தூரமில்லை.
உச்சி வெய்யில் உறிஞ்சி வைத்து
கத்தாளை வளர்ந்திருக்கு.
உப்புக் காற்றை வாங்கிவைச்சு
உடம்பை நல்லா வளர்த்திருக்கு.
இது கடலம்மா சூடி வைத்த பூ மரமா
தன் கரைக்கு அவ தேடிவைத்த தாவரமா
நீல நிறச்சேலையைத்தான்
நீளமாக நெய்து கட்டி
மோக முள்ளுக் குத்துமென்று
மடி ஆழத்தில முத்தை வைத்தாய்.
காலமுள்ளுக் குத்திக்குத்தி
கரையைக் கொஞ்சம் அரித்ததாலே
கரும்பாறை முதுகுமேலே அது
பட்ட காயம் பதிந்திருக்கு.
பாதையிலே கல்லும் மண்ணும்
வெய்யிலையே சுட்டது.
கடல் பார்த்து நடந்தபோது
காலில் ஈரம் பட்டது.
ஆழ்கடலின் காற்றுவந்து
ஆழ்மனதில் வீசியது.
அனல் வெய்யில் பொழுதின்மேல்
நிழல் கொஞ்சம் பூசியது.
கண்ணுக்குள்ள தூக்கிவைத்தால்
உன் பொன்னழகு
உயிர் போகும்வரை போதுமம்மா.
கரையிலே நின்று உனைக்
கணப்பொழுது பார்த்து நின்றால்
மனசுக்குள்ளே பாரமில்லை.
ஆர்ப்பரிக்கும் ஆசையெல்லாம்
அலைநுரையாய்ப் போனபின்னே
உன்மனதும் என் மனதும்
ஒன்றுக்கொன்று தூரமில்லை.
-- சிவம்.
No comments:
Post a Comment