வணக்கம் அனலை உறவுகளே!...
கல்விக்காய் கரம் கொடுப்பதே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்திருக்கும் அனலை கல்வி அறக்கட்டளையின் மற்றுமொரு உதவித் திட்டம் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.
வடலூர் மற்றும் தெற்குப் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பங்கு பற்றிய 24 மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுத்திட, அவர்களது கல்வி, விளையாட்டு, சமூக சீர்திருத்த வினைத்திறனை மேம்படுத்த அவர்களது பெயரில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு நிதி வைப்பில் இடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 1988ம் ஆண்டு O/L Batch சதாசிவ வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் தங்களது சக மாணவிகளான (1990 இல் படகு விபத்தில் உயிரிழந்த) செல்வி சித்திரா கோபாலகிருஷ்ணக் குருக்கள், செல்வி சசிகலா திருநாவுக்கரசு, செல்வி சூரியவதனி குமாரசாமி மற்றும் செல்வி கலாநிதி கதிரவேலு ஆகியோரின் நினைவாக 89,000/- ரூபா நிதியுதவியை இம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் நிதி வைப்பிலிட்டுள்ளார்கள். தொடர்ந்தும் வருடா வருடம் அவர்களுக்கான இவ்வுதவி கிடைத்திடச் செய்வார்கள்.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த இலங்கை வங்கியின் முகாமையாளர் மாணவர்களுக்கான புத்தகப் பைகளையும் அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களின் வங்கிப் புத்தகங்களை முன்னாள் வடலுர் அ.த.க. பாடசாலை ஓய்வு நிலை அதிபர் திருமதி கௌரி கேதீஸ்வரநாதன் அவர்கள் வழங்கி வைத்தார்.
கொரோனாத் துன்பியல் சூழ்நிலையிலும் சுகாதார மற்றும் சமூக இடைவெளி முறைகளைப் பேணி இந்த நிகழ்வினைத் திறம்பட நடாத்திய அனலை சதாசிவ மகாவித்தியாலய அதிபர் திரு நா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், ஓய்வு நிலை அதிபர் திருமதி கௌரி கேதீஸ்வரநாதன், வடலூர் அ.த.க. பாடசாலை அதிபர் செல்வி ச. விக்கினேஸ்வரி, தெற்கு அ.த.க. பாடசாலை அதிபர் செல்வி வை. துஷ்யந்தி, மதிப்பிற்குரிய வெ. நாராயணாக் குருக்கள், உப அதிபர், நூலகர், மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், மாணவர்களின் வளர்ச்சிக்கு அனலை கல்வி அறக்கட்டளை எப்போதும் முன்னின்று கரம் கொடுக்கும் என்பதனை அறியத் தருவதோடு மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவிகள் புரிய புலம் பெயர் உறவுகளான நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம்!
நல்லதோர் மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்!
மாணவர் எழுச்சியே எங்கள் சமூகத்தின் வளர்ச்சி!!
ஆதரவுக் கரம் நீட்டும் அனைத்து உள்ளங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்!!
No comments:
Post a Comment