Wednesday, 14 January 2015

கதிரவன்.




கதிரவன் கதிரின்றி சுழலுமோ இப்புவி
அவனின்றி வாழ்ந்திடுமோ உயிரினம்
மரங்கள் செழித்தோங்கினும்
விதைகள் மண்ணைத் தாவுமே
கருவாகி இவ்வுலகில் தரித்தாலும்
மோகத்தினுள் கட்டுண்டாலும்
வாழ்வு எத்திசை நோக்கினும்
உனதருள் நோக்கியே சங்கமிக்கும்.
தடைகள் தகர்ந்து மீழுதுவே உனது பால்
அரிகரன் குமரன் ஐயனே போற்றி

ஒளி கண்ட பனி போல்
மனக்குறை களைவாய்
இடி ஓசை அதிரும் வானில்
தினம் உனது நாமம் அதிரும் நாவில்
பாதங்கள் தடுமாறும்போது
திசைகள் மாற்றி வழிகாட்டும் கண்கள்
மனம் திசை மாற்றி நகராது
உனது எழில் தோற்றம் ஆட்கொள்ளும்
எத்திசை நோக்கினும் பாதம் பணிவோம்
அரிகரன் குமரன் ஐயனே போற்றி


விளக்கின் திரி எண்ணை சேர்ந்தே
சுடரொளி பரப்புவது போல்
நீரை உறிஞ்சிய மேகக்கூட்டம்
பசுமை செழித்திட மழை பொழிவது போல்
தென்றல் மூங்கில்மேல் உரசி
கானம் இசைப்பது போல்
மண்ணிலே தவழ்ந்து கதிராகி
மணிகள் தலை குனிவது போல்
எங்கும் நீக்கமற நிறைந்த பெருமானே
அரிகரன் குமரன் ஐயனே போற்றி.

மலர்ந்து வாடிய மலருக்கு வாசம் ஏது
துன்பமுறும் அடியவர்க்கு வாழ்வேது
மண்ணில் யாதுமறியாது வாழ்ந்திருந்தோம்
வாலிபமும் மோகத்தை வாரிக்கொண்டனவே
இல்லறமெனும் நல்லறத்தில் இணைந்தோம்
ஆசையெனும் வட்டத்தில் மூழ்கினோம்
அனைத்தும் இழந்தே தவிக்கின்ற போது
உணர்ந்துகொண்டோம் வாழ்வு மாயமென
உனதருள் இன்றி வேறுண்டோ அறியேன் பெருமானே
அரிகரன் குமரன் ஐயனே போற்றி.


மலரில் மகரந்தம் அடைந்த தேனி போல்
அடியவர் உள்ளமதில் மலர்ந்திடும் ஐயனே
மாதுளைக்குள் முத்துக்கள் அமைந்தது போல்
ஒளி முத்துக்களாய் காட்சியானாய் ஐயனே
ஆலம்பழமதில் விருட்சமாகும் விதை போல்
அடியவரிடம் உறைந்தே அருள் சொரியும் ஐயனே
கொடியிடையே மலர்ந்து மணம் வீசுவது போல்
ஜீவராசிக்கொல்லாம் புத்துயிர் ஈர்க்கும் ஐயனே
அடியவர்க்கே அருளொளி பொழிந்திடும் பெருமானே
அரிகரன் குமரன் ஐயனே சரணம் சரணம் சரணம்.

                                                                                                                                                  --  திரு.த.நாராயணன்.

No comments:

Post a Comment