அனலை மேவிய
ஐயனாரே!
தென் அவனியில்
அவதரித்த ஹரிஹரனார் புத்திரனே
ஆழ் கடல்
அலைமேவிய ஐயனாரே
அனலைக்கே
அதிபதியாய் அமர்ந்த கோவே
சோலை நன்னீர்
நிலைகளும் அமைந்த பூமியில்
கூழாமர நிழல்
வீற்று அடியவர்க்கே அருள்
பொழிந்து
காத்தருளும் பூரண புட்கலை சமேத ஐயனாரே.
கூழாமர தளிர்
கனிகள் கண் கொள்ளாக் காட்சியாக
நயினா குள அமுத
தெளி நீர் நாவில் குளிர
சோலை மலர்
நறுமணங்கள் நாசியில் நுகர
நாற்புறமும் அலை
ஒலிகள் செவிகளில் ஒலிக்க
நாடெங்கும்
பக்தர்கள் திருக்கோசம் வானில் அதிர
அகம் மலர்ந்து
முகம் பூரித்தே காட்சியானாய் அனலை மேவிய ஐயனாரே.
வானமதில் பூத்த
வெள்ளியினைப்போல்
ஏற்றுகின்றோம்
திருவீதியெங்கும் தீப ஒளி
ஒளி கண்ணில்
இல்லையென்றால் ஐயனே
உன் கண்கொள்ளாக்
காட்சியினைக் காண்போமா
அனலையில் ஒளிரும்
நாயகனே உன்னடி
சேர்வோரை
ஒளிரவைத்தே காத்தருளும் அனலை மேவிய ஐயனாரே.
மலர்ந்தே
உதிர்கின்ற மலர்களைப்போன்றே
மானிட வாழ்வும்
அதுவன்றோ ஐயனே
யாதுமறியா
அடியார்களை அரவணைப்போனே
எவ்வினை
சூழ்ந்தாலும் தடுத்தாட்கொள்பவனே
பாதம் பணிந்தோரை
விட்டகலாமல் ஆட்கொள்பவனே
எத்துயர்
நேர்ந்தாலும் பனிபோல்
மறைந்திட அருளும்
அனலை மேவிய ஐயனாரே.
அந்திப் பூ
விரிவதுபோல் ஐயன் இரதம் தோன்றுமையா
நான்முகன்
சாரதியாய் குதிரைகள் விரையுதய்யா
சக்கரங்கள்
யாவும் விரைவோடு நகருதையா
அசைந்திடும்
மணிகளின் ஓசை காதினில் பதியுதையா
திசை மாற்ற
உந்தும் கட்டை வழி மாற்றிவிட்டதையா
பின்தொடரும்
அடியார் கூட்டம்
உன்நாமம்
பாடுதையா அனலை மேவிய ஐயனாரே.
அடியார் கூட்டம்
புடைசூழ ஆழ்கடல் நோக்கியே
புனிதத் தீரத்தம்
காணச் சென்றிடும் எங்கள் பெருமானே
அலையென வரும்
பக்தர் கூட்டம் அலையுடன்
நீராடி
மீழும்போதே தீவினைகள் அற்றுப்போக
உனதருளொளி
தெளித்தே ஆசி வழங்க உன்னடி
பணிந்தே எய்தினரே
மக்கள் அனலை மேவிய ஐயனாரே.
ஐயனே நின்
திருமணக்கோலம் தரித்தே நிற்க
இருபுறமும்
துணைவியர் கரம் பற்றித் தொழுது நிற்க
மஞ்சத்தில்
ஆடுவீரே ஊஞ்சல் நல்கி கண்கொள்ளாக்
காட்சி கண்ட
அடியவர் கூட்டம்
விருந்துண்டு
மகிழ்ந்து நிற்க
உனதருள் மழை
பொழிந்த வண்ணம் அதில் நனைந்தே
ஆனந்தக் கூத்தாடும்
பக்தர்கள் அன்றோ அனலை மேவிய ஐயனாரே.
த.நாராயணன்.
No comments:
Post a Comment