பாமாலை.
ஈசனொடு உமையவள்
எமக்களித்த வினாயகனே
ஆனைமுகன் மூசுறு
வாகனன் விக்னேஸ்வரா
கொம்புடைத்தே
காவியம் வரைந்த கணபதியே
மருதமர நிழல்தேடி
அமர் தொந்தி வயிற்றோனே
அரசமரமே தஞ்சமென
வரும் அடியார்க்கு
அனலை உயரப்புலம் வீ ற்று அருள்புரியும் கஜமுகனே
பக்தர் வினையகற்றும்
பஞ்சமுக வினாயகனே
உனை முன்தொழுதே
ஆக்கங்களைத் தழுவும்
பக்தருக்கே
விமோசனம் அளித்திடும் ஆனைமுகனே
அனலையம்பதியுறை
அடியார் போற்றும் கணபதியே போற்றி.
எழுமங்கையர்
தலைவியாம் மனோன்மணித் தாயே
எழுமர உதிரத்தைச்
சான்றுதலாக்கிய நாயகியே
அரசுடன் வேம்பினை
சிவன் சக்தியாய்
உணர்த்திய
மனோன்மணித் தாயே
கீற்றுக்
கொட்டகையில் அமர்ந்தே
அருள் மழை
பொழிந்த ஆதிசக்தியே
ஊரார்
திருவிழக்கேற்றிப் பூசித்த
எழுமங்கை
நாச்சியரே அன்னை மனோன்மணித் தாயே
சிறு ஆலயம்
அமைத்தே அந்தணர் பூசித்த
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
அடியார்கள் பிடி அரிசி
பெற்றே
நெய்வேத்தியம்
கொண்ட தாயே
சிறு கோயில்
போதாதென்று உணர்த்தியே
கோபுரம்
உயர்த்திய கோகுலவர்த்தினி தாயே
விழாவினைப்
பத்தெனப் பிரித்தே
அலங்கார
ரூபமான நாச்சியரே
திருத்தேரில்
உலாவரும் மனோன்மணித் தாயே
உன்பாதம்
பற்றுகின்றோம் தாயே
சிவனார் உமையவளே
எமக்கருள்வாய் தாயே
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே.
எண்திசை கடல்சூழ்
அனலையில் அமர்ந்த தாயே
மாயோன் மனம்
நிறைந்த மனோன்மணித் தாயே
ஆழ்கடலில் வந்தே
அனலையைக் காத்தருளும்
ஹரிஹர புத்திரனை
அரவணைத்த அம்மையே
ஆனைமுகம் தரித்த
வினாயகனின் தாயல்லவோ
வேல்கொண்ட
ஆறுமுகன் அன்னை நீயே
பளியந்தீவு
அரசாளும் நாகேஸ்வரன் அப்பன்
இடப்புறமமர்ந்த
நாகேஸ்வரித் தாயே
உன்முகம்
விழிநீர் கசியப் போற்றுகின்றோம்
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே.
பொழுதினை
ஒளிமயமாய் அமைத்த இறைவி
ஏர் பிடித்தே
பொழுதினைக் கடந்தோம் நாயகியே
காணி நலம்
ஏழைக்களித்த நாயகி பராசக்தி
மேகமாய்
உருப்பெற்றே மழைபொழிய வைப்பாய்
நெல்மணிகள்
தழைத்தோங்க வாழையுடன்
மா பலா கமுகும்
கரும்பும் செழித்திடவே
ஏர்பூட்டிய
காளைகள் விரைந்து நடந்திட
பசுவினங்கள்
மகிழந்தே பால் சொரிந்திட
பசுமை எழில்
தோற்றம் கண்டோம் எங்கும் தாயே
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே.
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே.
உன் எழில்
மேனியில் பஞ்சாமிர்தம் தேங்கிட
சந்தணக்
காப்புடன் நீறணிந்து நின்றாய் தேவி
செந்தூரக்
குங்குமம் திலகமிட்டே காட்சியானாய்
இளநீர் சொரிந்தே
குளிரவைத்தாய் நாயகியே
பட்டாடை அணிகலன்
அணிந்தே அலங்காரமானாய்
மாலைசூடி நறுமணம்
வீசிவர எழுந்தருள்வாயே
மாதுளம்
முத்துக்களால் அர்ச்சித்திடவே
தீப ஒளியினுள்
முகம் மலரக்கண்டோம்
உன்பாதம்
தாழ்பணிந்தோம் எழுமங்கை நாயகியே
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே.
வாழைமலர்
நிலமகளைப் பணிவதுபோன்றே
ஏழை அடியேன் உன்
பாத மண்ணை வருடுகின்றேன்
நீ அறியாயோ
அடியேன் நான் படும் துயரம் நாச்சியரே
ஆழி மகள் அலையோசை
விண்ணில் அதிருமே
அடியேன் மன ஓசை
செவியில் விழவில்லையோ
காற்றில் வரும்
கீதம் சோலையில் அதிருமே
பக்தனின் ஓலம்
கருவறையில் எதிரொலிக்க வேண்டாமோ
வாழ்வு மாயமென
நானறிவேன் எழுமங்கை நாச்சியரே
இவ்வுலகில் உன்
கருணை வேண்டுகின்றேன்
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
மாலையிலே
இணைந்திட்ட மலர்கள்
மரங்களில்
மீண்டும் மலராதது போல்
உன் நினைவை
இழந்துவிட்ட அடியேன் யான்
எப்பொழுது உன்னடி
சேர்வேன் தாயே
ஆலை வாய்ப்பட்ட
கரும்பாய் ஆனேன்
நரம்பறுந்த
வீணைபோல் ஆகிவிட்டேன்
நீரில் தாமரை தள்ளாடுவது
போன்றே
அடியேன் உன்னருள்
பெற தள்ளாடுகின்றேன்
உருக்குலைந்தே
காலத்தை உதிர்த்துவிட்டேன்
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
தாயே உன்னடி
சரணடைந்தால் வேறு
இவ்வுலகில்
யாதுண்டோ பேரின்பம்
இப்புவியில்
தரித்ததினால் உன் கருணை
கிடைக்கப்
பெற்றேன் எழுமங்கைத் தாயே
வடம் பூட்டி தேர்
இழுத்தாலும் சக்கரங்கள்
தடம் மாறிச்
சென்றாலும் திசை நோக்கி ஆக்கிடுவாய்
அடியேன் வாழ்வு
திசைமாறிச் சென்றதினால் தானோ
உன் ஒளிவட்டம்
காண வந்தேன்
என் எதிரே
காட்சியாய் தெரியவைத்த எழுமங்கை நாச்சியரே
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
அனலையம்பதியுறை
எழுமங்கை நாச்சியாரே
அடியேன் உன்நாமம்
மறந்தறியேன்
உன் நினைவலை
அடியேன் மனதை விட்டகலா
நிழல்போல்
தொடருமம்மா நாச்சியாரே
எவ்வினை
சூழ்ந்தாலும் உன் பாதம் பற்றுவேன்
வேறு நினையேன்
எழுமங்கை நாச்சியாரே
பட்ட துயர்
போதும் போதும் எனை அரவணைத்த
குளம் சூழ் பொருக்குவயல்
அமர்ந்த எழுமங்கை நாச்சியாரே
உன் வழி நோக்கியே
அடியேன் விழி நோக்குமம்மா
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
ஊனினை உருக்கி
உள்ளொளி பெருகவே
அடியேன் பருக
ஞானப்பால் தருவாயே
நாளும் கடந்து
நரைவிழுந்த போதும்
ஆத்தாளே
நீதானம்மா காத்தருள்வாயே
அடியேன் வாழ்வு
ஒளிகொண்டு திசை காண
பரந்து விரிந்தே
ஒளிர் திகழ வேண்டும் தாயே
தேனினும் இனிமை
கொண்டதால் உன்னருள்
சுரக்க வேண்டுமென
தொழுகின்றேன் தாயே
எழுமங்கையாளும்
சிரோன்மணித் தாயே
அனலையம்பதி மேவிய
மனோன்மணித் தாயே
அனலை மண்ணில்
எழுந்தருளிய
தாயே எழுமங்கை
நாச்சியார் போற்றி போற்றி
கமலம்
தளைத்தோங்கி வளர்ந்த
குளமருகில்
அமர்ந்த எழுமங்கை நாச்சியார் தாயே போற்றி போற்றி
நெற் களனிகள்
முற்றி கதிர்மணிகள் முத்தமிடும்
மத்தியில்
உறைபவளே எழமங்கை நாச்சியார் தாயே போற்றி போற்றி
ஊரார் துயர்
அகற்ற வேண்டி நிலையில்
நின்றே
காத்தருளும் மனோன்மணித் தாயே போற்றி போற்றி
உனைத் தாழ்ந்தே
கரம் கூப்பித் தொழுகின்றோம்
அனலையம்பதியுறை
மனோன்மணித் தாயே போற்றி போற்றி.
திரு.த.நாராயணன்.
No comments:
Post a Comment