Monday 27 May 2024

தீக்கோளப் பாறை.



தீக்கோளப் பாறை.
வெய்யில் சுடுகிறது என்ற உணர்வே அறியாத சனங்களால் நிரம்பிய ஒரு புற்தரை கடல் நடுவில் முளைத்து நீந்திக் கொண்டிருந்ததாய் நான் உணர்ந்திருந்த காலமது. மண்ணை நம்பிய உழைப்பைத்தவிர வேறு எதுவும் அறியாத இரும்பு வலுவோடும், பட்டுப் பூச்சியின் மனதோடும் மனிச வாழ்வு உச்சத்தில் இருந்ததாய் இன்று நான் நம்பும் பொற்காலம் அது.
மண்ணை நம்பியவர்கள் மண்ணுக்குச் சொந்தக்காரனாய் ஒரு தெய்வத்தை நம்பிக்கை என்ற சொல்லைத் தாண்டியும்
ஒரு வார்த்தைக்குள் பிடிபடாத அன்புத் தொல்லையோடு நம்பினார்கள்.
கூழாவடியான் என்றும், குல தெய்வம் என்றும், எங்கள் ஐயனார் என்றும் திருவிழாக்களால் கொண்டாடித் தீர்த்தார்கள்.
பெருந் திருத்தேர் செய்தார்கள்.
வீதியின் தென்மேற்கு மூலையை கிடுகுத் தட்டிகளால் மூடி எங்கள் சிறு பராயத்தின் மேல் கலைகளாகவும், கலாசாரமாகவும், பொது அறிவாகவும் திறந்துவிட்டு எங்களுக்கு சுவாசிக்க கற்றுக் கொடுத்தார்கள்.
இன்று வரையான உயிர் மூச்சு நினைவுகளில் நனைந்தபடி இன்னும் ஈரமாகவே காலத்தையும் வாழ்வையும் இதமானதாகவே நகர்த்துகிறது.
தவில் வித்துவான் இசை மேதை தட்ஷணாமூர்த்தியைக் கூட்டிவந்து கொண்டாடிக் குதூகலித்த வயதானவர்களை
வியப்போடு பார்த்த வயது அது. இசையின் தார்ப்பரியங்கள் புரியத் தொடங்கிபோது அவர்களின்
மீதான மரியாதை இசை மேதைகளுக்குரியதாகவே மாறியது.
சின்ன மேளம் என்ற ஒரு ஆட்டம் நடந்ததை பொக்கை வாய்க் கிழவர்களின் வெற்றிலைத் துப்பலைப்போல் காலம் துப்பித் தீர்த்துவிட்டது என்பது இன்றுள்ள சந்ததிக்கு ஆறதலான விடயமாவே இருந்துவிட்டுப் போகட்டும்.
நடிகமணி வைரமுத்துவின் அரிச்சந்திரன் நாடகம் உண்மை பேசக் கற்றுக்கொடுத்தது.அந்த விடியாத பொழுதுகளில் பார்த்த நடிப்பு, புலராத பொழுதொன்றில் புழுதி ஒட்டிய விடியலை அறிமுகப்படுத்தியது. அந்த நாடக இரவுகளில் இளசுகள் சில்லறைகளை, சில நாணயங்களை தொலைத்து விடுவதும் தேடி எடுத்தவர்கள் கண்டெடுத்தவர்கள் என
காதலாகிக் கசிந்து போவதும் அன்றைய காலத்து அனலைதீவின் சினிமாக்கள்தான். சின்னத் திரைகள்தான்.
மயான காண்டம் நாடகத்தில் மேடையில் பார்வையாளருக்கு முதுகைக் காட்டக்கூடாது என ஒவ்வொரு காட்சியிலும் பின்னோக்கி நடந்து போன நடிகமணி வைரமுத்து கற்றுக்கொடுத்த மரியாதையை இன்றைய சந்ததியினர் ஐயனார் கோவில் வீதிகளில் இன்றும் தேடினால் கண்டடையலாம்.
ஆணவம், திமிர், அகங்காரம், அதிகாரம் இல்லாத அன்றைய திரு வீதிகளில் மனிதர்கள் வலம் வந்தார்கள்.
வாகனசாலையென்பது குதிரை, யானை, பத்துத்தலை இராவணன் காலடியில் அரைத் தூக்கம் கொள்ளுகின்ற ஒரு கனவுச்சாலை. தீவட்டிக் கரியெடுத்து தூங்குபவனை வீரனாக மீசை வைத்து எழுப்பிவிட்டு சிரிப்புகளால் நிரம்பி வழிந்த நினைவுகள் இன்றைய சந்ததியினருக்கு இல்லை.
ஆலயங்கள் நிறுவன மயமாகி கட்டுப்பாடுகளால் இடிந்து போயின. சுமைகள் இல்லாத பரிபாலனத்தை நிர்வாக அடிப்படையே புரியாத தனி நபர்கள் சமூகத்தின்மேல் சுமத்துகிறார்கள்.
சங்கிலியன், வெடியரசன் நாடகங்கள் அன்றைய இளையவர்களுக்கு பிடித்தமான வடிவத்தில் நேரத்தின் பெறுமதியை கிராமங்களுக்கு அறிமுகப்படுத்தின. வரலாறுகளை மேடையில் வாள் வீசிகின்ற சத்தத்தோடு காற்றுவெளியில் கீறிப் புதைத்ததை இன்றுவரை எமது வயதொத்தவர்கள் தோண்டியெடுத்து வாசித்துக் கொள்கிறோம்.
பழமையும், பெருமையும், அடையாளமுமான அனலைதீவு ஐயனார் ஆலயம் அதன் முதன்மைக் காலத்தை சாட்சியப்படுத்தும் வயதானவர்களின் அனுபவங்களை, நீங்காத நினைவுகளை, வரலாறுகளை ஐயனாரின் இராஜ வீதிகளில் நின்றபடி, கூழா மரத்தடியில் உட்கார்ந்தபடி, நாடகக் கொட்டகையான தென்மேற்கு மூலையில் ஒரு கலைவடிவத்தை கூறியபடி, வாகன சாலயில் மர வாகனங்களை கலையை உயிர்ப்பித்தபடி, தெற்கு வாசலில் இளனி கிராந்திய பற்களை இழந்த பழைய மனிதர்களின் நினைவுகளை உறிஞ்சியபடி, ஆலய மர வேலைகளை பரம்பரையாக நேர்த்தியாகச் செய்து வரலாறுகளை கூரைபேட்டு பாதுகாத்த ஆசாரிகளை உளியோடு ஒரு இடத்தில் கெளரவப்படுத்தியபடி, பெருந் திருத்தேருக்கு வலிமை வாய்ந்த மரங்களை காடுகளுக்குள் சென்று வெட்டிச் சுமந்து அன்றைய வாகன வசதிகளோடு ஊர்வரை கொண்டுவந்து சேர்த்த இரும்பு மனிதர்களை நினைவுகொண்டபடி, கலைப் பொக்கிஷங்களான இந்திய ஸ்தபதியார்களை நினைவுகொண்டு பெருமைப்படுத்தியபடி
ஐயனாரை சாத்துப்படியால் அடியவர்களின் மனதில் பச்சைகுத்திய மகா கலைஞனை சொற்களால் அலங்கரித்தபடி, கொடிமரத்தில் வைத்தியநாதக் குருக்களின் பெயரால் ஒரு நூல் சாத்தியபடி
ஒரு வரலாற்றுப்பதிவை, ஆவணத்தை பதிவு செய்யாமலே ஐயனார் ஆலயம் தரைமட்டமாக இடிக்கப்பட்டுவிட்டது.
வரலாறுகள் நடமாடிய அந்த இராஜ வீதிகள் இன்று களவு போயின.
மனிதர்களைத் தேடுகின்றன.
வானம் பறப்பதற்கானது என்ற புரிதலை பறவைகள் மறந்து கூடுகள் வசதியானவை என சந்தோசிக்கின்றன.
காடுகளை வளர்ப்பது யார்?
-சிவம்.
நிழற்பட நன்றி: Analai Express


 

No comments:

Post a Comment