Wednesday 29 July 2015

யாதும் ஊரே யாவரும் கேளீர்!



துடுப்புகள்
அக்னிச் சிறகானதால்
ஒரு படகு
ஏவுகணையானது
அக்னிக் கடற்கரையிலிருந்து.

தேசிய கீதத்தைத்
திமிர்ப்பித்தவன்.
எவுகணையால்
திருப்பி  எழுதிப்
புதுப்பித்தவன்.

இந்து சமுத்திரப் பாதுகாப்பு எல்லையை
வான் வெளியில் கீறி விட்டவன்.

உன் புத்தகங்களின்
கடைசிப் பக்கங்களை மூடும்போது
வெளிச்சத்தோடு பல மனிதர்களை
வெளியில் விட்டவன்.

வெளிநாட்டுச் செய்மதிகளின் கண்களில்
பாலை மணலைத் தூவிவிட்டு
ஏவுகணையை எய்தவன்.

விஞ்ஞானத்திற்கும்
மெய்ஞானத்திற்கும்
ஆதிமூலம் அறிந்தவன்.

விஞ்ஞானம் எழுதிய
எளிமையான
எண்பத்திமூன்று வரித்
திருக்குறள்
நீ.

இந்திய 
நதிகளையெல்லாம்
தேசியக் கமண்டலத்திற்குள்
ஊற்றிவிட ஆசைப்பட்ட
உயர்ந்த
அகத்தியர்  நீ.

பூக்காமலே
பூமி மீது விருட்சங்களை
விதைத்தவன்
நீ.

தூக்கத்தைக் கலைத்துக்
கனவு காணச் சொல்லி
மனிதனை
விழிக்க வைத்தவன்
நீ.

பூமியின் சுழற்சிப் பாதையில்
வளர்ச்சியடைந்த
இந்தியாவின்
இரண்டாவது
இமயம்
நீ.

மெழுகுவர்த்தியால்
குத்துவிளக்கு ஏற்றிய
பிறை   பெருமான்
நீ.

மாணவப் பெருந்தோள்களில்
அக்னிச் சிறகு 
வளர்த்து  விட்டவன்
நீ.

நீ
தீ.
உலக நீதி.

நீ காலம் ஆகினாய்.

பெரும் சூறாவளி ஒன்று
புதைந்து கிடக்கும் மணலை  
அலை   அரிக்கும்
தனுஸ்கோடி  கடற்கரை  போல்
உலகோடி மனசுகள்
உனக்காக
கண்ணீரில் கரைகின்றன.

உலக புருஷரே!
அமைதிக்குள்   உறங்குக
கனியன் பூங்குன்றனார் திருமடியில்.

உலகம்
ஒரு கிராமம்  
ஆகும்.
                                                                             -சிவம்.

No comments:

Post a Comment