Thursday 11 February 2016

கடலும் நானும்.





நீர் கிழித்து உயரத்தெறிக்கும் துளிக்குள்
ஒரு முரலின் முன்முனையின் சேமிப்பு
என் உயிர்.

கரையறுத்து மணல் துருத்தி
நுரை செதுக்கும்
வெள்ளிக்கொலுசின் மணிக்குள்
துடிக்கும்
என் இதயம்.

பாறைகள் எனது நரம்புகள்.
சூறைகளும் சுனாமியும்
என் சுவாசம்.

பிள்ளைத்தாச்சி மீனைப் பிடித்தால்
திருப்பிக்கடலில் விட்ட அப்புமார்
கடல்நிலம் காலால் உரசிப்
பெருவிரல் கொண்டு அளந்தவர்கள்.


முகம்பார்க்கும் முழுநிலவே
கடல்வயிறே தீய்கிறது.
உன் முகத்தில்
கறையாய்த் தெரிகிறது.

கடலின்
அடிவயிற்றில் கொள்ளி சொருகும்
மனிதப் பதர்கள்
இருகரையும் அலறும் குழந்தைகளுக்கு
சாம்பலையா ஊட்டுவர்
வரும் நாளில்.

மீன்கள் இல்லாக் கடலிலே
படகு வாழ்தல் கூடுமோ?
பவளப் பாறை இல்லையே
நாளை
கடலும் மீனைத் தேடுமோ?
                                                               -சிவம்.

No comments:

Post a Comment