Friday, 18 May 2018

"சதாசிவ வித்தியாசாலை"


"சதாசிவ வித்தியாசாலை"
தொடர்: 2
ஆயிரத்துத் தொழாயிரத்துப் பதினாறாம் ஆண்டு வரை மேற் சொல்லிய உடையார் திரு. சு. வேலுப்பிள்ளையவர்கள் முகாமைக்காரனாகக் கடமையாற்றித் தனது வயோதிபகாலத்தில் விலக, அவரது மகன்
திரு வே. வயித்தியனாத உடையார் அவர்கள் முகாமைக்காரனாகி மூன்று ஆண்டுகள் வரை கடமையாற்றினார்.  இவர் காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் தொகை அதிகமான காரணத்தால் வித்தியாசாலையைத்திறம்பட நடாத்துவதற்குப்பணக் கஸ்டம் தடையாயிருந்தது.  ஆசிரியர்களுக்குச் சம்பளம், தளபாடங்கள் ஆகியவற்றிற்கு முன்னையிலும் பார்க்கக் கூடிய பணந்தேவையாயிருந்தது. இவற்றைச் சமாளித்து நடாத்த முகாமைக்காரனால் முடியாதிருந்தது.  இந்நிலையை நன்குணர்ந்த முகாமைக்காரர் திரு. வே. வயித்தியனாத உடையார் அவர்களும், திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் மற்றும் பெரியார்களும் அக்காலத்தில் பணவசதியுடனும் பொது நலநோக்குடனுமிருந்த
திரு. . சுப்பிரமணியம் ( மணியத்தார்) அவர்களை மனேஐராக நியமித்தனர்.
இவர் தமது பரந்த பொது நல சிந்கையிற் கல்வி வளர்ச்சிக்குப் பிரதான இடங்கொடுத்து வித்தியாசாலையைப் பல வழிகளிலுஞ் சிறப்புறும் வண்ணஞ் செய்தார். ஆசிரியர்களின் வேதனத்தை மாதா மாதங் கொடுத்து வந்தனர். இவ்வாறு பல முன்நேற்றங்கள் செய்து ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தாறாம் ஆண்டு சில வசதியீனங்களினிமித்தம் விலகிக் கொள்ள
திரு. வயித்தியனாதர் ஐயம்பிள்ளை அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டு ஓராண்டு வித்தியாசாலையத் திறம்பட நடாத்தினார்.  இவர் விலக திரும்பவும் ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தேழாம் ஆண்டு
திரு. சுப்பிரமணியம் ( மணியத்தார்) முகாமைக்காரனாக நிறமிக்கப்பட்டார்.
இது காலவரை இவ்வித்தியாசாலை மண்சுவரையும், ஓலைக்கூரையயுங் கொண்டதாயிருந்தது.  மாணவரின் தொகை வருடா வருடம் ஏறிவந்தது. இதனால் போதிய இடவசதியற்றிருந்தது. பாடசாலைக்கட்டிடம் அரசினரின் புதிய பிரமாணங்களுக்கு ஏற்ப அமைந்திலது.  தளபாடங்கள் போதிய அளவாக இல்லாமலிருந்ததோடு அவைகள் யாவும் புதிய முறைப்படி அமைந்தவைகளாகவும் இல்லை.  இக்குறைகள் யாவற்றையும் பூர்த்தி செய்து வித்தியாசாலையை நடைமுறையில் இயக்குவதற்குப் பெருந்தொகைப் பணந் தேவைப்படுவதாயிற்று. 
முகாமைக்காரர் திரு. . சுப்பிரமணியம் அவர்களால் இவற்றை நிறைவேற்றுவதற்கு முடியாது என்பதை ஊரிலுள்ள கல்வி அபிமானிகளும் மலாயா அனலைவாசிகளும் உணர்ந்தனர். இவ்டயத்தில் அதிக முயற்சியும் பங்குங் கொண்டவர்கள் மலாயா அனலைவாசிகளேயாவர்.  இவர்கள் வித்தியாசாலையை ஊரவர்களின் பொறுப்பில் விடும்படியும், விடின் தாங்கள் முன்னின்று போதிய உதவி செய்து தற்சமயம் உள்ள குறைபாடுகளை நிவிர்த்தி செய்வதாகவும் முகாமைக்காரரிடந் தெரிவித்தனர்.  முகாமைக்காரர் பல ஆலோசனைகளின் முடிவில் இவ்வேண்டுகோளுக்கிசைந்தனர்.
1929 ஆம் ஆண்டு வைகாசிமாதம் 5ம் திகதி ஒருமகாசவை கூட்டப்பட்டது. ‘அச்சபையின்அங்கீகாரத்தோடுவித்தியாசங்கம்” என்னும் பெயருடன் ஒரு சங்கம் நிறுவப்பட்டது. அதற்குரிய பிரமாணங்களும் ஆக்கப்பட்டன. சங்கநிருவாக உறுப்பினர்களாக ஒன்பது பேர் தெரிவு செய்யப்பட்டனர்.  அவர்களில் ஒருவரான திரு. . சுப்பிரமணியம் அவர்கள் திரும்பவும் வித்தியா சங்கத்தின் கீழ் முகாமைக்காரராக நியமிக்கப்பட்டார். இப் புதிய முன்னேற்றப் பாதையை உண்டாக்க ஊரவர்களின் சார்பாயும், மலாயா அனலைவாசிகளின் பிரதிநிதியாயும் நின்று சலியாது உழைத்தவர் திரு. டாக்டர். . சோமசுந்தரம் அவர்களாவர். இவரின் விடாமுயற்சியும், காருண்ய சிந்தையும் இவ்வித்தியாசாலையின் முன்னேற்றத்திற்குப் பூரணபலமாக அமைந்தது என்று கூறின் மிகையாகாது.
இப்புதிய நிருவாகசபையார் இவ்வித்தியாசாலையின் பொறுப்பை ஏற்று ஆசிரியர்களின் சம்பளம், உபகரணங்கள் ஆதியாந் தேவைகளைப்பூர்த்தி செய்து நடாத்தினர்.  கட்டிட வேலைக்கான வழி வகைகளையாராய்ந்தனர்.  மலாயா அனலைவாசிகளின் பூரண ஆதரவுடன் ஊரவர்களின் உதவியையும், அதிட்டலாபச் சீட்டு மூலம் பெற்றபணத்தையும் பெற்றுக்கட்டிடத்தின் வேலையை ஆரம்பித்தனர். புதியகட்டிட வேலை ஆரம்பிக்கு முகமாக பழைய கட்டிடத்தை அண்மையிலுள்ள திருமதி கமலம்மா அவர்களின் காணியில் மாற்றியமைந்தனர்.  புதிதாக அமைக்குங் கட்டிடத்தின் அமைவு எவ்வாறு எனத் தீர்மானிக்கும் பொறுப்பை டாக்டர் . சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர் பல இடங்களுக்குஞ் சென்று, அநேக வித்தியாசாலைகளைப்பார்வையிட்டு, அநேக அபிமானிகளின் கருத்துக்கிசையவடிவமைந்த இக்கட்டிடத்தின் மாதிரிப்படமொன்றைச் சமர்ப்பித்தார். இப்படத்தின்படி வித்தியாசாலையை அமைப்பதற்கு திருமதி கமலம்மா அவர்களினால் கொடுக்கப்பட்ட காணி போதியதாக இல்லாததால் மீதியான காணியைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. மீதியான காணியின் ஒருபகுதியை இதன் அண்மையில் அமைந்திருக்கும்முருகமூர்த்தி கோயில்ஆதனத்திலிருந்து ஊரவர்கள் பூரண சம்மதத்துடன் பெற்றார்கள். மறுபகுதியை இந்நிலையை நன்குணர்ந்த வடக்குக்காணிச் சொந்தக் காரரான
திரு. . வைத்திலிங்கம் அவர்கள் தருமமாகக் கொடுத்து உதவினார்கள்.  அவரின் இத்தருமமே இப்பாரிய கட்டிடத்தை ஆக்க வழிசெய்தது. எனவே இவ்வித்தியாசாலைக்கட்டிடம் காலஞ் சென்ற சிறிமதி கமலம்மா
 திரு. வைத்தியலிங்கம் ஆகிய இவர்களால் உபகரிக்கப்பட்ட காணிகளிலும் முருகமூர்த்தி கோயிற் காணியிலிருந்து சேர்க்கப்பட்ட துண்டுக்காணியிலும் அமைந்தது. கட்டிடவேலை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருங்கால் பணமுடை காரணமாகவும், சபையினருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் உரிய காலத்தில் நடைபெறாது தடைப்பட்டது காரணமாகவும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுவதைக்கண்ட டக்டர் சோமசுந்தரம் அவர்கள் கட்டிடங்கட்டிமுடிக்கும் கொறுப்பு முழுவதையும் ஏற்று நடாத்தினார்.  தாம் பணஞ்சேர்க்கும் விடயமாக வெளியூர்கள் செல்லவேண்டியிருந்ததால் கட்டிடவேலையின் மேற்பார்வையாளர்களாக தமது தமையனார் திரு. . சுப்பிரமணியம் அவர்களையும் காரியதரிசி திரு. . ஆறுமுகம் அவர்களையும் நியமித்தார்.  இவர்களின் விடாமுயற்சியால் கட்டிடவேலை துரிதமாக நடைபெற்றது. டாக்டர் . சோமசுந்தரம் அவர்கள் திரும்பவும் மலாயா கொழும்பு ஆதியாம் பல விடங்களுக்குஞ்சென்று அங்குள்ள அனலைவாசிகளிடத்தும், நண்பர்களிடத்தும், கல்வி அபிமானிகளிடத்தும் பணத்தைச் சேகரித்து இக்கட்டிடத்தைப்பூர்த்தி செய்தார். ஊரவர்கள் பண உதவியும் சரீர உதவியுஞ் செய்தார்கள்.
திரு. சுப்பிரமணியம் அவர்கள் முகாமையினின்றும் நீங்க
திரு. வே. செல்லப்பா அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கபட்டார்.  இவர் வித்தியாசாலைக்கட்டிடவேலையிலும் அதன் வளர்ச்சியிலும் கருத்துக் கொண்டு உழைத்த பெரியார்களில் ஒருவராவர். 1934 ஆம் ஆண்டு வரை வித்தியாசாலையைத்திறம்பட நடாத்தினார். இவர் காலத்தில் கட்டிடவேலைபூர்த்தியானது.  துற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கட்டிடத்திலிருந்து இப்புதிய கட்டிடத்திற்கு வித்தியாசாலை மாற்றப்பட்டது.  மாணவர்களின் தொகை அதிகரிக்க ஆசிரியர்களுடைய எண்ணிக்கையும் பெருகியது. இற்றைவரை ஐந்தாம் வகுப்பு வரையிருந்த இவ்வித்தியாசாலையில் மேல்வகுப்புகள் வைத்து நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.  வித்தியாசாலை புதிய ளபாடங்கள் உபகரணங்கள் ஆகியன கொண்டு சிறப்புற்று விளங்கியது.
-தொடரும்.
இந்த அரிய வரலாற்றுத் திரட்டை  ஆவணப்படுத்தியவருக்கு நன்றி.
நன்றி: சதாசிவன்.


No comments:

Post a Comment