Wednesday 29 July 2015

அனலைதீவு ஐயனார் கோவில் வேட்டைத் திருவிழா.






அனலை ஐயனார் திரு உலா பத்து
திரு உலா – ஏழு (நாக வாகன உலா)- 28/07/2015
வேட்டைத் திருவிழா
பஞ்சதலை நாகமொடு ஆதிசிவ சொரூபனாகி
அஞ்சுதலை நீக்கும் ஆதிசேஷனுறை பவநந்தா
புண்ணிய அனலைக்குள் வீதியுலா வாருமையா
செண்டாயுதம் தாங்கும் என்னையனே சரணம்!
செம்துரகமீதேறி ஐயன் விரைகின்றார் புளியேத்தி
மும்மல மொடுக்கி மான்வேட்டையாடும் மதுரவீரா
பூரணகும்ப தோரணப்பந்தல்கள் உமக்கே உபசாரம்
ஊர்காக்கும் பரம்பொருளே அச்சுதனே போற்றிபோற்றி!!

இந்தியாவின் சிவகங்கை மாவட்ட “கல்லல்” பதியில் கோயில் கொண்டு காலவசத்தாலும், ஐயனின் திருவுளத்தாலும் சேதுக்கடல் தாண்டி ஈழத்தின் அனலைதீவில் கோயில் கொண்ட ஸ்ரீ பூரணா அம்பிகை, புஷ்கலா தேவி உடனுறை ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய மன்மத வருட திருவிழாவை முன்னிட்டு, அனலை ஐயனார் திரு உலா பத்து எனும் பாமாலை ஐயனுக்கு சமர்ப்பணம்.
ஐயன் உலா வ(ள)ரும்
-அனலைக்குமரன்

அனலை ஐயனார் திரு உலா பத்து
திரு உலா – எட்டு (இடப வாகன உலா)- 29/07/2015
சப்பைரதத் திருவிழா
கற்பூரப் பிரியனுக்கு சந்தன அலங்காரம்
நற்கதியே அருளும் நயினாகுள அழகா
கல்லல்துடல் மேவிய கருணா மூர்த்தியே
அல்லல் துடைக்க அடைந்த எம்பெரும சரணம்!
சப்த தீவகத்தின் சாந்த ரூபனே ஸ்ரீநி ஹஸ்தனே
சப்பைரதமேறும் ஐயனே ஸ்கந்த சோதரா
இடபரூடனாய் உலாவரும் மெய் அப்பனே
கடல்சூழ் அனலைப் பதியானே போற்றிபோற்றி!!

ஈழத்தின் அனலைதீவில் கோயில் கொண்ட ஸ்ரீ பூரணா அம்பிகை, புஷ்கலா தேவி உடனுறை ஹரிஹர புத்திர ஐயனாரின் அற்புதங்களில் 1627 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடல்கோளினை தடுத்தாண்டமை மூலம் அனலை மக்களின் குலதெய்வமாக போற்றித் துதிக்கப்படுகின்றார். காவல் தெய்வமாகி பக்தர்களின் நேர்த்திகளை தீர்த்து, களனி வளம், விலங்கு நலம் பெருக்கி, கடல் பயணங்களில் ஆபத்பாந்தவனாக அருளாட்சி புரிகின்றார். அத்துணை சிறப்பு மிக்க ஐயனுக்கு நிகழும் மன்மத வருட திருவிழாவை முன்னிட்டு, அனலை ஐயனார் திரு உலா பத்து எனும் பாமாலை ஐயனுக்கு சமர்ப்பணம்.
ஐயன் உலா வ(ள)ரும்
-அனலைக்குமரன்



 படங்கள்: திரு.வை.தனேஸ்.


No comments:

Post a Comment