Thursday, 9 January 2014

விடமுண்ட கண்டர்கள்.

விடமுண்ட கண்டர்கள்.
-வடபுலத்தான்
நல்ல மீனைச் சாப்பிட்டு நாட்கள் பலவாயிற்றுஎன்று சப்புக்கொட்டிக் கொண்டு வந்தார்    ஒருவர்.

ஏன்? நல்ல மீனில்லாமல் நாறல் மீனா உமக்கு கிடைச்சிருக்கு?“ என்று கேட்டேன்.

'ஐயா வாயைக்கிண்டி வயிற்றிலே நெருப்பைக் கொட்டாதீர்கள்என்றார் அந்த நண்பர்.

'ஐயா விசயத்தை விளக்கமாகச் சொல்லுங்கள் நல்ல மீனுக்கெல்லாம் என்ன நடந்தது?'

அவர் சொன்னார் -

கடலால் சூழப்பட்டிருக்கிறோம். கடற்கரைக்குப் பக்கத்தில் இருக்கிறோம். ஐஸ் அடிச்ச மீனைத்தான் சாப்பிட வேண்டியிருக்கு.

ஐஸ் அடிக்கிற மீனைச் சாப்பிடுவது ஒரு பாஷனா போச்சு. இப்ப கடலிலிருந்து கரையேறவே கரையில் ஐஸ்பெட்டியுடன் காவலிருக்கிறார்கள். ஆனால், மீனை விற்கும்போது மட்டும் உடன் மீன், துடிக்கத் துடிக்கத் தூண்டிலில் இருந்து எடுத்தது என்கிறார்கள்'.

ஐயா! மீனுக்கு மட்டுமா இந்தக் கெதி? பிஞ்சு வாழைக் குலைக்கு, மாங்காய்க்கு, பப்பாசிக்காய்க்கு என்று எல்லாவற்றையும் மருந்து அடித்துத்தானே பழுக்க வைக்கிறார்கள்?“ என்றேன்.

பிஞ்சிலே காய்கள் மட்டும் பழக்கவில்லை. அல்லது நம்மட
  பெடியள் மட்டும் பழுக்கவில்லை. நம்முடைய சனங்களே பழுத்துவிட்டார்கள். அதாவது எங்களுடைய சமூகமே பிஞ்சிலே பழுத்த ஒன்றாகி விட்டது.

அது மீனை விடத்தான் நாறிக்கிடக்கிறது. இல்லை என்றால் எப்படி ஐயா, ஒரு சிறு வெற்றியைக் கூட தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளாமல் அது அரசியலில் சோடைபோயிருக்கிறது.

பண்பாட்டிலோ தலைகீழாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இல்லையென்றால் உள்ளுரிலேயே விளைந்த காய்கறிகளை வாங்குவதற்கு பயமாக இருக்குமா?

ஏனென்றால், “பயிர் வளர்க்க வேண்டுமென்றால் இரசாயனத்தை (விசத்தை) கையிலெடுக்க வேணும்என்று ஒவ்வொரு தோட்டக்காரரும் தங்கள் மனதில் எழுதிவைத்திருக்கிறார்கள்.

இதனால், வளரும் பயிரெல்லாம் விசப் பயிர்களாகவே விளைகின்றன.

விசத்தை விதைத்து விசத்தையே உண்ணும் மனிதர்களாகி விட்டோம். (விடமுண்ட கண்டர்கள்)

இந்த லட்சணத்தில் தான் இருக்கின்றது. நமது விவசாயப் பாரம்பரியமும், கடற்றொழில் பண்பாடும்.

இதை மாற்றி நல்ல வழி திறப்பது யாரோ?

வந்திருக்கும் வடக்கு மாகாண கடற்றொழில் . விவசாய, அமைச்சுகள் கூட இதில் பாராமுகமாகவே இருக்கின்றன.

வேலை விளங்காத ஒரு வெங்கிழாந்தி எங்கேயாவது ஒரு கட்டுரையை அல்லது குறிப்பை இயற்கையோடு சம்பந்தப்பட்ட உணவைப் பற்றியும், பயிரிடும் முறை பற்றியும் எழுதும்.

ஆனால், அதை எவருமே கணக்கில் எடுப்பது இல்லை.

இந்தக் குறிப்பும் அப்படி கணக்கில் எடுக்காமல் தள்ளப்படலாம்.

ஆனால், விசம் என்பதும் கழிவு என்பதும் பழுது என்பதும் மூடி மறைக்ககூடிய சங்கதிகள் அல்ல.

விசம் எப்போதும் விசம்தான் கழிவு என்றைக்கும் கழிவுதான், பழுது எங்கேயும் பழுதுதான்.

நாறல் மீனை ஒருபொழுதும் நல்ல மீன் ஆக்க முடியாது.

ஆகவே, கடலோடு வாழும் நாங்கள் கடலின் சுவை மாறாத மீனைப்பெற வேண்டும். வயலோடும் தோட்டப் பயிரோடும் வாழுகின்ற நம்
  சந்ததி மண்ணின் மணம் கமழும் காயையும் பழத்தையும் தின்ன வேண்டும்.

அதாவது, விசம் நீங்கிய வாழ்வொன்றைப் பெற வேண்டும்.

அது கிடைக்குமா?

 நன்றி. தேனி.


No comments:

Post a Comment