Wednesday 8 May 2024

முன்வாருங்கள்.







ஐயனாரின் திருக்கோவிலைக் காலாகாலத்திற்குமான உறுதிப்பாட்டுடன் திருத்தியமைக்க வேண்டுமென்ற பேராவலில் கருங் கல்லினால் கோவிலைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமையான கருத்துகளோடு ஒற்றுமையான, வெளிப்படையான, கருத்தாடல்கள் தவிர்க்கப்பட்டு தனி நபர்களின் தன்னிச்சையான முடிவுகளால் எந்த தவிதமான அடிப்படை முன்னேற்பாடுகள் எதுவுமற்ற நிலையில் அனலைதீவு ஐயனார் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் பேசாதிருப்பது என்பது நடந்துள்ள தவறைவிட மோசமானது என்பதை சூழ்நிலை கருதி காலம் நிர்ப்பந்திக்கிறது.
நாம் எல்லோரும் நமது காவல் தெய்வத்தின் கோவிலைப் புதுப் பொலிவோடு விரைவாக நேர்த்தியாக கட்டித் திருப்பணியை நிறைவேற்ற எல்லா வழிகளிலும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக, நிபந்தனைகளற்ற விட்டுக் கொடுப்புகளுடனும், நாமனைவரும் ஊரவர்களும் உறவுகளும் என்ற மனப்பாங்குடனும் பங்காற்றுவோம். மாபெருந் திருப்பணிக்கான குறைந்தபட்ச முன்னேற்பாடுகளையோ, வங்கிக்கணக்கின் நிதிநிலை உத்தரவாதத்தையோ (வாய்வழி மற்றும் எழுத்து மூலமான உறுதிப்பாடுகள் பயனற்றவை.அவை அளவுகோலாகவே பயன்படும்.)உறுதிப்படுத்தாமல் எடுக்கப்பட்ட முடிவிற்கான பொறுப்பினை நாம் அனைவரும் புரிந்துகொண்டு வருங்காலத்திற்கான திட்டமிடல்களில், நிதி நிலைகளில் பொறுப்போடு செயலாற்றுவோம்.
ஊர் சார்ந்த ஊரின் பெயர் கொண்ட எல்லா அமைப்புகளும் ஐயனின் திருப்பணியில் நிர்வாக ரீதியாக வெளிப்படையாக தமது கடமையை முன்னின்று செய்யவேண்டும்.
ஊர் சார்ந்த ஊரின் பெயர் கொண்ட அமைப்புகள் தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நிர்வாக ரீதியாக வெளிப்படுத்தாத நிலை அவர்களின் ஊர்மீதான கோவில்மீதான மானசீகமான உணர்வுகளை பலவீனப்படுத்துகிறது. இன்றைய நிலைமையை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் இனம்புரியாக ஏக்கத்தின் ஆழத்தை உணர்ந்து அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகள் தமது கடமையைச் செய்யவேண்டும்.
நம்பிக்கையோடும், வாழ்வின் அடிப்படையாகவும் கூடிக் கொண்டாடித் தீர்த்த நம் எல்லோரதும் அடையாளம் கம்பீரமாக மேலெழுந்து நிற்கவேண்டும்.
நியாயத்திற்கான குரல்கள், நெறிமுறைக்கான கோரிக்கைகள், அறச்சீற்றங்கள், அன்பான ஆலோசனைகள், அதிகார அறிவுறுத்தல்கள் எல்லாவிதமான செழுமைப் படுத்தல்களும் அவசியமானவை. இவை யாவும் பெருந்திருப்பணியின் அத்திவாரங்களாகும். திருப்பணிக்கான காலத்தின் நீட்சியானது எந்த அடிப்படையிலும் ஏற்புடையதன்று.
மேற்கூறிய கருத்துகளில் உடன்பாடு உடையவர்கள் அனைவரும் நமக்கான வரலாற்றுக் கடமையை நிறைவு செய்ய முன்வாருங்கள்.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா..

நன்றி:Analaitivu Iyanar Heritage Society of Canada












 

No comments:

Post a Comment