| அனலைதீவு அபிவிருத்தி தொடர்பில் இவ்வருடமும் பல்வேறு பணிகள் முன்னெடுப்பு |
| 15.01.2014 - புதன்கிழமை அனலைதீவின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்று இன்றைய தினம் பூர்த்தியாகியுள்ளது. என்றாலும் இங்குள்ள சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இத்தேவை பூர்த்தி செய்யப்படாதிருப்பினும் இது வெகுவிரைவில் பூர்த்தி செய்யப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ள்ஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். அனலைதீவிற்கான 24 மணிநேர மின்சார சேவை இன்றைய தினம் (15) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 1991 ஆண்டு நானிங்கு வந்திருந்த போது இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டமானதொரு நிலையில் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக, உண்ண உணவுகூட இல்லாததொரு நிலை இங்கிருந்தது. இன்று அந்த நிலை படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. இன்னும், இன்னும் முன்னேற்றம் வேண்டும். அந்த முன்னேற்றத்தை உங்களுக்கு உருவாக்கித் தருவதற்கே நாம் அன்றும், இன்றும் உங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டே உழைத்து வருகிறோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருபவர்கள் நாம். எனினும் எமது மக்களின் தவறான தெரிவால் மாகாண சபை நிர்வாகம் எமக்குக் கிட்டவில்லை. மாகாணசபை எம்வசம் கிடைத்திருப்பின் இப்பகுதிகள் மேலும் மேலும் துரித முன்னேற்றம் கண்டிருக்கும். இருப்பினும் உங்களுக்கான எமது பணிகள் முடங்கிப் போய்விடவில்லை. தற்போது எமக்கிருக்கும் பலத்தைக் கொண்டு முடிந்தளவிற்கு நாம் உழைத்து வருகின்றோம். அந்தவகையில் எங்கள் வசம் நிர்வாகப் பொறுப்பிருக்கும் மூன்று பிரதேச சபைகளுக்குமென தலா 100 மில்லியன் ரூபா வீதம் நாம் அரசிடம் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றிருக்கிறோம். அதில் 20 மில்லியன் ரூபா அனலைதீவிற்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் வீதிகளைப் புனரமைப்பதற்கும், கடைத்தொகுதியினை அமைப்பதற்கும், புதிய அம்பியுலன்ஸ் படகு கொள்வனவு செய்வதற்கும் இன்னும் சில அபிவிருத்தித் தேவைகளுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும். இதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடி இவ்வருடமும் நிதியொதுக்கீடுகளைப் பெற்று இப்பகுதியின் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளேன். இந்தவகையில் இங்குள்ள மத, சமூகப் பெரியார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, இப்பகுதியின் தேவைகளை இனங்கண்டு அவை துரிதகதியில் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், ஊர்காவற்துறை பிரதேச சபை பிரதி தவிசாளர் அல்பேட், யாழ்.மாவட்ட மின் அத்தியட்சகர் ஞானகணேசன், மின் அத்தியட்சகர் அருள்நாதன், மின்பொறியியலாளர் திருமதி கமலலோஜினி, உதவி மின் பொறியியலாளர் பவானந்தராஜா மற்றும் பிரதேச சபை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நன்றி: http://www.epdpnews.com |
நன்றி: http://www.epdpnews.com

No comments:
Post a Comment