Wednesday 14 May 2014

அனலையூர் ஐயனாரே போற்றி.



அனலையூர் ஐயனாரே போற்றி.
அலைகடல் சூழ் அனலையம்பதியுறை அரிகரன் குமரனே போற்றி
அரவம் அணிந்த சங்கரன் உமையவள் புதல்வனே போற்றி.
ஆதிசேடனுறை மாதவன் சிகாமணியே போற்றி
யானைமுகன் ஐங்கரனின் தம்பியே போற்றி
ஆறுபடை அதிபதி ஆறுமுகன் சோதரனே போற்றி
ஆழ்கடல் தாவி எழுந்தருளிய பெருமானே போற்றி
கூழாவடியுறை பாதம் பதித்தோனே போற்றி
நயினா குளமருகில் அமர்ந்த தேவனே போற்றி
காராளர் கூடி முறையிட ஆக்கம் புரிந்தோனே போற்றி
பூரணா புட்கலை ஆட்கொண்ட நாயகனே போற்றி
சித்தத்திலே வந்துதித்த எங்கள் ஐயனே போற்றி
காக்கும் காவலனே பேரின்ப சுந்தரனே போற்றி
உன்நாமம் ஓதி வருவோரை இரட்சிப்பவனே போற்றி
உனை நினைந்து நோன்பிருப்போரை அரவணைப்பவனே போற்றி
கரவறை அமர்ந்தே சுடரொளி பரப்பபவனே போற்றி
திருவடி அடைந்தோரை ஆதரிப்பவனே போற்றி
பிள்ளைவரம் வேண்டுவோர்க்கு சித்திக்க அருள் சுரப்பவனே போற்றி





யாதுமறியா திசை மாறியோரை காத்தருள்பவனே போற்றி
உன்பாதம் தழுவி உறங்குவோரை விழித்திட அருள்பவனே போற்றி
வழி நீர் மல்கும் பக்தரை காத்தருள்வாய் ஐயனே போற்றி
நெடுந்தூரம் சென்றாலும் கூட வந்தே அரவணைப்பவனே போற்றி
ஊன் உறக்கமின்றி உன்தலம் தஞ்சமென வருவோரை காப்பவனே போற்றி
அனிச்சமலர் வாடுவதுபோல வாடும் காராளரை இரட்சிப்பவனே போற்றி
வண்ண மலர் தொடுத்து உனக்களித்தே மகிழ்ந்தோரை மகிழ்விப்பவனே போற்றி
கடல் அலை கரை தாண்டி உன் அருள் தக்கெட்டும் பொழிபவனே போற்றி
தினம் தினம் நேசிக்கும் கூழாவடியுறை ஐயனே போற்றி
பூக்களெல்லாம் மலர்வதற்கு மழை பொழிய வைப்போனே போற்றி
மிழிரும் கண்களிலே ஒளிப்பிளம்பாய் வந்தோனே போற்றி
முரசின் எதிரொலி செவிகளில்முழங்கிட வைப்போனே போற்றி
காண்டா மணியோசை திக்கொட்டும் ஒலிரச்செய்பவனே போற்றி
குடிமக்கள் செல்வம் செழிக்க அருள் சரப்பவனே போற்றி
மேகங்கள் திரண்டு வான் மழை பொழிந்து சிறப்பிப்போனே போற்றி
 களனிகள் விளைந்திட அருளாசி புரிபவனே போற்றி



பசுவினங்கள் பால்சுரக்க பசுமை தருபவனே போற்றி
விக்கினங்கள் அளித்திடும் அனலையம்பெருமானே போற்றி
கடைக்கண் வீசியே அடியார்க்கருளும் வேந்தனே போற்றி.
விம்மி விம்மி வருவோரை ஆதரிப்பவனே போற்றி.
பக்தர் இதயங்களில் குடிகொள்ளும் சுவாமி ஐயனே போற்றி.
கலை நெறிகள் பாங்குடனே ஓங்கிட அருள் சரப்பவனே போற்றி.
வேங்கை மீதமர்ந்து விரைந்துவரும் ஐயனே போற்றி.
கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி.
கரத்தில் கிளி அமர வரமளித்த அரிகரன் குமரனே போற்றி.
 கஜமுக வாகனப்பிரியனே எங்கள் ஐயனே போற்றி.
 நெய் அபிஷேகப்பிரியனே எங்கள் ஐயனே போற்றி.
 சந்தனக் காப்பால் அழகுறும் மேனியனே போற்றி.
நீறணிந்த நெற்றியில் தலகம் ஒளிரும் ஐயனே போற்றி.
அலங்கார ரூபனாய் காட்சி தரம் எங்கள் ஐயனே போற்றி.
மிளிரும் தீபங்கள் ஒளிர்ந்திட திருமேனி காட்சியானவனே போற்றி
அந்தணர்கள் வேதங்கள் முழங்கிட செவியுற்றோனே போற்றி.
ஓதுவார் பதிகங்கள் பாடிவர பணிந்தருள்வோனே போற்றி.


நீருடன் மலரும் இணைந்து சொரிய தர்ப்பணமாய் கொண்டவனே போற்றி.
கலங்கரை வளக்கைப்போல எத்திசையும் ஆழ்பவனே போற்றி.
ஆனந்தக் களிப்புறும் அடியார்களை காக்கும் மெய்யனே போற்றி.
துன்பம் சூழ்ந்தபோதும் உன்னடி தஞ்சமென வருவோரை காப்பவனே போற்றி.
மனம் புழுங்கி நீர்மல்க உன்னடி சேர்ந்தோரை காப்பவனே போற்றி.
பக்தருக்கெல்லாம் மூலமாய் நின்றே காத்தருளும் வேந்தனே போற்றி.
அடியார் இதயக் கமலத்தில் வீற்று அரள் புரிபவனே போற்றி.
ஆழியிலே முத்திருக்கும் அடியார் கமலத்தில் முத்தாய் வீற்று இருப்பவனே போற்றி
புரியாத தத்துவத்தை பொருளுணர்ந்து உணர்த்தும் ஐயனே போற்றி.
எரிகின்ற தீயிலே பாவங்களை போக்கிட வைத்தோனெ போற்றி.
சுழிக்காற்றாய் சுழன்றபடி துன்பங்கள் வந்தாலும் காத்தருள்பவனே போற்றி.
சஞ்சலத்தை நீக்கியே அன்புடன்அரவணைப்பவனே போற்றி.
வானம் கலைவதில்லை உன்னருள் பொய்ப்பதில்லை இறைவனே போற்றி
நாவிலுன் நாமகீதங்கள் எழும்போதுசெவி சாய்ப்பவனே போற்றி.
கன்னியர்கள் சதுராட்டம் கண்டு மகிழ்ந்தே இரட்சிப்பவனே போற்றி.
பூசை மணி சங்கொலிகளும் ரீங்காரம் இசைத்திடுமே ஐயனே போற்றி.


விண்ணை நோக்கும் கோபுர தரிசனம் அருளிய தேவனே போற்றி.
சொந்த மண்ணோடு வாழ்பவரை உன் கண்ணோடு காப்பவனே போற்றி.
திரைகடல் தாண்டிச் செல்வோரை வளமுடன் காப்பவனே போற்றி.
காலம் கடந்தாலும் உன் நினைவு கொண்டோரை வாழ்விப்பவனே போற்றி.
உன்பாதம் காண்பதற்கு விழித்தெழுந்து விரைவோரை காப்பவனே போற்றி.
முப்புரி நூல் துலங்கிட தரித்த எங்கள் ஐயனே போற்றி.
கல்வியும் சீரும் கீர்த்தியும் பெருமையும் தந்தருள்பவனே போற்றி
கடல் குமுறி ஊருக்குள் புகுந்திட காராளரை காத்தருளிய பெருமானே போற்றி.
ஞானத் தீ தந்தருள்வாயே கூழாவடியுறை ஐயனே போற்றி.
நயினா வயல் மண் கொண்டு விழா சாந்தி செய்விப்பவனே போற்றி.
எண் திசைகளில் அரணாக பூதப்படை ஏவிய ஐயனே போற்றி.
யானை மீதமர்ந்து கொடியேற்றும் எங்கள் ஐயனாரே போற்றி.
ஆயிரத்தெட்டு சங்பாபிஷேகத்தில் உன் திருமேனி குளிர்ந்திடுமே ஐயனே போற்றி
கைலாச வாகனம் தரித்து ஈசனுடன் வலம்வரும் நாயகனே போற்றி.
ஆதிசேடனில் அமர்ந்து வீதியுலா வரும் எங்கள் ஐயனே போற்றி.

                                          

பூரணை புட்கலை சமேதராய் காமதேனுவை அலங்கரிப்பவனே போற்றி.
குதிரைமேல் தாவி வில்கொண்டு புளியந்தீவு ஏகும் ஐயனாரே போற்றி.
நாகேஸ்வரர் வீதியில் மானுடன் விளையாடம் வேந்தனே போற்றி.
அம்புகள் பாய்ந்தே வானத்தை நோக்க ஆலயம் திரும்பும் ஐயனே போற்றி.
கார்மேகம் படர்ந்தே மழை பொழிய ஆனந்தமாய் வரும் ரூபனே போற்றி.
அடியார்கள் இல்லங்கள் தோறும் தங்கி எழுந்தருளும் கோவே போற்றி.
இரதம் மேல் பவனி வந்தே அடியார் குறை களைபவனே போற்றி.
குவிந்த தேங்காய் நொடிப்பொழுதில் சிதறிட வைத்தோனே போற்றி.
வான் வெளியில் உன் நாமம் அதிர்வதைச் செவியுற்றோனே போற்றி.
வடம்பிடித்திழுப்போரை வழிகாட்டி அரவணைப்பவனே போற்றி.
தவழ்ந்தும் உருண்டும் பின்தொடரும் பக்தரை காப்பவனே போற்றி.
பாற்காவடி பறவைக் காவடி ஆடிவரக் குதூகலிப்பவனே போற்றி.
பசுமை சுமந்தே களி நடனம் புரிந்து வருபவனே போற்றி.
பன்னீர் துளிகள் பொழிந்திட ஆனந்தமாய் வருபவனே போற்றி.
மலர்கள் உன் மேனிமேல்பட்டு சுகந்தம் தந்திடுமே ஐயனே போற்றி
கோபுர வாசலில் பக்தர்கள் பரவசம் பொங்கி கூத்தாட இரசிப்பவனே போற்றி.



சிரசினில் கற்பூர தீயுடன் நடனமாடும் பக்தையைக் காப்பவனே போற்றி.
உன்முன் களிநடனமாடும் அடியார் கூட்டத்தைக் காப்பவனே போற்றி.
விஷேட திரவிய மகா அபிஷேகம் காணும் ஐயனாரே போற்றி.
சேந்தக் கட்டிலில் தீர்த்தம்காணச் செல்லும் எங்கள் ஐயனே போற்றி.
ஆழ்கடலில் தீர்த்தமாடி அடியார் வினை தீர்ப்பவனே போற்றி.
மகா மண்டப அலங்கார பூரணா புட்கலா மணவாளனே போற்றி.
திருமணக்கோலம் பூண்டு எழுந்தருளும் மணவாளப் பெருமானே போற்றி.
யாக மண்டபத்தில் பசுமைத் தளிர்கள் சூடிய வேந்தனே போற்றி.
அடியார்கள் பசி தணிக்க அன்னம் கொடையளித்த பெருமானே போற்றி.
பொங்கலிட்டு பரவசம் காணும் அடியவர்களை மகிழ்விப்பவனே போற்றி.
போற்றி போற்றி அனலையுறை ஐயனாரே போற்றி போற்றி. போற்றி.
                                                                                                                       திரு.த.நாராயணன்.

No comments:

Post a Comment