நகரம்) உள்ள மெவ்சோ என்ற பகுதியில் உள்ள குனு என்ற சிறிய கிராமத்தில் 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்தார். தந்தை நிகோசி மும்பாக் அனியாஸ்வா காட்லா மண்டேலா. தாய் நொன்காபி நொசகேனி.
தெம்பா இனக்குழு மக்களின் மன்னராக விளங்கிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் மண்டேலா. வெள்ளையர் ஆட்சி தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட பிறகு இவரது முன்னோர்களின் குடும்பம் ஏழ்மை நிலைக்கு வந்தது. இவரது தந்தை உள்ளுர் கவுன்சிலின் தலைவராக விளங்கினார்.
« குனு கிராமத்தில் 1925ல் பள்ளியில் மண்டேலாவை சேர்க்கும் போது, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான், மண்டேலா என்ற பெயரோடு நெல்சன் என்ற பெயரை இணைத்தார்.
« மண்டேலா, 1937ல் கிளக்பெரி உண்டு உறைவிட பள்ளியில் தங்கி தனது இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், போர்ட் ஹரே உள்ள பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதால் வெளியேற்றப்பட்டார். இதனால், அப்போது பட்டப்படிப்பு பாதித்தது. மீண்டும் கல்லூரியில் சேர்ந்து 1943ல் பிஏ பட்டம் பெற்றார்.
« கடந்த 1944ம் ஆண்டு ஒலிவர் தம்போ , வால்டர் சிசிலி ஆகியோரால் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. அதில் மண்டேலா சேர்ந்தார்.
« எவ்லின் என்பவரை முதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். 1957ல் இவரை மண்டேலா விவாகரத்து செய்தார்.
« 1952ல் வகுப்புவாத சட்டத்தின் கீழ் மண்டேலாவை தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு கைது செய்தது. விடுதலையான பின்னர், தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரசின் துணை தலைவரானார்.
« 1958ல் மாரீஸ் வின்னி மடிகிசேலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . 1992ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 4 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டனர்.
« 1960ல் சார்ப்வில்லி என்ற இடத்தில் நடைபெற்ற இனவெறி படுகொலையை கண்டித்து மாபெரும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற மண்டேலா 1962ல் தலைமறைவானார். மொராக்கோ மற்றும் எத்தியோப்பியா ஆகிய பகுதிகளுக்கு சென்ற மண்டேலா அங்கு ஆயுத பயிற்சியில் ஈடுபட்டார். மீண்டும் தென்னாப்பிரிக்க திரும்பி கொரில்லா போர் முறையில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தார். அவர் மீது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
« 1963ல் அவருக்கு எதிராக தேச துரோக வழக்கும், கலவரத்தை தூண்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மண்டேலா மற்றும் அவரது 7 கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கேப்டவுனில் உள்ள ரோபன் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
« 1990ல் வெள்ளை அதிபர் டெக்ளார்க் தென்னாப்பிரிக்காவின் அதிபரானார். அவர் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கினார். அதே ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மண்டேலாவை டெக்ளார்க் அரசு விடுதலை செய்தது.
« 1991ல் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க தேர்தலில் பல்வேறு தரப்பு மக்களையும் கொண்ட வாக்களிப்புடன் முதல் கறுப்பு அதிபராக மண்டேலா ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
« 1993ல் அமைதிக்கான நோபல் பரிசு மண்டேலாவுக்கும், டெக்ளார்க்குக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
« 1997ல் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் க ட்சியின் துணை தலைவராக இருந்த தபோ இம்பெகியின் வசம் கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட. தபோ இம்பெகி கட்சியின் தலைவரானார்.
« 1998 ஜூலை 18ல் தனது 80வது பிறந்த நாளில் மண்டேலா மொசாம்பிக் நாட்டின் அதிபராக இருந்த சமோரா மாச்செலின் விதவை மனைவியான கிரகா மாச்செலை திருமணம் செய்து கொண்டார்.
« 1999ல் ஜூன் 16 அன்று அதிகாரத்தை தபோ இம்பெகியிடம் ஒப்படைத்து விட்டு மண்டேலா ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறார்.
« 2005 ஜனவரி 6 அன்று அவரது ஒரே மகனான மகாதோ மண்டேலா எய்ட்ஸ் நோய் தாக்கி இறந்து விட்டார். இதனையடுத்து 2007ல் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயை ஒழிக்க வேண்டி சர்வதேச அளவிலான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி பிரசாரத்தை தொடங்கினார் மண்டேலா.
« 2008ம் ஆண்டு உலக நாடுகள் தங்களது பட்டியலில் வைத்திருந்த தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து மண்டேலா பெயரை நீக்குவதாக அறிவித்தன. 2009ல் மே 9ம் தேதி தென்னாப்பிரிக்காவின் தற்போதைய அதிபரான ஜாக்கோப் ஜுமாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
« 2010 ஜூலை 11ல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் இடையில் ந¬டாபெற்ற போட்டியை கண்டு ரசிக்கிறார். 2013 ஜூன் 8ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறார். 2013 ஜூலை18 வரை பிரடோரியா மருத்துவமனையில் 87 நாட்கள் சிகிச்சை தொடர்ந்தது. தனது 95வது பிறந்த நாளை கொண்டாடினார்.
« மருத்துவமனையில் மண்டேலா உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியது. அவரது சொத்துக்காக அவரது இறுதி சடங்கை யார் செய்வது என்று அவரது குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. தவறான வதந்தியை பரப்பிய அவரது பேரனை போலீசார் கைது செய்த சம்பவங்களும் நடந்தன. 2013 செப்டம்பர் 1ம் தேதி உடல் நலம் தேறி மண்டேலா வீடு திரும்பினார்.
« 2013 டிசம்பர் 5ம் தேதி இரவு 8.50 மணிக்கு தூக்கத்திலேயே இந்த உலகத்தை விட்டு விடைபெற்றார் கறுப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க மக்களின் நேசமிகு தலைவர் நெல்சன் மண்டேலா.
 இலக்கியா இணையத்தில் வெளியான கட்டுரை. நன்றி. ilakkiainfo.com

No comments:

Post a Comment