Tuesday, 5 August 2014

பெருமழை...?

நல்லார் ஒருவரும் இல்லையென்றால் பெய்யுமா பெருமழை...?
-வடபுலத்தான்
கோடையென்றால் இப்பிடியொரு கோடையை என்ரை வாழ்நாளில நான் கண்டதேயில்லை.
trocken
வரட்சியெண்டாலும் இப்பிடியொரு வரட்சியைப் பார்த்ததில்லை.
நீர்ப்பிடிப்பில்லாமல் தென்னைகளெல்லாம் வட்டுமுறிஞ்சு விழுகுதுகள்.

முற்றத்தில நிக்கிற பூங்கண்டுகள் எல்லாம் வாடிச்சுருண்டு பட்டுக்கொண்டு போகுதுகள்.

றோட்டில ஊத்தியிருக்கிற தார் உருகிக் காலோட வருகுது. சைக்கிளோடினால், ரயரோட ஒட்டுது.

வெக்கை தாங்கேலாமல் நாய்கள் ஓடித்திரியுது.

மரங்கள் எல்லாம் வாடிச் சோர்ந்து போகுது.

ஆசையோட நட்டுப் பராமரிச்சு, வளர்த்த மாதுளை, தோடை, எலுமில்லையெல்லாம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட கணக்கில படுகிறதா நிக்கிறதா எண்டு குழம்பிக்கொண்டிருக்குதுகள்.

ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் இல்லை. தரவையில எந்த நேரமும் நெருப்புப்பிடிக்கலாம் போல இருக்கு.

தண்ணியில்லாமல் மாடுகள் சாகுது.

கிணற்றில தண்ணியில்லாமல், மணல் குவியுது.

இது இயற்கையின்ரை வஞ்சனை. இதுக்கு ஆர்தான் என்ன செய்ய முடியும்? எண்டு நீங்கள் கேட்கலாம்.

'நல்லார் ஒருவர் பொருட்டுப் பெய்யுமாம் பெருமழை...' எண்டு எங்கட முன்னோர் சொல்லுவினம்.

இப்ப மழை பொய்த்துப்போனதுக்கு நம்மவர்களும் நாங்களும் பொய்த்ததுதான் காரணமோ....

நாடு பிழைத்தால் நாலும் பிழைக்கும் எண்டு சொல்லுவினம்.

நாட்டைப் பிழையாக எல்லோருந்தான் ஆக்கி வைச்சிருக்கினம்.

இதில எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எண்ட பேதமெல்லாம் கிடையாது.

ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் நடத்தி, இனவாதத்தை வளர்த்து, அந்த வாதநோயில நாடே படுத்த படுக்கைக்கு வந்திருக்கு.

எண்டாலும் ஆரும் இதை உணருகிறதாயில்லை.

இனவாதத்தை ஒவ்வொருத்தரும் ஊத்தி ஊத்திக் கோப்பி குடிக்கிறமாதிரிக் குடிக்கினம். சிலபேர் கள்ளுக்குடிக்கிறமாதிரி போதை ஏற ஏறக் குடிச்சுக்கொண்டிருக்கினம். இன்னும் சிலபேர், பியரடிக்கிறமாதிரித் தலைகால் தெரியாமல் குடிக்கினம்.

இப்பிடியெல்லாம் அளவு கணக்கில்லாமல் இனவாதத்தைக் கரைச்சுக் குடிக்கக் குடிக்க, போதையேறி, அவனவன் தலைகால் புரியாமல் ஆடுகிறான்.

இப்ப நாட்டில சாராயக்கடையை விட இனவாதக்கடைகள்தான் எல்லா இடத்திலயும் முளைச்சிருக்கு.

சாதிக்கொரு கட்சி எண்டு இந்தியாவில இருக்கிறதைப்போல, இஞ்ச இலங்கையில இனத்துக்கு நாலு கட்சி எண்டு முளைச்சிருக்கு.

இது நல்லதுக்கில்லை. நல்லதுக்கான சகுனமும் இல்லை.

இப்ப வரட்சி போட்டு உலைக்குது எண்டால், இந்த வரட்சியை எப்பிடிச் சமாளிக்கலாம் எண்டதைப்பற்றிச் சிந்திக்கிறதுக்கோ, இதைப்பற்றிக் கூடிக்கதைக்கிறதுக்கோ கூட நம்மட ஆக்களுக்கிடையில ஒற்றுமையில்லை.

ஆளாளுக்கு அரிவாளோட நிக்கிற காட்சிதான் கண்ணுக்குள்ள வருகுது.

இப்பிடி அரிவாளைத் தூக்குகிற காலம் ஒண்டும் தூரத்தில இல்லை.
அது நம்மட காலடியுக்குள்ளதான் இப்ப இருக்கு. துவக்குத் தூக்கிப் பீரங்கி அடிச்சதெல்லாம் போய்... இனிக் கத்தியும் அரிவாளும் தூக்கிற காலம் எண்டு ஆகியிருக்கு.

இப்பவே ஆஸ்பத்திரிகளிலயும் பொலிஸ் நிலையங்களிலயும் அரிவாள் கேஸ்களை நீங்கள்  பாத்திருப்பியள்.

சனங்கள் பஞ்சத்திலயும் பசியிலயும் வரட்சியிலயும் தவிச்சுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில இப்படி அநியாயம் நடக்குது எண்டால்....

நாடு சீரழிஞ்சு கொண்டிருக்கு எண்டுதானே அர்த்தம்.

இதை நல்ல வழிக்குக் கொண்டு வாறது ஆற்றை பொறுப்பு. அதாவது இந்த நாட்டில நல்ல விசயங்கள் நடக்கிறதுக்கு – அந்தப் பெரிய பூனைக்கு மணியைக் கட்டிறது ஆர்?

இனவாதத்தைக் கைவிட்டு இன ஐக்கியத்தைப் பேசி, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து நல்ல காரியங்களைத் தொடங்கலாம் எண்டால்....

அதுக்குத் துரோகிப்பட்டம். சமூகப் புறக்கணிப்பு. இனத்தூய்மைப்பேச்சுகள்....

இப்பிடியிருந்தால் நாட்டில நெருப்பு றோட்டில மட்டுமல்ல வயிற்றிலயும்தான் மூளும்.

வரட்சி ஊரில மட்டுமில்ல உள்ளத்திலயும்தான் காயும்.

நல்லவை செய்து பெரியோர்களாகினால்தான் பெய்யும் பெருமழை. இல்லையெண்டால் சிறுதூறலும் இல்லை எண்டதுதான் உண்மை.

நல்லார் ஒருவரும் இல்லையென்றால் பெய்யுமா பெருமழை...?

 http://www.thenee.com/html/060814-1.html

No comments:

Post a Comment