மரியாதை.
திரு ஏகாம்பரம் சண்முகலிங்கம்.
மலர்வு : 4 ஒக்ரோபர் 1956 — உதிர்வு : 25 ஓகஸ்ட் 2016
முதுகெலும்பால் மண்ணைக்கிளறும் உழைப்பு என்ற பிரமிக்கவைக்கும் ஆற்றல்கொண்ட ஊர்ப்பெருங்கமக்காரர்களில் இந்த மனிதர் மிகவும் மரியாதைக்குரியவர்.
கத்தரிப்பூ!
இருள் மூடிவைத்த பின்னிரவில்
பனி பொட்டுவைத்த புல் நுனியில்
பாதம் வைத்து நடந்ததுபோல்
நினைவில்
நெஞ்சமெல்லாம் ஈரமடா.
வேலங்குளக் கரையோரம்
வடக்கு வைத்த வரப்போரம்
கிடைச்சிக்குள்ள வளர்ந்த நெல்லாய்
உழைப்பில் நீ
இளைத்து வைத்த ஆரமடா.
இறைத்துவிட்ட தண்ணிக்குள்ளே
விழுந்தழுது வியர்வையெல்லாம்
உன்வேரைத் தேடிவர- நீ
வானவில்லாய் வானுழுதால்
மேகத்திற்கும் பாரமடா.
உழைப்பு, பிரயாசை, ஊக்கம் நீ
கொட்டப்பெட்டி வெத்திலையாய்
உன் மனதை மடித்துவைத்தாய்.
உயரத்தில் குடும்பத்தை
நீதானே பிடித்துவைத்தாய்.
வேகம் போகுதென்பார்.
விடிகாலை போகுதென்பார்.
கருக்கலிலே கைவிளக்காய் நிமிர்ந்திருப்பாய்.
உன்தோட்டம் கத்தரிப்பூ பூத்திருக்கும்.
உள்ளங்கை உழைப்புக் காய் காய்த்திருக்கும்.
பொத்தல் விழுந்த பட்டினிக் கூரை
வாழ்ந்த பொழுது முழுக்க வேய்ந்து முடித்தாய்.
ஓய்வுக்குள்ளே கொஞ்ச நேரம் ஒதுங்கும் முன்னே
மரணத்துள்ளே
ஏனோ நீ விழுந்து துடித்தாய்.
வடக்கு அம்மன் ஆலம்விழுதின்
நிழல் முழுக்க நினைந்திருப்பாய்.
மணற்காட்டு நன்னீர் ஊற்றாய்
மனம் முழுக்க நனைந்திருப்பாய்.
பெரிதுயர்ந்த கமக்காரனே!
உழைத்துக் களைத்து
உறங்கிப்போனாய்.
நிரந்தரமாய் ஓய்வுக்கடலில்
இறங்கிப்போனாய்.
ஆழமாய்
அழகாய்
ஒரு முத்தாகி
உறங்கு.
-ஊர்மக்கள்.
No comments:
Post a Comment