Tuesday 28 April 2015

திறவுகோல்.







மனம் பழுது ஆகிப்போனா
ஒரு பொழுது கடலைப்பார்.
மாலை நேர வானம் மேலே
மனசை வைச்சு ஆழம் பார்.
சோகமாகித் துவண்டு போனா
ஓயாத அலையைப் பார்.
நோயாகி விழுந்துபோனா
கரையோர மணலைப் பார்.
வாயாலே வாழ்வு போனா
திறக்காத முத்தைப் பார்.
மரியாதை அற்றபோதும்
மரணத்தை உற்றுப் பார்.
வேதனைகள் ஓடிவந்தா
வேப்பமர நிழலைப் பார்.
வேகாத வெய்யில் வாங்கி
ஓங்கி வளரும் அழகைப் பார்.
குறைகள் சொன்னால் நிலவைப் பார்.
கூனில் தெரியும் அழகைப் பார்.
தடைகள் சொன்னால் நதியைப் பார்.
தாண்டிச் செல்லும் வழியைப்பார்.
ஒற்றுமையில்லா ஊரைக் கண்டால்
கூடியிழுக்கும் தேரைப் பார்.

வேற்றுமை பேசும் மனிதர் கண்டால்
காற்றில் உண்டா கேட்டுப் பார்.
வெற்றி வந்தால் நிலத்தைப் பார்.
கால்கள் ஊன்றும் பலத்தைப் பார்.
தோல்வி வந்தால் விண்ணைப் பார்.
உனக்குள் மீண்டும் உன்னைப் பார்.
முகத்தின் முன்னால் ஒளியைக் கேள்.
முதுகின் பின்னால் ஒலியைப்  பார்.
இனவெறியில்லா மொழியைப் பார்.
மொழிவெறியில்லா இனத்தைப் பார்.
மதவெறியில்லா இறையைப் பார்.
இறைவெறியில்லா மதத்தைப் பார்.
சம நிலையில்லா சமூகம் கண்டால்
சமவெளி தோன்ற உழைத்துப் பார்.
அதிசயமறிந்து திகைக்கத் தோன்றின்
தமிழ் மொழி தினமும் சுகித்துப் பார்.



No comments:

Post a Comment