Wednesday 23 August 2017

நிழலும் நிலமும்.



நிழலும் நிலமும்.

சுடுமணல் தாங்காப் பாதம்
மரமில்லையென்றால் வேகும்.
புத்திக்கும் பக்திக்கும்  விதை போடு.
புத்திக்குள் வளரும் பெரும் காடு.
மூச்சுக்கும் காற்றுக்கும் மரம் வேண்டும்.
மனதுக்கும் மரமொன்று நடவேண்டும்.
சுற்றிக் கடல் சூழ்ந்திருக்கும் பூமியிது
ஆழக்கடல் அள்ளிச் செய்த சாமியிது.
பச்சிலையைக் கட்டிக் கொஞ்சம் ஆறவிடு.
பாலாற்றில் தேன் சுனையா ஓடவிடு.
மரங்களை நீ நட்டுவைச்சா
பேரப்பிள்ளை நிழல் குடிப்பான்.
மரங்களை நீ சாய்த்து விட்டா
உன் பிள்ளை மூச்சடைப்பான்.
கடலும்தான் தன் மடியில்
மரத்தோட்டம் வைச்சிருக்கு.
காவலுக்கு கரையை வைத்து
உன் நிலத்தைச் தைச்சிருக்கு.
கடற்காத்து மேச்சலுக்கு
இலை பார்த்து மரத்தை நடு.
காலம் உன்னை மேயும் முன்னே
ஆழம் பார்த்து வேரை விடு.
உன்னைச் சுமக்கும் மண்ணுக்கு
ஒரு மரமேனும் நட்டுவிடு.
மண்ணைச் சுமக்கும் மரத்திற்கு
உயிரைத் துளியாய் விட்டுவிடு

- சிவம்.

 அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் நிற்கின்ற விருட்சங்களான அரச மரம் மலை வேம்பு இலுப்பை மரம் போன்றவை   1985ம் ஆண்டு திரு.த.திருநீலகண்டன் அவர்களால் நடப்பட்டவை என்ற இந்த இன்றைய தேவை கருதிய   பதிவானது பார்ப்பவர்களின் மனதில் காலம் தருணம் பார்த்து செய்யும் செயல்கள் எதிர்காலத்தில் எப்படி வளர்ந்து உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உண்டாக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வருடம் இம்மரங்களின் கீழ் நிழலாறிய  உள்ளங்கள் ஊர் நிறை மரங்களை நடவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகும்.
32 வருடங்களுக்கு முன்பாக தொலைநோக்கோடு இம்மரங்களை ஆலய முன்றலில் நட்டுவைத்த
திரு.த. திருநீலகண்டன் அவர்களுக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
 படங்கள்: திரு.த.கோகுலராஜ்.

















No comments:

Post a Comment