Monday, 8 June 2015

பீலிப்பெட்டி.




பீலிப்பெட்டி.

தட்டத்தனிய ஒத்தையா ஒரு துலாவை
எட்டுவைச்சுத் தூக்கிப்போன
என்னூரு முருகர் தோளும்,

சித்திரங்கள் செய்து  வைத்து
சரித்திரங்கள் சொல்லி வைச்ச
ஐயனாரின் பெரும் தேரும்,

நாற்குளங்கள் நீர் நிறைஞ்சு
நல்ல தண்ணி ஊற்றோடு
முக்குடத்து வர்ணனையில்
முகம் சிவந்த பெண்ணாளும்,

மாம்பூவின் நிழலெடுத்து
தேன்குதிரை செய்துகாட்டும்
பூம்பாவை தடம் தேடி
பொழுதெல்லாம் கரையவிட்ட காளைகளும்,


பொற்கொல்லர் பக்குவத்தில்
மண்ணளையும் உழவனுக்குள்
பொன்னைவிட செந்நிறமா
புதைஞ்சிருக்கும் மனக்கூடும்,

முருகன்  கோவில் முன்னால
மனசுக்குள்ள   நிக்கவைச்சு
திருவாசகம் எழுதிவிட்ட
பள்ளிச் சுவரும்,

இன்னும் இன்னும்
இன்னும் பல யுகங்கள்
மூச்சுவிட்ட காற்றுக்குள்ள
முங்கி முங்கி எடுத்தாலும்
பாச்சுடராய் ஒளி தெறிக்கும்.
பழைய நினைவை
நூற்பதற்கு தறி கொடுக்கும்.   
                                                                    - சிவம்.      
                                                                     

No comments:

Post a Comment