வாசனையா
முத்துமல்லி
மலர்ந்திருக்கும்
பக்கத்தில.
சின்னச் சின்ன
செவ்வரத்தை
பூத்திருக்கும்
முத்தத்தில.
கிடுகுத் தட்டி
ஓரத்தில
கைவிளக்கு தந்த
ஒளி
மின்சாரக்
குமிழுக்குள்ள
இன்னும்
விஞ்ஞானம்
வைக்கலையே.
முக்கிளுவ
இலக்கிளுவ
முறிச்சுத் தின்ற
கொழுந்துக்குள்ள
எச்சில் பட்ட
சின்னத்தனம்
இன்னும்தான்
காயலையே.
கல்லடிச்ச
புண்ணுமேல
அள்ளிப்போட்ட
மண்ணப்போல
ஊரவிட்டுக் கால
வைச்ச
உள்ளக் காயம் ஆறலையே.
வைரமுத்து
நாடகத்தை
விடியும் வரை
பாத்ததில
தொலைஞ்சுபோன
சில்லறையா
மனசுக்குள்ள
புதைஞ்சிருந்தும்
ஊர்நினைவு
கடும்
பனியுக்குள்ளும் உறையலையே.
கடற்கரையில
கத்தாளை
கல்லுக்குள்ளும்
வளர்ந்திருக்கும்.
பனிக்குள்ளே
உடற்கூடு
நடமாடும்.
உயிர்
ஊருக்குள்ளே
கரைந்தோடும்.
ஒலைக்கட்டுக்
கிடந்த இடத்து
மஞ்சள் நிறப்
புல்லுக்குள்ள
ஒளிஞ்சிருந்த
தேரை போல
பாய்ஞ்சு மனம்
போகுதய்யா.
ஊரைப் பாத்தா உயிர்
பிறந்த நிலை
ஆகுதய்யா.
வயலோடும்
வரப்போடும்
வருடிவிடும்
காற்றுக்குள்ளும்
சலங்கை கட்டும்
குருவிக்கூட்டம்.
மனவெளியின்
ஆசையெல்லாம்
நுனிப் புல்லின்
பனித்துளியாய்.
காற்று வந்து
வயல்வெளியில்
கட்டிவைச்ச
சலங்கையில
காலையில
பச்சசைக்கிளி
மெட்டுக்கட்டிப்
பாடியது.
மொட்டுக்கட்டி
நாளாச்சு
மலராமல் வெட்ட
வெளியில் பாழாச்சு.
அணைச்சுவிட்ட
புகையிலையில்
அதில சின்னப்
புழு இருந்தா
உச்சிப்பனை
உயரத்தில
உட்கார்ந்த காடை
வந்து
வைச்சதை
எடுத்ததுபோல்
வாய் நிறையக்
கொண்டுபோகும்.
வளர்ந்த நாட்டுக்
காடை வாயில்
தானாக
வந்து விழுந்த புழுவாய்
ஆனோம்.
இனி என்ன எச்சம்
தான்
எனினும்
எம் மண்ணில்
விழக் கூடுமோ?
தென்னங்
குரும்பைத்
தேரிழுத்த
அடையாளம்
மண்ணுக்குள்ள
மறைஞ்சிருக்கும்.
இன்னும்
மனசுக்குள்ள
நிறைஞ்சிருக்கு.
ஆவரசங் குளை
அரைச்சு
ஆறுமுகத்தார்
கிணத்தடியில்
அள்ளிக் குளிச்ச
தண்ணிக்குள்ள
ஆன்மாவும்
நனைஞ்சதுண்டு.
நாவரசுப்
புலவனவன்
நம்ம ஊரு
ஆறுமுகம்
பொருள் சொல்ல
உட்கார்ந்தா
தமிழுக்கு
ஏறுமுகம்.
அவன்
ஒத்தை மாட்டு
வண்டிகட்டி
புளியந்தீவுக்
கோவிலிலே
பொருள் சொன்ன
தமிழுக்குள்ள
பாவரசன்
இருக்கையிட்டு
பக்குவமா
அமர்ந்திருப்பான்.
பூவரசங்குழல் செய்து
ஊதிவைச்ச
சத்தமெல்லாம்
காத்துக்குள்ள
மடிச்சு வைச்சு
காத்திருக்கும்
வயல் வெளியில்
பேரப்பிள்ளை
பாதம் பட்டா
பிரிச்செடுத்து
ஊட்டிவிடும்.
சூழடிச்சு மீன்
பிடிச்சு
சுத்திவர
உட்கார்ந்து
கூழ் குடிச்ச
வெள்ளை முற்றம்
பாழடைஞ்ச
அரண்மனையாய்
ஒற்றைப்பனைத் துணையுமின்றி
வெற்று வெளி ஆனது.
மனம்
சுடுமணலாய்ப்
போனது.
கிணத்துக்குள்ள
படர்ந்திருந்த
கொளவையில சிவந்த
பழம்.
பச்சைக்கிளி
பறந்துவந்து
பாதி தின்று போன
இடம்.
மனசுக்குள்ள
கடலைத் தூக்கி
மறைச்சுவைக்க
ஆசைப்பட்டு
அந்திவானச்
சிவப்பையெல்லாம்
கண்ணுக்குள்ள
இறைச்சு வைச்சு
தென்மேற்கு
மூலையில
தீக்குழம்புப்
பாறையில
அன்றொருநாள் அமர்ந்திருந்த
அதியுயர்ந்த வாழ்வின் தடம்.
அலைவந்து
அடிச்சதில
பொற்காலம்
கரையுமென்று
அப்பொழுதில்
நானறியேன்.
கோரியடி
ஒத்தப்பனை தலையிலேறி
கொண்டல்காத்து
அடிச்சழித்து மிதித்தபோதும்
அதில் கூடு கட்டி
வாழும் ஒரு பறவை போல
வாழ்க்கையை
வாழத்தான் சொல்கின்றன
நினைவுகள்.
-சிவம்.
July 17.2015.
No comments:
Post a Comment