Tuesday 29 March 2016

துளி.





கடற்காற்றில்
தனது  முட்களால் துளையிட்டபடி
காலத்தைத் தைத்துக்கொண்டு
ஒரு சப்பாத்திக்கள்ளி
வெய்யிலைக் குடித்து
தரையில் நிழல் சிந்தியது.

கடலில் விழுந்து
கசங்கிய வெய்யில்
பொன்னிறச் சேலைக்குள்
செம்மீன் பிடித்த அழகை
கண்மீன்  விழுங்கியது.

செருப்பே அணிந்தறியாத
பூட்டனின் தடம் கிடந்து காயும்
இன்னும் வெய்யில் மேயும்
மேற்குக்கரை வீதிதான்
அந்திப்பொழுது தேரேறியோடும்
இராஜவீதி.


கடலுக்குள் விழுந்த
இருட்டும் வெளிச்சமும்
பிசைந்த
குண்டுமணிப் பொழுதுகள்
மனதுக்குள் இன்னும் உருளுகின்றன.


மனதில்
பாறைகள் அமர்ந்து கொல்லும்
வாழ்வின் ஒருநொடியையேனும்
மேற்குக்கரைப் பாறையில் மோதவிடு
உப்புக்கரிக்காத தண்ணீர் ஊறும்.
                                                                                 -சிவம்.

No comments:

Post a Comment