Tuesday 28 February 2017

உடுக்குச் சத்தம்!

உடுக்குச் சத்தம்!

தீவின் காற்றிலே
சடை பின்னும் வயல்வெளியில்
வெய்யில் விழுந்து கால் அலம்பும்
வேலங்குளக் களிமண் எடுத்துக் கடவுள் செய்த
நினைவுகள் இன்னும்
குழையும் நிலையில் ஈரமாகத்தான் இருக்கின்றன.


ஐயனார் கோவில் முகப்பில்
பொந்து விழுந்த
விருட்சமாய் ஒரு அரசமரம்
இன்னும் மனதில்
வேரூன்றி நிற்கிறது.

மண்ணில்
இப்போது இல்லை.

அந்த அரசமரப் பொந்து
இல்லாதவனின் பக்திக்காய்
ஒரு வைரவ சூலத்திற்காய்
இயற்கை கட்டிய கோவில்போன்று அழகானது.

கந்தையா அண்ணனுடைய
நெற்றியில் வட்டப்பொட்டு,
உடுக்குச் சத்தம்,
வடைமாலை, தேசிக்காய்மாலை,
படையல், பூசை, பக்தி, கலையாட்டம்
பார்த்த கண்கள் இன்னும்
சூலத்தில் குத்தி நிற்கின்றன.

ஐயனார் கோவில் முகப்பில்
பொந்து விழுந்த
விருட்சமாய் ஒரு அரசமரம்
மனதில்
வேரூன்றி நிற்கிறது.

மண்ணில்
இப்போது இல்லை.

ஒரு
ஆதிப் படையல் மரம் வெட்டப்பட்டதும்
சைவ ஆதிக்க மரம் நடப்பட்டதும்
நிகழ்வானதால்
யாருக்கும் நிழல் இல்லை.
-சிவம்.

No comments:

Post a Comment