Friday 1 May 2020

மூசாப்பு.







ஏழு கடல் காத்து வந்து மோதலயே
ஏத்திவைச்ச தீபத்தடி ஆடலயே
ஆழத்தில முத்தை வைச்ச தாயவளே
அள்ளி வரும் கரையிருந்தும் போதலயே

கட்டுமரம் மொட்டுவிட காத்திருந்தா
கருகிவிட இடிவிழுந்தா  நியாயமில்ல
செக்கலுக்கு பாய்விரிச்சு போனவர
வெள்ளாப்பு வந்த பின்னும் காணவில்ல

ஓலைப் பறி நிறைஞ்ச கடல் மாறவில்ல
அனுபவத்தைச் சொல்லித்தர யாருமில்லை.
பட்டினிக்கு கடலிருந்தா பஞ்சமில்ல
மீனுக்கிப்ப பவளப்பாறை  தஞ்சமில்ல

பொத்தலுக்குள் வலையிழுக்கும் மணற்கும்பி
ஒத்தப்பனை நிழலைப்போல தனிச்சிருக்கு
தத்துப்பிள்ள நினைப்பிலதான் வாழ்விருக்கு
உப்படைஞ்ச உடம்புக்குள்ளும்  சோர்விருக்கு

நடுக்கடலில் துடுப்புத்தடி உடைஞ்சாலும்-உயிர்
நாலு திசை வெள்ளி வைச்சுக் கரையேறும்
உடுக்கடிக்க எறும்புத்தோலு தேடுவதால் -ஊர்
உள்ளங்கையில் சோகிவைச்சு விலைபேசும்.
சூரியரை தூக்கிவர வலைவிரிச்சா
பாசியிலை தாளையிலை மேலவரும்
கூதலையே போர்த்தபடி கரை மிதிச்சா
குண்டுமணிச் சில்லறைக்கு ஏலம் வரும்.

-சிவம். 
01.05.2020

No comments:

Post a Comment