Wednesday, 11 March 2015


புலம்பெயர்வாழ் தமிழர் தம் தாய்நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள்
- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் புலம் பெயர் வாழ் கல்வியாளர் சிலருடனான கலந்துரையாடல் ஒன்று 07.03.2015 சனிக்கிழமையன்று நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய உரையாடலின் போது புலம்பெயர் தமிழர் தம் தாய் நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய பல்வகைப்பட்ட சிந்தனைகளை முன்வைத்தார்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் தம் தாய் நிலத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் என்ற பிரிவினுள் விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்ற அடிப்படையிலும் அணுகவேண்டும். சமூகம் என்ற பிரிவினுள் கல்வி, உயர்கல்வி, கலை கலாசாரம், சமயம், சுகவாழ்;வு, வேலைவாய்ப்பு போன்றனவாகப் பார்க்கப்படலாம்.

1. புலம்பெயர் வாழ் தமிழர்கள் தாம் வாழும் நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துதலின் ஊடாக அந்த நாட்டை எமது அரசியல் பிரச்சனைகளில் ஈடுபட தூண்டமுடியும். அந்நாடுகளின் உள்ளுர் அரசியலிலும் நாடாளுமன்ற அரசியலிலும் ஈடுபடுவதன் மூலம் எமது பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்துவதோடு அவர்கள் வாழும் நாட்டின் மக்களுக்கும் எமது நியாயப்பாட்டை உணர்த்தமுடியும். 

2. புலம்பெயர் நாட்டில் வாழும் மக்கள் இரு நாட்டு குடியுரிமை பெற முயற்சிக்கவேண்டும். இலங்கையில் சென்ற ஆட்சியின் போது இது இறுக்கமாக இருந்தாலும் புதிய ஆட்சி மாற்றத்தில் ஒரு விட்டுக்கொடுப்பு தெரிகிறது. எனவே இதனைப்பயன்படுத்தி இரு நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கு நிறுவன ரீதியாக முயற்சிக்க வேண்டும். இதைச்செய்வதன் மூலம் எமது குடித்தொகை எண்ணிக்கை, வாக்குப்பலம் என்பன அதிகரிக்கும்.

3. புலம்பெயர் தமிழர்கள் இங்கு விவசாய பொருளாதார அபிவிருத்தியிலும், கைத்தொழில் அபிவிருத்தியிலும், வர்த்தக அபிவிருத்தியிலும், கல்வி வளர்ச்சியிலும், மருத்துவ துறைகளில் மேம்பாட்டுக்கும் முதலீடுகளை செய்யமுடியும். இம்முதலீடுகளை நாம் நேரடி முதலீடுகள் எனவும், இணைந்த முதலீடுகள் எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். இணைந்த முதலீடு எனும் போது புலம்பெயர் மக்களும் இலங்கையில் வாழ்வோரும் இணைந்து முதலீடு செய்வதும் ஒரு வகையாகும். தென் இலங்கை முதலீட்டாளர்களுடன் இணைந்தும் முதலீடு செய்யப்படலாம். மத்திய அரசுடன் இணைந்தும், மாகாண உள்ளுராட்சி சபையுடன் இணைந்தும் இம்முதலீடுகள் செய்யப்படலாம். சில பாரிய முதலீடுகள் பல் தேசிய கம்பனிகளுடன் இணைந்து செய்யப்படுவதும் சாத்தியமே.

4. சமூக மேம்பாடு என்று சொல்லும்போது கல்வித்துறையில் ஆரம்ப, இடைநிலைக் கல்விக்கும், உயர் நிலைக்கல்விக்கும் இவர்கள் பெருமளவு உதவலாம். பாடசாலைக் கல்லூரி மட்டங்களில் புலம்பெயர்ந்து வாழ்வோர் - பெருமளவு உதவி செய்கின்ற போதிலும் அவர்கள் இங்குள்ள பாரிய கல்லூரிகளுக்கே பெருமளவு உதவுகின்றார்கள். பிரதேசத்திலுள்ள சிறு பாடசாலைகள் கவனிக்கப்படுவதில்லை. இதில் ஒரு சமமான வளர்ச்சிப்பரம்பல் தேவை. மேலும் இங்குள்ள பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் போன்றவற்றை கிராம மட்டங்களிலும் கற்பிப்பதற்கு உதவிகள் செய்யலாம். உயர் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதுள்ளோருக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று கொடுப்பதுடன் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசிலையும் வழங்கமுடியும்.

5. மருத்துவ துறையைப் பொறுத்த வரையில் தனியார் மருத்துவமனைகளை உருவாக்கலாம். இம்மருத்துவமனைகளில் புலம்பெயர் வாழ் மருத்துவர்கள் தமது விடுமுறை காலத்துக்கு வருகை தந்து உதவலாம். முக்கியமாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் உதவிகள்  பெருமளவுக்கு தேவைப்படுகின்றன.

6. எமது தாய்நிலத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு உதவி செய்யலாம். இங்குள்ள ஆழமற்ற குடாக் கடல்களை நீச்சல் தடாகங்கள் போன்று சுத்தப்படுத்தி பாதுகாப்பு வலைகளை அமைத்து உருவாக்கமுடியும். ஆழமற்ற குடாக்கடல்களில் காணப்படுகின்ற கடல் தாவரங்களின் சூழலைப் பேணுவதன் மூலம் சுற்றுலாவுக்கான அழகைப் பேணுவதோடு அதனை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கும் முயற்சிக்கலாம்.

7. கிராமங்கள் தோறும் நூல் நிலையங்களையும், சிறுவர் பூங்காக்களையும் அமைத்து வழங்கலாம்.ஏலவே உள்ள சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்றவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் இதனை அபிவிருத்தி செய்யலாம். புலம்பெயர் தமிழர்கள் தம் தம் பாரம்பரியத்தை ஊர்களில் நிலை நிறுத்துவதற்காக தம் தாய் தந்தையரின் பெயரில் இவ்வாறான நற்கருமங்களை ஆற்றமுடியும்.
உதாரணமாக :- ஒருவர் தனது தாய் தந்தையரின் பெயரில் உருவாக்கி பூரணப்படுத்தி கொடுக்கும் சிறுவர் பூங்கா, நூல்நிலையம் என்பனவற்றை அவ்வூர் அமைந்துள்ள பிரதேச சபையின் நிர்வாகத்திடம் கையளிக்கலாம்.

விவசாயச் செய்கை இங்கு இன்றும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாது குடும்ப அலகு நிர்வாகத்தினுள்ளேயே காணப்படுகின்றது. இதனை மாற்றி கூட்டுறவு அடிப்படையில் விவசாயப் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள், மீன்பிடித் தொழிலுக்கான பண்ணைகள் என்பவற்றை உருவாக்கி அங்கு பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கம் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக இவற்றில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகளவு வழங்கமுடியும்.

8. எந்த பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறுவது முக்கியமானதாகும். கட்டிடங்களை உருவாக்குவதற்கு மாத்திரமன்றி கைத்தொழில், விவசாய, மீன்பிடி வர்த்தகத்துறைகளுக்கான அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குவதற்கும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படுவது இன்றியமையாததாகும். இங்கு துறைசார்ந்த நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் இல்லை. இதனை உள்ளுர் நிபுணர்களைக் கொண்டும், புலம்பெயர் மக்களிடம் உள்ள நிபுணர்களைக் கொண்டும் அமைக்கலாம். இந்நிறுவனத்தின் தொடர்புகளுக்;கு தகவல் தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்துதல் சாத்தியமே.
உதாரணமாக :- Skype வலையமைப்பு முறை மூலம்; நிபுணத்துவ ஆலோசனை வழங்குவோரும் பயனாளிகளும் கலந்துரையாடமுடியும்.

9. புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வலைத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்ற போதிலும் அவை பெருமளவு தமிழர் தம் அரசியல் சார்ந்ததாகவே விளங்குகின்றன. பெருமளவு வலைத்தளங்கள் அறிவு ரீதியாக பிரச்சினைகளை அணுகாது உணர்வு ரீதியாகவே அணுகுவதை அவதானிக்கமுடிகிறது. உண்மையில் பொருளாதார, சமூக, கல்வி மேம்பாட்டை மையப்படுத்திய அபிவிருத்தி சார் விடயங்களே எமக்குத் தேவை. 

இறுதியாக புலம்பெயர் வாழ் மக்கள் ஒவ்வொருவரும் தன் தாய் மண்ணின் முன்னேற்றத்திற்கு ஒரு தர்மகாரியம் செய்யவேண்டும் என தீர்மானிப்பார்களே ஆயின் எமது தாய் நிலம் வளம்பெற அவர்களின் அந்த தீர்மானமே போதுமானதாக இருக்கும்.

சமீப காலங்களின் புலம்பெயர் தமிழர்களால் பெருமளவுக்கு கோயில்கள் அழகான முறையில் கோபுர வசதியுடன் கட்டப்பட்டு வருவது போல பொருளாதார, கல்வி, சமூக மேம்பாட்டுக்காகவும் இவர்கள் தீவிரமாக உழைப்பார்களேயாயின் எமது பிரதேசத்தில் பல இன்னல்கள் விரைவில் தீரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன………..http://www.thenee.com

No comments:

Post a Comment