Saturday 5 March 2016

கீற்று.



ஒரு புல் நுனி  
ஏந்திக் காத்திருக்கும்
பனித்துளிக்குள்  
அடகு வைத்த
எத்தனை காலைப்பொழுதுகள்
இன்னமும் மீட்கப்படாமல்
காலம் லத்தில் விட்டாயிற்று.

பூவரசங்குழலில் மடித்துவைத்த
நமது பிஞ்சுக்குரல்கள்
அவிழ்ந்து விழுந்த காற்றுவெளி
நம் இறுதி மூச்சையாவது  ஏந்துமா?

கோவில் முகப்பில்
தோரணம் கட்டிய கயிற்றில் தொங்கப்போட்ட
நமது சின்னச்சின்னச்சேட்டைகள்
எந்த வயதானவர்
பொக்கைவாயில் மடிப்போடு சிக்குண்டிருக்கும்?


 
அரிச்சந்திர மயான காண்டம்,
சங்கிலியன்,
வெடியரசன்
நாடகஙகள் பார்த்த ஞாபகங்கள்
எத்தனைமுறை தேர் ஓடியபின்னும்
தெற்கு வீதிப் புழுதிக்குள்
அரிதாரம் கலையாமல்
கிடுகுவேலியின் நீச்சல்களுகூடாக
கூனல் விழுந்த பார்வையோடு.

வாகனசாலைக் குதிரைக்கு
கொம்பு முளைத்த
ஒரு இரவுபோல்
வாழ்க்கை.

தீவட்டிக் கரியெடுத்து
இழுத்துவைத்த
மீசையோடு பேசும்
வீரம்.

 
கோபுர நிழலில்
இளனிக்கோம்பை கிராந்தும் 
பசுமாட்டைக் கலைத்து  
சுற்றி மதில்கட்டும் ஜீவகாருண்யம்.

எல்லாம் கடந்து
பாலத்தடிவரை
என்னோடு நடந்துவந்த  மேகத்துள்ளிருந்து
ஒரு கீற்று
புத்தர் வருவாரென எண்ணி வெட்டிச்சாய்த்த
அரசமர விருட்சத்தில் வாழ்ந்த அணில் ஒன்றுக்கு
பாதை காட்டுகிறது.
 -சிவம்.




No comments:

Post a Comment