Saturday, 10 February 2018

அன்பே ஆயுதம்.







.
அறிவு!
மனிதகுல மாண்பும், சுபீட்ஷமும், விடுதலையும்  அறிவுதான்.
வாழ்வில் நம்மைக் கட்டிப்போடும் எல்லா விலங்கிற்கும் திறவுகோல் அறிவுதான்.
கோபுரம் கட்டினால் கை எடுத்துக் கும்பிடாது போனாலும் கல்லெடுத்து எறியாத ஒரு சமூகத்தை உருவாக்காமல் அல்லது உருவாக்கத் தவறும் எந்த முயற்சிகளும் பயனற்றவை.
மரங்களை நடுவதிலும் பார்க்க முக்கியமானது மரங்களை வெட்டி வீழ்த்த எண்ணங்கொள்ளாத, மரங்களின் அவசியத்தை அறிந்துணர்ந்த சமூகத்தை உருவாக்குவதாகும்.
அறிவாற்றல் மிகுந்த எதிர்காலச் சமுதாயத்தை கட்டியெழுப்ப நாமெல்லோரும் ஒன்றிணைந்து  செயற்படுவோம்.
கல்விசார் சமூகப் பணிகளில் அதிக கவனம்செலுத்தி அறிவார்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம்.
எண்ணங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.





.
ஆற்றல்.
கல்வியால் அனுபவத்தால் பெற்ற அறிவை உருவாக்கமாக வெளிக்கொண்டுவர ஆற்றல் இன்றிமையாதது.
நமது சமூகத்தின் சமகால பலவீனமான மந்தநிலை வாழ்சூழலுக்கு தனிமனித ஆற்றலை மேம்படுத்தும்  சந்தர்ப்பங்கள்
வெகு குறைவாகவும் கவனிப்பற்றதாகவும் உள்ளதே  முக்கிய காரணமெனலாம். மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் உள்ள தனித்திறமைகளை ஆற்றல்களை கண்டறிந்து அவற்றை ஊக்குவித்து அவர்களுக்கு விருப்பமான துறையில் தத்தமது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படவேண்டும்.










.
இயற்கை.
நமது பசுமை போர்த்திய அழகிய தீவகத்தின் புவிசார் அமைவு இயற்கையைப் பேணிப் பாதுகாத்து இயற்கையோடு இணைந்து நமது வாழ்வையும் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வையும் மேம்படுத்த தொடர்ச்சியான இயற்கையை ஆராதிக்கும் செயற்பாடுகளை வேண்டி நிற்கிறது. மரங்களை தயவுதாட்ஷண்யமின்றி எந்தவித தூரநோக்கு சிந்தனையுமின்றி ஒரு மரத்தின் வயது பயன்பாடு அருமை பெருமை எதுவுமறியாது வெட்டி வீழ்த்தும் மனநிலைகொண்ட இன்றைய அவலநிலை மாற்றப்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமல் மரங்களை நட்டுவளர்த்தல் முழுமையான  இயற்கைப் பாதுகாப்பை உறுதிசெய்யாது என்பதால் அனலைதீவின் இயற்கையை பேணி வளர்க்கும் பணி பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்ப்படவேண்டும்.
மின்சாரத் தொடுப்புகளுக்காக பெரிதுயர்ந்த மரங்களை வெட்டிவீழ்த்தி எதிர்காலத்தின்மீது இருள் குவிக்கும் நடைமுறையை மின்சாரசபை நிர்வாகம் மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் அரச அதிகாரிகள்  மீளாய்வுகளினூடாக படிப்படியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.


நமது ஊரில் இற்றுப்போகும் தன்மைகொண்ட செழுமையான குப்பைகள் எரிக்கப்படாமல் அவற்றை இயந்திர உதவியுடன் அரைத்து இயற்கை உரம் தயாரித்து மண்ணை  எப்போதும் உயிர்புடன் பாதுகாக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது அவசியமாகும்.
அனலைதீவின் இயற்கைக் கொடைகளான பனை,  தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் பயன்பாட்டை நெறிப்படுத்திய உற்பத்திப்பொருட்களாக்கும் முயற்சிகளினூடாக இயற்கையின் பயன்பாடு முக்கியப்படுத்தப்படவேண்டும்.

தீவக கடல் வளத்தின் இயற்கை அரணாக விளங்கும் அனலைதீவின் கடல் வளம் பற்றிய அறவுட்டலுடன் பாரம்பரிய கடல் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
கடல்வளத்தை அழித்தொழிக்கும் இழுவை விசைப்படகுகளின் நமது கரையை அண்டிய வருகை நிறுத்தப்பட்டு நமது கடல் வளம் பாதுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.


நமது கடற்கரைகளின் கடலரிப்பையும் ஊருக்குள் கடல்நீர் வரும் அவலநிலையையும் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.





 
கடல் சூழ் அனலைதீவின் நீர்வளம் இயற்கை நமக்கு அருளித் தந்த பெருங்கொடையாகும்.
குளங்களும் பனை மரங்களும் நில மட்டதிற்கு கீழ் காணப்படும் மக்கி மற்றும்  கொழுக்கிக் கற்கள் போன்றன நிலத்தடி நீர் வளத்தை பேணுவதில் கணிசமான அளவில் பங்கேற்கின்றன. பனை மரங்களைப் பேணிப் பாதுகாப்பதும்
புதிதாக பனைமரங்களை நடுவதும் விருட்சங்களை நட்டு வளர்ப்பதும் நமது பூமியை ஈரமாக வைத்திருக்க நாம் செய்யவேண்டிய கடமைகளாகும். குளங்களை அகலப்படுத்தலும் கரைகளைக் கட்டுதலும் மேம்பாடான அபிவிருத்தித் திட்டங்களாக அமையும்.
மேற்குக் கரைத் தீக்கோளப் பாறைகளின்மேல் அலைகள்  மோதும் ஈரம் மெல்லெனக் கரையைத் தின்னுகின்றது.
வரமுன்காப்போனாக உரிய பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயமாகும்.





.
உழைப்பு.
நமது ஊரின் வனப்பே மக்களின் உழைப்புத்தான். கரைகளைப் பூக்கவைக்கும் கட்டுமரங்களும் காத்திருந்து உயிர் கொதிக்கும் அனுபவப் பெரிசுகளுமாய் உழைத்து வாழ்ந்த கரை இப்போது இழைப்பாறித்தான் கிடக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள வளங்களை அடையாளம் தெரியாமலே காலம் நம்மைக் கடத்திச்செல்கிறது. இந்நிலை மாறவேண்டும்.
தோட்டக் காலங்களில் வெய்யில் நனைய வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள் நம் மக்கள். இன்றைய கால சோம்பேறித்தனங்களையும் மேவி உழைப்பு இன்னும் நம் மண்ணை வனப்படுத்தியும் வளப்படுத்தியும் உயிரோட்டமாகவே வைத்திருக்கிறது. மீண்டும் நம் மூதாதையர்களின் உழைப்பையும் மண்ணையும் நம்பி  வாழும் வாழ்க்கை சிறக்க வேண்டும். உழைப்பு என்பது நம்
ஊருக்கான குணம்.





ஊ.

ஊதியம்.
ஊரிலுள்ள அனைவரும் ஏதோ ஒரு தொழில் வாய்ப்பில் ஊதியம் ஈட்டி குடும்ப வாழ்வில் இடர் இல்லாத சுபீட்சமான வாழ்வை வாழ ஊர் வளங்களை அடிப்படையாகக் கொண்டதொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ச்சியான வருவாயைத் தரக்கூடிய வகையில் பரிபாலிக்கப்படவேண்டும். மருத நிலமும் நெய்தல் நிலமும் ஒருங்கே கொண்ட நமது பூமி நிறைய   வளங்களையும் வேலை வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளும் நிர்வாக ஆளுமை வளர்த்தெடுக்கப்படவேண்டும்.






.
எழில்.
நெற் பயிரின் மேல் கடற்காற்று வயல்வெளியில் வகுடெடுத்து  மேயும் அழகும் அலையின் நுரையா கடலின் நரையா என ஆர்ப்பரித்து நம் நினைவுகளைத் தாலாட்டும் நீலவண்ணக் கடலழகும் கொள்ளை இன்பம் கோடி தரும்.
நிமிர்ந்து நிற்கும் பனைகளும் தென்னைகளும்  விரட்சங்களும் ஆலயங்களும் கோபுர அழகும் நமக்குப் பெருமை தருபவை.இந்தப் பேரழகை பாதுகாத்து வளப்படுத்தி அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.







.
ஏழ்மை இல்லாத சுபீட்ஷமான ஆரோக்கிமான ஒரு சமூகமாக நமது மக்கள் வாழவேண்டும். நமது புண்ணிய பூமியில் வாழும் அனைத்து மக்களும் உழைப்பால் உயர்ந்து எப்போதும் உன்னத நிலையில் வாழவேண்டும்.
ஏர் சுமந்த தோள்கள் வலியவை. வறண்ட வறுமையையும்  முளைக்க வைக்கத்தெரிந்த மனிதர்கள் வாழ்ந்த பூமி.
இனியும் தளைக்கவேண்டும்.








.
ஐயனார் கோவில் அனலைதீவு மக்களின்  உயிரோடு கலந்த முதன்மையான அடையாளம்.
தீவகற்பத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நமக்கு வாழ்க்கையை ஐயனார் கோவில் முகப்பு வழியாகத்தான் கற்றுத்தந்தார்கள். ஐயனார் கோவில் பரிபாலனம் நமது ஊர் மக்களின் எல்லாவிதமான வாழ்வியலோடும் சம்பந்தப்பட்டதாக அமையவேண்டியது கட்டாயமாகும்.இனிவரும் காலம்  முன்னேற்றப் பாதையில் தொடரவேண்டும்.
நம் எல்லோருடைய உள் மனதிலும்  ஏற்றமுற வியாபித்திருக்கும் ஐயனார் கோவிலினுடைய ஆழமான தொடர்பை புறந்தள்ளி நமது மக்களிடையே எந்தவொரு மாற்றத்தையும் வளர்முகத்தையும் உண்டுபண்ணிவிடமுடியாது என்பதை
புரிந்துகொள்வது ஊரின் பொதுப்பணிகளில் ஈடுபடும் எவருக்கும் அடிப்படையான அறிவாக இருப்பது முக்கியமானதாகும்.

















.
ஒற்றுமை.
ஒற்றுமையே பலம்.
அனலைதீவு மக்களனைவரும் மதங்களையும் வேறுபாடுகளையும் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்துவரும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். கருத்துக்களையும் சில நிர்வாகத் தவறுகளையும் பேசித் தீர்த்துக்கொள்ளும் பண்பு
இன்றுவரை நம்பிக்கை தரும் வழிமுறையாகவே தொடர்கிறது. ஒற்றுமையான சமூகம் பலமான எதிர்காலத்திற்கான அத்திவாரமாதலால் தொடர்ந்து ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தவெண்டும்.








.
ஓதுவார்.
அதிகமான ஆலயங்களை தன்னகத்தே கொண்ட நமது ஊர் தற்போதும் எதிர்காலத்திலும் ஆலயங்களில் தேவாரங்களைப் பாடக்கூடிய  அடியவர்கள் அருகிவரும் கண்ணுக்குத் தெரியாக ஒரு பின்னடைவை எதிர்கொள்கிறது.
முக்கியமான இந்த விடயத்தை  மனோன்மணி அம்பாள் ஆலயம் பல ஆண்டுகளாக அறநெறிப்பாடசாலையினூடாக நிவர்த்திசெய்யும் செயற்பாட்டை வரவேற்கவேண்டும். இதனை முன்மாதிரியாகக்கொண்டு எல்லா ஆலயங்களிலும் சிறுவர்களுக்கு அறநெறிப்பாடசாலையினூடாக சைவ நெறிகளை கற்பிக்கும் முக்கிய கடமையை உணர்ந்து செயற்படவேண்டும்.




ஒள.
ஒளடதம்.
உணவே மருந்து.
உணர்வும் மருந்தே.
அனலைதீவில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் அனலைதீவு மக்களுக்குமிடையிலான புரிதலுடனான
பிணைப்பும், உணர்வுபூர்வமான உறவும் நமது ஊரின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமானவை. புலம்பெயர்வாசிகள் ஊரின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதும் ஊர்மக்கள் அவற்றை தமது பூரண ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதும், மதிப்புடன் ஊக்கப்படுத்துவதும் அவசியமான நடைமுறைகளாக அமையவேண்டும். இவற்றை இருதரப்பும் நெறியான முறையில் புரிந்துகொள்வதே நமத ஊரின் முன்னேற்றத்திற்கான அருமருந்தாக அமையும்.
1950களில்  வன்னிக்கும் 1970களில்  வெளிநாடுகளுக்கும் நமது ஊர் மக்கள் குடியெர்ந்து வாழ்ந்து பல தலைமுறைகளைக்கடந்து வாழ்கிறார்கள். “வந்தேறுகுடிகள்” என்ற வார்த்தை நமக்கும் பொருத்தமானதுதான்.
இந்த வார்த்தையை "உணர்ந்து" தவிர்க்கவேண்டும். காலம் மாறி எல்லாவற்றையும் மாற்றித்தான்விட்டது. நாம் உணரத்தான் மறுக்கிறோம். இன்னும் இருபது அல்லது ஐம்பது ஆண்டுகளில் அனலைதீவு எப்படி இருக்கும் என கணிப்பிட மறப்பதினாலேயே நம்மிடையே மீண்டும் தலைதூக்கமுனையும் பாகுபாடுகளின் எச்சசொச்சங்கள் நிமிரத் தலைப்படுகின்றன. இவற்றையும் "உணர்ந்து" தவிர்க்கவேண்டும். எனவே உணர்வு என்பது அதிமருந்தாகிறது.









.
அன்பே ஆயுதம்.




- அனலைதீவு கலாசார ஒன்றியம்.கனடா.
 படங்கள்: நன்றி: திரு.த.கோகுலராஜ்.
திரு. தமயந்தி

No comments:

Post a Comment